'பௌர்ணமி வந்தாலே பயம்': திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

பௌர்ணமி உள்பட விசேச நாட்களில் தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.
மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ கிரிவலப் பாதையில் வெளியூர் பக்தர்களை நம்பி ஏராளமான சிறு வணிகர்கள் தொழில் செய்கின்றனர். பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
"ஆனால், மலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் எங்களை இங்கிருந்தே அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்" என்ற குரல்களும் கிரிவலப் பாதையில் எழத் தொடங்கியுள்ளன.
திருவண்ணாமலையில் சுமார் 2,600 அடி உயரமும் 14 கி.மீ சுற்றளவும் கொண்ட மலையின் அடிவாரத்தில் அண்ணாமலையார் கோவில் எனப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், பிற்காலத்தில் விஜயநகர நாயக்கர் கால அரசர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக, இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் கூறுகிறது.
பௌர்ணமி உள்ளிட்ட விசேச நாட்களில் ஆந்திரா, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அதேநேரம், மலையைச் சுற்றி வசித்து வரும் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் பேசுவதற்காக களத்துக்குச் சென்றது பிபிசி தமிழின் 'உங்கள் குரல்'.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக, தொடரப்பட்ட வழக்கு குறித்து பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதாகக் கூறி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
'மலையில் குடியிருப்புகள், கழிப்பறைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் கட்டப்பட்டுள்ளன. தவிர, வணிக நிறுவனங்களும் பெருகிவிட்டதால் கிரிவலப் பாதை அசுத்தம் அடைந்துவிட்டது' என மனுவில் அவர் கூறியிருந்தார்.
'3,430 வீடுகளுக்கு ஆபத்து'

2024 ஆம் ஆண்டு மலையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனை வழக்கின் விசாரணையில் மேற்கோள் காட்டிய யானை ராஜேந்திரன், 'வடக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தால் பாதிப்புகள் அதிகரித்திருக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கூடவே, மலையில் சுமார் 136 நீர்நிலைகளை மீட்க வேண்டும் எனவும் வழக்கின் வாதத்தில் அவர் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்றை உயர் நீதிமன்றம் அமைத்தது.

அக்குழுவினர் ஆய்வு நடத்தி 554 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கூறியது. மக்களுக்கு பட்டா கொடுக்காமல் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
குழுவினர் அளித்துள்ள அறிக்கையில், கிரிவலப் பாதையில் உள்ள மலைப் பகுதியில் மாநகராட்சியின் ஆறு வார்டுகளும் சுமார் 3430 வீடுகளும் 154 வணிக கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 554 ஏக்கர் நிலப்பரப்பும் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
"ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த இடத்தில் இருந்து எங்களை வெளியேற்றக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். போராட்டமும் நடத்தினோம்" எனக் கூறுகிறார், ரமணாஸ்ரமம் பின்புறம் வசித்து வரும் சரோஜா.
"இந்த இடம் எங்களுக்கு வேண்டும். இதற்கு மேல் எங்களால் சம்பாதித்து வீடு கட்ட முடியாது. தேர்தல் முடிந்த பிறகு என்ன செய்வார்களோ எனப் பயத்தில் வாழ வேண்டியுள்ளது" என அவர் தெரிவித்தார்.

'காலி செய்ய முடியாது எனக் கூறிவிட்டோம்'
"மலையைச் சுற்றி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எங்களைக் காலி செய்துவிட்டால் திருவண்ணாமலைக்கு எந்தப் பெருமையும் இல்லை. மாநகராட்சியில் இருந்து காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், முடியாது எனக் கூறிவிட்டோம்" என்கிறார், இதே பகுதியில் வசிக்கும் திரிபுரம்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மலையைச் சுற்றியுள்ள காலி இடங்களில் மக்கள் குடியேறத் தொடங்கினர். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறிய இம்மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் சாலை, மின்வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
"பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்துவிட்டோம். தேர்தல் வரும்போது மட்டும், 'ஆட்சி அமைந்ததும் வாங்கித் தருகிறோம்' எனக் கூறுகின்றனர். ஆனால், அதன்பிறகு எந்த முயற்சிகளையும் யாரும் மேற்கொள்வதில்லை" என்கிறார், கிரிவலப் பாதையில் வசிக்கும் ஓவியர் அருணகிரி.

இதே கருத்தை முன்வைக்கும் வ.உ.சி நகரில் வசிக்கும் சித்ரா, " இந்த இடத்தை தெய்வமாக மதிக்கிறோம். மண் சரிவு ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணங்களை ஆராயலாம். அதைத் தவிர்த்து, அனைத்து வீடுகளையும் இடிப்பதாகக் கூறுவது சரியில்லை" என்கிறார்.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கட்டட வேலை, வீட்டு வேலை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். "வெளியில் இருந்து வருகிறவர்களின் நன்மைக்காக எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்" எனக் கூறுகிறார் சித்ரா.
தொடர்ந்து அவர் பேசும்போது, "இப்பகுதியில் குடியேறும்போது தண்ணீர் வசதி, சாலை வசதி என எதுவும் இல்லாமல் இருந்தோம். படிப்படியாக அனைத்து வசதிகளும் கிடைத்தன. அதற்குள் வீடுகளை இடிப்போம் என்றால் எங்கே போவது?" எனக் கேள்வி எழுப்பினார்.
'திருப்பதி போன்று மாற்ற முயற்சிக்கிறார்கள்'

"எனக்கு இந்த வீட்டைத் தவிர வேறு சொத்து எதுவும் இல்லை. வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானம், சாப்பாட்டுக்கு சரியாக இருக்கிறது. எங்களுக்கு அண்ணாமலையார் துணையாக இருப்பார் என நம்புகிறோம்" என்கிறார், இப்பகுதியைச் சேர்ந்த கீதா.
"நான் பிறந்ததில் இருந்தே இந்தப் பகுதியில் இருக்கிறேன். குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம். வீட்டுக்குப் பக்கத்தில் அரசுப் பள்ளி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு எங்கேயும் போக முடியாது" எனக் கூறுகிறார், ஜெயஸ்ரீ. இவரது கணவர் கட்டட வேலை செய்து வருகிறார்.

திருப்பதியைப் போன்று திருவண்ணாமலையை மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறுகிறார், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ். "தெற்குப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் வீடுகளை அப்புறப்படுத்த உள்ளதாகக் கூறுகின்றனர்" என்கிறார்.
"மூன்று தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டது இல்லை. மலைக்கு எங்களால் தான் பாதுகாப்பு கிடைக்கிறது. நாங்கள் இல்லாவிட்டால் மலை மீது வெளியூர் நபர்கள் அத்துமீறி ஏறுவது அதிகரித்துவிடும்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'அரசுப் பேருந்தை எதிர்பார்க்க முடியாது'
மலையைச் சுற்றி 14 கி.மீ சுற்றளவில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் வேறு சில பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். கிரிவலப் பாதையில் போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால் அதிகக் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்கும் நிலை உள்ளதாகக் கூறுகிறார், இங்கு வசிக்கும் அருண்குமார்.
இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, "வீட்டுக்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனையை மூன்று கி.மீ தொலைவில் மாற்றிவிட்டனர். அவசர மருத்துவ தேவைக்குக் கூட அரசுப் பேருந்துகளை எதிர்பார்க்க முடியாது" என்கிறார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "ஆட்டோவில் பயணிப்பதற்கு குறைந்தது 200 ரூபாய் கொடுக்க வேண்டும். இவ்வளவு தொகைக்கு நாங்கள் சென்னை சென்றே சிகிச்சை பார்த்துக் கொள்ள முடியும்" என்கிறார்.
"அரசுப் பேருந்துகளும் பெரிதாக இல்லை" எனக் கூறும் அருண்குமார், "வெளியூர் ஆட்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். சொந்த வாகனம் இல்லாத உள்ளூர் மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை" எனத் தெரிவித்தார்.
தவிர, கிரிவலப் பாதையில் இருந்து பேருந்து நிலையம் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. "வயதானவர்களும் நோயாளிகளும் கடும் வெயிலில் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. போதிய போக்குவரத்து வசதியை அரசு செய்து தர வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
'எந்த வசதிகளும் முறையாக இல்லை'

இங்கு வசிக்கும் மக்களைப்போலவே, பல்வேறு இடையூறுகளை கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்து வரும் சிறு வணிகர்கள் எதிர்கொள்கின்றனர்.
"குடிப்பதற்கு முறையான தண்ணீர் வசதி இல்லை. பணம் கொடுத்து தான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். கோவிலுக்கும் கடைவீதிக்கும் செல்வதற்கு அரசுப் பேருந்துகள் இல்லை" என்கிறார் சுகுணா.
இவர் கிரிவலப் பாதையில் பழச்சாறு கடை ஒன்றை நடத்தி வருகிறார். "வெளியூர் வாகனங்கள் அதிகளவில் வருகின்றன. ஆனால், வாகன நிறுத்தும் வசதிகள் சுத்தமாக இல்லை. கடைகளுக்கு முன்பாக நிறுத்திவிட்டுச் செல்வதால் வியாபாரம் பாதிக்கிறது" என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "கடைகளை நடத்துவதற்கு மாநகராட்சிக்கு தினமும் வரி கட்டி வருகிறோம். ஆனால், எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கோவிலுக்குச் சென்று வருவதற்கு கட்டணமில்லா பேருந்து இருந்தால் உதவியாக இருக்கும்" என்கிறார்.
"கிரிவலப் பாதையில் ஆங்காங்கே இலவச கழிப்பறைகள் இருந்தாலும் அவை பலருக்கும் தெரிவதில்லை. இதனால் பல இடங்களில் அசுத்தம் செய்கின்றனர்" எனவும் இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.
'பௌர்ணமி வந்தாலே பயம்'

கார்த்திகை தீபம், பௌர்ணமி உள்ளிட்ட விசேச நாட்களில் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகக் கூறுகிறார், கிரிவலப் பாதையில் உணவகம் நடத்தி வரும் முருகன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விசேச நாட்களில் கடைகளுக்கு முன்பாக போடப்பட்டிருக்கும் பலகைகள், தள்ளுவண்டிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் உடைத்துவிடுகின்றனர். ஆனால் கடையை மீண்டும் சரிசெய்வதற்கு மூன்று மாதங்கள் ஆகிவிடுகின்றன" என்கிறார்.
ஆண்டுக்கு இரண்டு முறை இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாகக் கூறும் முருகன், "பக்தர்களுக்கு நாங்கள் இல்லாவிட்டால் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காது. சித்ரா பௌர்ணமி வந்தாலே எனக்குப் பயம் வந்துவிடுகிறது" எனக் கூறுகிறார்.
மாநகராட்சிக்கு தினமும் 30 ரூபாய் சந்தா கட்டி வருவதாகக் கூறும் அவர், "உணவு சான்றிதழ் உள்பட அனைத்து உரிமங்களையும் வாங்கி வியாபாரம் செய்து வருகிறோம். அரசு எந்த உதவியையும் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. கடைகளை உடைக்காமல் இருந்தால் போதும்" என்கிறார்.
மாநகராட்சி ஆணையர் கூறுவது என்ன?

உள்ளூர் பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்னைகள் தொடர்பாக திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் எஸ்.செல்வ பாலாஜியிடம் பிபிசி தமிழ் பேசியது.
"மலையைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அப்பகுதியை வனத்துறை நிலமாக அறிவித்துவிட்டால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடி மாற்று ஏற்பாடுகளை ஆலோசிப்போம்" என்கிறார் அவர்.
நிலச்சரிவு வந்ததால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளதாகக் கூறிய எஸ்.செல்வ பாலாஜி, "மக்களின் ஆலோசனைகளையும் கேட்டுள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்" என்கிறார்.

கிரிவலப் பாதையில் 200 மீட்டருக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் கடந்த 2 மாதங்களில் 30 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பக்தர்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் தொட்டி ஒன்று கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகன நிறுத்தும் இடம் தொடர்பாக போக்குவரத்துத் துறையுடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், "மல்டிலெவல் வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து ஒப்புதல் கிடைத்துவிட்டால் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும். அங்கு ஒரேவ்நேரத்தில் ஐநூறு கார்களை நிறுத்த முடியும்" எனக் கூறினார்.
வியாபாரிகள் கூறும் இதர பிரச்னைகள் தொடர்பாக பிற துறைகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறுகிறார், மாநகராட்சி ஆணையர் எஸ்.செல்வ பாலாஜி.
வெளியூர் பக்தர்களின் நலனில் முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திலும் போதிய அக்கறை செலுத்த வேண்டும் என, கிரிவலப் பாதையில் வசிக்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































