இந்திய கொடியேற்றிய 2 கப்பல்கள் மீது தாக்குதல் - ஹோர்மூஸை திறப்பதாக அறிவித்த மறுநாளே இரான் மூடியது ஏன்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
வர்த்தக கப்பல்களுக்கு ஹோர்மூஸ் நீரிணையை திரும்பவும் மூடுவதாகவும், நீரிணையை நெருங்கும் எந்தக் கப்பல்களும் இலக்கு வைக்கப்படும் என்றும் இரான் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையை அருகே டேங்கர் உள்ளிட்ட கப்பல்கள் இரானால் இலக்கு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளது.
தங்களின் இந்த முடிவுக்கு தொடரும் அமெரிக்க முற்றுகையே காரணம் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐ.ஆர்.ஜி.சி) தெரிவித்துள்ளது. உலகளவில் முக்கியமான கடல்சார் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது என இரானின் வெளியுறவு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வழித்தடம் தொடர்பான அச்சுறுத்தல்களை வைத்து இரான் தங்களை "மிரட்ட முடியாது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் ஹோர்மூஸ் நீரிணையை இரான் முடக்கி வைத்திருந்த நிலையில் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்தது.
சனிக்கிழமை ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்ட அறிக்கையில், "பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எந்தக் கப்பல்களும் அங்கிருந்து நகரக்கூடாது." என எச்சரித்துள்ளது.
தனது மேலாண்மையின் கீழ் இருக்கும் நீரிணையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் பல கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாகவும் ஐ.ஆர்.ஜி.சி தெரிவிக்கிறது. இந்த நிலையில் இரானிய துறைமுகங்களின் முற்றுகையை அமெரிக்கா நிறுத்தும் வரை நீரிணை மீண்டும் மூடப்பட்டுவதாக அறிவித்துள்ளது.
"ஹோர்மூஸ் நீரிணையை அணுகுவது எதிரியுடன் ஒத்துழைப்பதாக கருதப்படும் மற்றும் தவறு செய்யும் கப்பல்கள் இலக்கு வைக்கப்படும்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை இரானிய துறைமுகங்களின் கடற்படை முற்றுகை தொடரும் என வெள்ளிக்கிழமை டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது அமலில் இருக்கும் இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22-ஆம் தேதி உடன் முடிவடைய இருக்கிறது.
முற்றுகையை செயல்படுத்த தொடங்கிய ஏப்ரல் 13-இல் இருந்து 23 கப்பல்களை திருப்பி அனுப்பியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது போர் நிறுத்த ஒப்பந்தமீறல் எனக் கூறும் இரானிய உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எஸ்.என்.எஸ்.சி), அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் வரை நீரிணையை மீண்டும் திறப்பதை நிறுத்தி வைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக குறிப்பிடுகையில், அமெரிக்காவால் புதிய முன்மொழிவுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை இரான் தற்போது ஆராய்ந்து வரும் நிலையில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவிக்கிறது.
இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை எந்த ஒப்பந்தமும் இல்லாமல் முடிவுக்கு வந்தது.
இரான் உடனான பேச்சுவார்த்தையின் நிலை பற்றி சனிக்கிழமை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், "எங்களுக்குள் மிகவும் நல்ல உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது." என்று கூறினார்.


பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை இரானால் கப்பல்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
நீரிணையில் ஒரு டேங்கர் மீது இரானின் இரண்டு துப்பாக்கிப்படகுகள் சுட்டதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் கூற்றுப்படி, ஓமனில் வட கிழக்கு கரையில் கண்டெய்னர் கப்பல் ஒன்று "அடையாளம் தெரியாத வெடிபொருளால் (Projectile)" தாக்கப்பட்ட நிலையில் சில கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
மறுபுறம், நீரிணையைக் கடக்க முயன்ற இரண்டு வணிக கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கொடி ஏற்றப்பட்ட 2 கப்பல்கள் சம்மந்தப்பட்ட சுடுதல் சம்பவம் குறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை" தெரிவிக்க இரான் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீரிணை திறந்திருந்த குறுகிய நேரத்தில் சில கப்பல்கள் கடந்து செல்ல முடிந்ததாக மரைன்டிராஃபிக் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஐ.ஆர்.ஜி.சி அனுமதி மறுத்த பிறகு மற்ற கப்ல்கள் தங்களின் வழித்தடத்தை மாற்ற நிர்பந்திக்கப்பட்டன.
உலகின் 20 சதவிகித எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இந்த நீரிணையை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் பிப்ரவரி 28-ஆம் தேதி இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு உருவான சமீபத்திய மோதலில் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் இந்தக் குறுகலான புள்ளிதான் எண்ணெய் உற்பத்தி செய்யும் பல நாடுகளை கடல் வழியாக அடைவதற்கான ஒரே வழி.
இரான் இதற்கு முன்னதாக டேங்கர்கள் மற்றும் பிற கப்பல்களை தாக்குவதாக மிரட்டல் விடுத்திருந்தது. கடல் கண்ணிவெடிகளை வைத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































