ஐபிஎல் 2026: ரோஹித் ஷர்மாவின் அதிரடியால் வெற்றியோடு சீசனைத் தொடங்கியது மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (மார்ச் 29) மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
இதில் கேகேஆர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி இருவரும் அரைசதம் அடித்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த இலக்கை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் சேஸ் செய்தது. ரோஹித் ஷர்மா மற்றும் ரியான் ரிக்கில்டன் ஆகியோர் அந்த அணிக்காக அரைசதம் அடித்தார்கள்.
அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய கேகேஆர்

பட மூலாதாரம், Getty Images
யார் கேகேஆர் ஓப்பனராக ஆடுவார்கள் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஃபின் ஆலன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் முதல் ஓவர் முதலே அதிரடியாக ஆடினார்கள்.
முதல் இரண்டு ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் வந்திருந்த நிலையில் மூன்றாவது ஓவரிலேயே ஸ்பெல்லை மாற்றினார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அல்லா கசன்ஃபர் வீசிய அந்த ஓவரில் ஃபின் ஆலன் 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடிக்க 17 ரன்கள் கிடைத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் ரஹானேவும் அதிரடியில் இணைய அந்த ஓவரில் 26 ரன்கள் வந்தது.
பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட, ஐந்து ஓவர்கள் முடிவிலேயே 68 ரன்கள் எடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியின் எந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும் ஒரு போட்டியில் கூட 50 ரன்களைக் கடக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே அதை நிகழ்த்திக் காட்டியது ரஹானே - ஆலன் இணை.
நைட் ரைடர்ஸுக்கு சவால் கொடுத்த ஷார்துல்
கேகேஆர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் ஷார்துல் தாக்கூர் ஆறாவது ஓவரை வீச வந்தார். இரண்டாவது பந்திலேயே 'ஆஃப் கட்டர்' பந்தை வீசி ஆலன் விக்கெட் வீழ்த்தினார் அவர். தான் வீசிய இரண்டாவது ஓவரில் கேமரூன் கிரீன் விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ந்து 'ஸ்லோயர் பால்கள்' வீசிக்கொண்டிருந்த ஷார்துல், பௌன்சர் வீச, அதை அடிக்க நினைத்து டீப் கவர் திசையில் அவுட் ஆனார் ஷார்துல்.
தன்னுடைய மூன்றாவது விக்கெட்டாக கொல்கத்தா கேப்டன் ரஹானேவின் விக்கெட்டையும் கைப்பற்றினார் அவர். 12-வது மற்றும் 13-வது ஓவர்களில் பும்ரா மற்றும் போல்ட் இருவரும் ரன் ரேட்டை சற்று வெகுவாகக் குறைக்க, அது ஏற்படுத்திய நெருக்கடியால் பெரிய ஷாட் அடித்து ஆட்டமிழந்தார் ரஹானே. அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ரஹானே கொல்கத்தா அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் இலகுவாக ஆடி பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தார். பும்ரா இந்தப் போட்டியில் வீசிய முதல் பந்தையும் கூட பவுண்டரிக்கு விளாசியிருந்தார் அவர். இந்த இன்னிங்ஸில் அவர் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார்.
மும்பைக்கு இலக்கு 221

பட மூலாதாரம், Getty Images
கடைசி கட்டத்தில் இளம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் இன்னிங்ஸை மெதுவாகத் தொடங்கியிருந்தாலும் போகப் போக அதிரடியை அதிகரித்தார். அல்லா கசன்ஃபார், ஷார்துல் தாக்கூர் ஆகியோர் ஓவர்களில் அதிரடியாக ஆடிய அவர், 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் சிக்கனமாகப் பந்துவீசி கொல்கத்தா அணியின் வேகத்தைக் குறைத்தார்கள். அதனால் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.
ரோஹித் - ரிக்கில்டன் அதிரடி

பட மூலாதாரம், Getty Images
221 என்ற இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கில்டன் இருவரும் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சில் இருக்கும் அனுபவமின்மையை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்கள்.
4.1 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்த மும்பை இந்தியன்ஸ், பவர்பிளேவில் மட்டும் 80 ரன்கள் சேர்த்தது. வைபவ் அரோரா, பிளெஸிங் முசர்பானி, கார்த்திக் தியாகி, வருண் சக்கரவர்த்தி என அனைவரின் பந்துவீச்சையும் மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர்கள் பவுண்டரிகளாக்கினார்கள்.
குறிப்பாக ரோஹித் ஆரம்ப கட்டத்திலேயே அதீத அதிரடியைக் கையில் எடுத்தார். ஆபத்தான பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் வருண் சக்கர்வர்த்தி வீசிய முதலிரு பந்துகளையுமே பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார் ரோஹித் ஷர்மா. பவர்பிளே முடியும்போது அவர் அரைசதமும் கடந்துவிட்டார். 23 பந்துகளிலேயே அவர் அந்த மைல்கல்லை எட்டினார்.
பவர்பிளே முடிந்த பிறகும் இந்த ஜோடியின் அதிரடி தொடர்ந்தது. அதன் காரணமாக 8.1 ஓவர்களிலேயே மும்பை அணி 100 ரன்களைக் கடந்தது. பவர்பிளேவுக்கு பிறகு தன் வேகத்தைக் கூட்டிய ரிக்கில்டன் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இந்த ஜோடி 11.5 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தது. 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா.
வெற்றியோடு தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் ஷர்மா அவுட்டானபோது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தேவைப்படும் ரன்ரேட் 9-கும் குறைவாக வந்துவிட்டது. 9 விக்கெட்டுகள் கையில் இருந்ததால் எப்படியும் அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது.
அதனால் நெருக்கடி இல்லாமல் அனைத்து பேட்டர்களும் ஆடினார்கள். ரிக்கில்டன் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா (18 ரன்கள்), நமன் திர் (5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸின் வெற்றியை உறுதி செய்தனர்.
2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் சீசனை இப்போது தான் வெற்றியோடு தொடங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
போட்டிக்குப் பின் யார் என்ன சொன்னார்கள்?
மும்பை இந்தியன்ஸ் வெற்றியில் பங்களித்த ரியன் ரிக்கில்டன், "இந்த இன்னிங்ஸ் மிகவும் நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் ஒரு வாரமாக சரியான பயிற்சி அமையவில்லை, ஆனால் பேட்டின் நடுப்பகுதியில் பந்து படுவதை உணர்வது சற்று சிறப்பானதாக இருந்தது. இந்தப் போட்டிக்கு வரும்போது சரியான ஃபார்மில் இல்லை. ஆனால் எனது ஆட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு வயது இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தது மகிழ்ச்சி. நான் அழுத்தத்தை உணர்ந்தேன், ஆனால் இன்னும் சுதந்திரமாக விளையாட விரும்புகிறேன்." என்று கூறினார்.
தோல்விக்குப் பிறகு பேசிய கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, "பந்துவீச்சாளர்களுக்கு இது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. அனுபவமில்லாத பந்துவீச்சு வரிசைதான். ஆனால் இந்த இளைஞர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்வார்கள். மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்ததாக நான் நினைக்கிறேன். எனவே எங்கள் பந்துவீச்சாளர்கள் நிச்சயமாகக் கற்றுக்கொள்வார்கள். விரைவில் கிரீன் பந்துவீசத் தொடங்குவார் என்று நம்புகிறேன். அப்போது அணியின் காம்பினேஷன் சற்று மாறும். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம், ஆனால் பந்துவீச்சிலும் அந்த சமநிலையைக் கண்டறிவது மிகவும் முக்கியம்." என்று கூறினார்.
கேப்டன்கள் டாஸில் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, "ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. வழக்கத்தை விட அதிக புற்களுடன் பசுமையாக இருப்பதால், அது எப்படி செயல்படுகிறது என்று பார்க்க விரும்புகிறோம். இது எங்களது கோட்டை, ஒட்டுமொத்த கூட்டமும் எங்களுக்கு ஆதரவளிக்க இங்கே கூடியுள்ளது. எனவே நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி அவர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். பும்ராவும் விளையாடப் போகிறார்." என்று கூறினார். ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், மிட்செல் சான்ட்னர் என பல கேப்டன்கள் தனக்குத் துணையாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். வான்கடே மைதானத்தில் இந்த அளவிற்கு புற்களை நான் பார்த்ததே இல்லை. போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகியிருக்கிறோம். கொல்கத்தாவிலும் மும்பையிலும் சில பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. மும்பை இந்தியன்ஸ் ஒரு சாம்பியன் அணி என்று எங்களுக்குத் தெரியும், அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அந்த அணியின் மோசமான வரலாற்றி பற்றிக் கேட்டபோது, "கடந்த காலத்தைப் பார்க்காமல், இந்த தருணத்தில் கவனம் செலுத்தி விளையாட விரும்புகிறோம்." என்று ரஹானே கூறினார்.
நேருக்கு நேர்
இதுவரை இவ்விரு அணிகளும் 35 போட்டிகளில் மோதியிருக்கின்றன. கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி அந்த 35 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 24-இல் வெற்றி பெற்றிருக்கிறது. கேகேஆர் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தாவை விட இரு மடங்குக்கும் அதிகமான போட்டிகளை வென்றிருக்கிறது மும்பை.
அதுவே இந்த அணிகள் வான்கடேவில் மோதிய போட்டிகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அது இன்னும் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது. ஸ்போர்ட்ஸ்டார் தரவுகளின்படி வான்கடேவில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் பத்தில் மும்பை இந்தியன்ஸே வென்றிருக்கிறது. இரண்டு போட்டிகளில் மட்டுமே நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது.
பிளேயிங் லெவன் & இம்பேக்ட் வீரர்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (கீப்பர்), ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, பிளெஸிங் முசர்பானி.
இம்பேக்ட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, தேஜஸ்வி சிங், ராவ்மன் பவல், சௌரப் தூபே, கார்த்திக் தியாகி.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கில்டன் (கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், நமன் தீர், ஷர்துல் தாக்கூர், மயாங்க் மார்க்கண்டே, அல்லா கசன்ஃபர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.
இம்பேக்ட் வீரர்கள்: சூர்யகுமார் யாதவ், கார்பின் பாஷ், ராபின் மின்ஸ், ராஜ் பவா, அஷ்வனி குமார்.
13 ஆண்டு சோகத்திற்கு மும்பை இந்தியன்ஸ் முடிவு கட்டுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை சீசனின் முதல் போட்டி என்றாலே அவர்களுக்கு சரியாகப் போகாது. 2013 முதல் 2026 வரை தொடர்ந்து 13 சீசன்களிலும் அந்தந்த சீசன்களின் முதல் போட்டிகளை அந்த அணி தோற்றிருக்கிறது.
2013 முதல் ஒவ்வொரு சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் ஆடிய முதல் ஆட்டத்தின் முடிவுகள்:
2013 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 ரன்களில் தோல்வி
2014 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 41 ரன்களில் தோல்வி
2015 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7 விக்கெட்டுகளில் தோல்வி
2016 vs ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் - 9 விக்கெட்டுகளில் தோல்வி
2017 vs ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் - 7 விக்கெட்டுகளில் தோல்வி
2018 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 1 விக்கெட்டில் தோல்வி
2019 vs டெல்லி கேபிட்டல்ஸ் - 37 ரன்களில் தோல்வி
2020 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 5 விக்கெட்டுகளில் தோல்வி
2021 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 விக்கெட்டுகளில் தோல்வி
2022 vs டெல்லி கேபிட்டல்ஸ் - 4 விக்கெட்டுகளில் தோல்வி
2023 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 விக்கெட்டுகளில் தோல்வி
2024 vs குஜராத் டைட்டன்ஸ் - 6 ரன்களில் தோல்வி
2025 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 விக்கெட்டுகளில் தோல்வி
































