'தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள்' என்ற அமித் ஷா வாக்குறுதியை ஏற்பதில் என்ன சிக்கல்? நீலகண்டன் பதில்

தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு

பட மூலாதாரம், ANI

இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை திருத்தியமைக்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியை தழுவியது.

இந்த மசோதாவின் ஆரம்ப நிலையிலிருந்தே எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகையின் அடிப்படையில் திருத்தியமைத்தால், அது தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமாக அமையுமென கூறப்பட்டது.

ஆனால், எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகக் கூறியது மத்திய அரசு. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதா தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இந்தியாவி்ல தொகுதி மறுவரையறை செய்யும் விவகாரம் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து எழும் கேள்விகள், தீர்வுகள் குறித்து 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' (South Vs North : India's Great Divide) நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கலந்துரையாடினார். அதன் விவரம் கேள்வி - பதில் வடிவில்..

கேள்வி: தொகுதி மறுவரையறை என்பது என்ன?

பதில்: தொகுதி மறுவரையறை என்பது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உட்பட எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கும். மக்கள் தொகைக்கு ஏற்றபடி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படும். அதேபோல, இந்தியாவிலும் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இது நடந்துகொண்டிருந்தது. ஆனால், 1970களில் நிலைமை மாறியது. 1960, 70களிலும் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது குறிப்பிடத்தகுந்த கொள்கை விவாதமாக இருந்தது. அப்போது இருந்த இந்திரா காந்தி அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தேசிய அளவில் மிக முக்கியமான கொள்கை என்று கூறியது.

ஆகவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும்படி எல்லா மாநிலங்களுக்கும் சொல்லப்பட்டது. இதையடுத்து, மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து நடக்கும் தொகுதி மறுவரையறை நிறுத்தப்பட்டது. நிதிப் பகிர்வுக்கென 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகப் பயன்படுத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இப்படி செய்யலாம் என்றும் அதுவரை மக்கள் தொகையை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Nilakantan RS

அந்த 25 ஆண்டுகள் கடந்து தொகுதி மறுவரையறைக்கான நேரம் வந்த போது மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தன. சில மாநிலங்கள் கட்டுப்படுத்துவதில் சுணக்கமாக இருந்தன. ஆகவே, தொகுதி மறுவரையறையைத் துவங்கினால் பிரச்சனை ஏற்படும் எனக் கருதினார்கள். ஆகவே, அதே நிலையை மேலும் ஒரு 25 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. அந்த 25 ஆண்டுகளும் கழிந்துவிட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இப்போது ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை நடக்கும். அதாவது, ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும். 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு சுமார் ஏழரை சதவீத உறுப்பினர்கள் கிடைப்பார்கள். ஆனால், சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தினால், அந்த சதவீதம் ஐந்தரையாகக் குறையும். இதுதான் சாதாரணமாக நடக்கும்.

ஆனால், இந்திரா காந்தி தொகுதி மறுவரையறையை நிறுத்திவைத்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும்படி மாநிலங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், நீங்கள் சொன்னதால்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினோம், அதை வைத்து எம்.பிக்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் என்ன நியாயம் எனக் கேட்கிறார்கள்.

அதே நேரத்தில் வட மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை; சில மாநிலங்களுக்கு அவர்கள் ஒட்டின் வலிமை அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு குறைவாக இருக்கிறது எனக் கேட்கிறார்கள். அதுவும் நியாயமான கேள்விதான். ஆகவே, இப்போது என்ன செய்வது என்பதுதான் பிரச்னை.

தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு
படக்குறிப்பு, ஆர்.எஸ். நீலகண்டன்

அமித் ஷா வாக்குறுதியை ஏற்பதில் என்ன சிக்கல்?

கேள்வி: இந்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது எல்லா மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் அளவுக்கு இடங்களை அதிகரிக்கப் போகிறோம். தமிழ்நாட்டிற்கு இடங்களின் எண்ணிக்கையை 39ல் இருந்து 59ஆக்கப் போறோம். அப்படிச் செய்தால், ஒரு சிறிய அளவு உங்களுடைய சதவீதம் அதிகரிக்கத்தான் செய்யும், ஆகவே நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று சொன்னார். இதனை வைத்து தென் மாநிலங்கள் சமாதானமடைய முடியுமா?

பதில்: கண்டிப்பாக முடியாது. மொத்தம் மூன்று மசோதாக்கள். முதலில் ஒரு அரசியலமைப்புத் திருத்தம் வரவிருக்கிறது. அதன்படி, தற்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 550ஆக (நடப்பில் 543 உறுப்பினர்களே உள்ளனர்) இருப்பதை 850ஆக மாற்றும். அடுத்ததாக, எல்லா மாநிலங்களிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்கிறார் அமித் ஷா. அதில் பிரச்னை இல்லை. ஆனால், இதோடு சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை கமிஷன் மசோதாதான் பிரச்னை. அந்த மசோதா நிறைவேற்றப்படும் போது தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்படும். அதில் பெரும்பாலும் மத்திய அரசு நியமிக்கும் உறுப்பினர்கள்தான் இருப்பார்கள்.

அம்மாதிரி ஒரு கமிஷன் அமையும்போது, எதிர்காலத்தில் தங்களுக்கு எந்த புள்ளிவிவரம் சரி எனத் தோன்றுகிறதோ, அந்தப் புள்ளிவிவரத்தில் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும். இது அடுத்த ஆண்டு, எதிர்காலத்திலோ நடக்கலாம். அதுதான் பிரச்னை.

தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Sansad/Youtube

கேள்வி: அப்படியானால், இப்போது அமித் ஷா அளிக்கும் வாக்குறுதியும், தொகுதி மறுவரையறைக்கான கமிஷன் விவகாரமும் வெவ்வேறானதா?

பதில்: ஆமாம். அமித் ஷாவைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850ஆக அதிகரித்து, அதில் தமிழ்நாட்டிற்கு 59 இடங்களைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால், இது வெறும் துவக்கமாக மட்டும்தான் அமையும். இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதன் விவரங்கள் 2027-இல் வெளிவருகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், நம்மிடம் இப்போது மக்கள் தொகை குறித்து புதிய விவரங்கள் இருக்கின்றன.

ஆகவே புதிதாக தொகுதி மறுவரையறையைச் செய்யலாம் என முடிவெடுத்தால் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஒன்று 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை விவரங்களை வைத்து இதைச் செய்யலாம். அல்லது 2026-ஆம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களை வைத்துச் செய்யலாம்.

2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தினால், 59 என்ற எண்ணிக்கை 50ஆகிவிடும். 2026ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறுவரையறை செய்தால், 59 என்ற எண்ணிக்கை 47ஆகக் குறையும். இப்போது மத்திய உள்துறை அமைச்சர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நாளை தொகுதி மறுவரையறை கமிஷன் என்ன செய்யும் என்பது தெரியாது.

கேள்வி: உள்துறை அமைச்சர் 2029 வரை இப்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையில்தான் எல்லாம் நடக்கும் எனக் குறிப்பிட்டார். அப்படியானால், 2029-இல் தான் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகள் அதிகரிக்குமா? அல்லது தொகுதி மறு சீரமைப்பு கமிஷன் அப்போதுதான் தனது பரிந்துரையைக் கொடுக்குமா?

பதில்: நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. மேலும், 2029-இல் இது நடக்குமா, நடக்காதா என்பதும் விவாதம் அல்ல. 2029-இல் வராவிட்டால், 2030-இல் வரலாம் அல்லது 2031-இல் வரலாம். எப்போது வந்தாலும் தமிழக எம்.பிக்களின் எண்ணிக்கை 59-இல் இருந்து 47ஆகக் குறையும். ஆகவே, தொகுதி மறுசீரமைப்பு கமிஷன் என்பது, தொகை நிரப்பப்படாத காசோலை போல, என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அதுதான் பிரச்னை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு
படக்குறிப்பு, ஆர்.எஸ். நீலகண்டன்

கேள்வி: தொகுதி மறுசீரமைப்பு நடக்கும்போது பலர் அஞ்சுவதைப் போல தென் மாநிலங்களில் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைந்தால் என்ன பிரச்னை வரும்?

பதில்: இப்போதைய சூழ்நிலையிலேயே இந்தி பேசும் மாநிலங்களில் எல்லாம் வெற்றிபெற்றுவிட்டாலே ஆட்சியை அமைத்துவிட முடியும். இம்மாதிரி சூழலில் எதிர்காலத்தில், தென் மாநிலங்களில் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை குறைந்தால், என்ன ஆகும்? இப்போது நாடாளுமன்றத்தில் தென் மாநில எம்.பிக்களின் விகிதம், சுமார் 24 சதவீதமாக உள்ளது. 2026-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி மாற்றியமைத்தால், இது 19 சதவீதமாக குறைந்துவிடும். அதாவது, ஐந்தில் ஒரு பங்கிற்கும் கீழே வந்துவிடும்.

அடுத்ததாக வேறு சில பிரச்னைகளும் இருக்கின்றன. உதாரணமாக, கேரளாவையும் மத்தியப் பிரதேசத்தையும் எடுத்துக்கொள்வோம். சிசுக்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, கேரளாவில் இது ஐந்தாக இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இது 40-க்கும் மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆஃப்கானிஸ்தானுக்கு இணையாக இருக்கிறது. கேரளாவின் சிசு இறப்பு விகிதத்தை அமெரிக்காவோடு ஒப்பிடலாம். டெல்லியில் எவ்வளவு புத்திசாலித்தனமான அரசியல்வாதி இருந்தாலும், எவ்வளவு புத்திசாலித்தனமான சுகாதாரத் துறை செயலர் இருந்தாலும் ஆஃப்கானிஸ்தானையும் அமெரிக்காவையும் ஒரே சுகாதாரக் கொள்கையால் வழிநடத்த முடியாது.

இப்போதே எல்லாக் கொள்கைகளையும் மத்திய அரசே வகுக்கிறது. மத்திய அரசு வகுக்கும் கொள்கையைத்தான் மாநிலங்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அவர்கள் பகிர்ந்தளிக்கும் நிதியில்தான் மாநிலங்களை நடத்த வேண்டியிருக்கிறது. இப்போது உள்ள சூழலில், தற்போதுள்ள கொள்கை எங்கள் மாநிலத்திற்கு சரியாக வராது, சற்று மாற்றுங்கள் என்றாவது குறைந்தபட்சம் சொல்ல முடிகிறது.

எம்.பிக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தால் கொள்கை முடிவுகள் பெரும்பான்மையோர் எடுப்பதாகத்தான் இருக்கும். இப்போதே, கொள்கைகளை வகுப்பதில் மத்திய மற்றும் வட மாநிலங்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது. மக்களாட்சியின் அடிப்படைச் சிந்தனை என்ன? மக்கள் சொல்லும் திட்டத்தை மக்களுக்காகச் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ பிற்காலத்தில் அதுபோல நடக்க முடியாமல் ஆகிவிடும். அதாவது ஜனநாயகத்தின் அடிபப்படை அம்சமே உடைந்துவிடும்.

தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: இந்த விவகாரத்தில் இன்னொரு கோணமும் இருக்கிறது. அதாவது இப்போது, தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு ஒரு எம்.பியும், உத்தரப்பிரதேசத்தில் அதிக வாக்காளர்களுக்கு ஒரு எம்பியும் இருக்கிறார்கள். இது நியாயமாகுமா? அதைச் சரிசெய்ய வேண்டாமா?

பதில்: கண்டிப்பாக நியாயம் அல்ல. அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது தென் மாநிலங்களின் விருப்பம் அல்ல. அவர்களும் நன்றாக இருக்க வேண்டும். ஆகவே, இந்த தொகுதி மறுவரையறை பிரச்னைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய தீர்வு என்று எதுவும் கிடையாது. அதிகாரப் பரவலாக்கம்தான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும். இம்மாதிரி ஒரு மிகப் பெரிய, பரந்துபட்ட மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சரியானதல்ல. அம்மாதிரி சூழலில் கொள்கை வகுப்பது என்பது மிக மோசமாக இருக்கும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை என எதனை எடுத்துக்கொண்டாலும் தென் மாநிலங்களும் வட மாநிலங்களும் வெவ்வேறு இடத்தில் இருக்கும். இந்த இரண்டிற்கும் சேர்த்து ஒரே கொள்கையை வகுக்க முடியாது. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளாக கொள்கைகளை உருவாக்குவதென்பது மையப்படுத்தப்பட்டு வருகிறது. இது வெறும் பா.ஜ.கவின் பிரச்னை அல்ல. எந்த அரசு இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள்.

ராணுவம், வெளியுறவு, நிதி போன்ற அடிப்படையான விவகாரங்களை மட்டும் மத்திய அரசு கவனிக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் மாநிலங்கள் முடிவெடுக்க வேண்டும். அதிகாரத்தை பெரிய அளவில் பரவலாக்கினால், மத்திய அரசின் அதிகாரம் குறைந்தால் யார் எம்.பியாக இருந்தால் என்ன, எத்தனை எம்.பி. இருந்தால் என்ன என்ற எண்ணம் வந்துவிடும். அதுதான் ஒரே தீர்வு.

வரி விதிப்பு, கொள்கைகளை வகுப்பது, செயல்படுத்துவது ஆகியவை உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் பிரச்னை தீர்ந்துவிடும். இல்லாவிட்டால், ஒன்று தென் மாநிலங்களின் எம்.பிக்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். அல்லது வட மாநிலங்களில் அதிக மக்களுக்கு குறைவான எம்.பிக்கள் இருப்பார்கள். இது இரண்டுமே நல்லதல்ல. அதிகாரப் பகிர்வுதான் இதற்கு ஒரே தீர்வு.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு