'சாமி' பாணியில் நீருக்கடியில் தாமரை தண்டு மூலம் சுவாசித்து 5 மணி நேரம் பதுங்கியிருந்த திருடன் - பிடிபட்டது எப்படி?

'5 மணிநேரம் குளத்துக்கு அடியில் தாமரைத் தண்டு மூலம் சுவாசித்தேன்' - திருடன் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், விஷ்னுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி ஹிந்தி செய்தியாளர், போபால்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

குளத்தில் நீருக்கடியில் ஐந்து மணிநேரமாக ஒளிந்திருந்த ஒருவரை காவல்துறையினர் ஒருவழியாக பிடித்துவிட்டனர்.

காவல்துறையினரிடம் இருந்து பிடிபடாமல் இருக்க நீருக்கடியில் மறைந்திருந்த அவர், தாமரை தண்டு வாயிலாக சுவாசித்தார்.

எனினும், அவரது தந்திரம் அனுபவம், பொறுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மீறிச் செல்லவில்லை.

ரயில்வேயால் மிகவும் தேடப்பட்ட நபரான, சுமார் 400 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் அந்த நபர் பிடிபட்டது எப்படி?

ஏப்ரல் 7 அன்று மாலை சுமார் 5 மணியளவில், கிதௌலா (Khitaula) ரயில்வே நிலையத்திலிருந்து ஓடிய நபர் ஒருவரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் துரத்தினர். சிறிது நேரத்தில் அந்நபர் அருகிலிருந்த குளம் ஒன்றில் குதித்துவிட்டார்.

காவல்துறையினர் அந்த குளத்துக்கு வந்தபோது அவர்களால் அந்நபரை கண்டுபிடிக்க்க முடியவில்லை. குளம் முழுவதும் அந்த நபரை காவல்துறையினர் தேடினர். அந்த சமயத்தில். அந்த நபர் நீருக்கடியில் ஒளிந்து கொண்டிருந்தார்.

அதிலிருந்த தாமரைத் தண்டு வாயிலாக அவர் சுவாசித்துள்ளார். சுமார் ஒரு மணிநேரம் கழித்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் கிதௌலா காவல்துறையின் உதவியை நாடினர். அந்நபர், ரயிலில் பெண் ஒருவரின் பர்ஸ்-ஐ பறிக்க முயற்சித்ததாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் கிதௌலா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அவரை துரத்தியபோது, அந்நபர் குளத்தில் குதித்துள்ளார்.

இந்த விவகாரத்தின் தன்மையை உணர்ந்து, நகர காவல் ஆய்வாளர் ராமன் சிங் மர்காம் நிகழ்விடத்துக்கு தன் குழு மற்றும் டைவர்களுடன் சென்றார். அதன்பின், ஐந்து மணிநேரம் அந்நபரை தேடியுள்ளனர். பிறகு, குளத்துக்கடியில் ஒளிந்திருந்த அந்நபர் பிடிபட்டார்.

போலீஸார் விசாரித்தபோது, தான் நீருக்கடியில் தாமரைத் தண்டு மூலமாக சுவாசித்ததாக அந்நபர் கூறியுள்ளார். அதன்பின், கிதௌலா காவல்துறை அந்நபரை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்நபரின் பெயர் ஹர்விந்தர்.

என்ன நடந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஏப்ரல் 7 அன்று, ரேவா இத்வாரி நிலையத்தில் (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்வாரி சந்திப்பு, நாக்பூர்) ஏசி பெட்டியில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த ரயில் சிஹோரா ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது பெண்ணின் பர்ஸை பறிக்க அந்த நபர் முயற்சித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க அந்த நபர் ரயில் நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளார். காவலர்கள் ஆஷிஷ் யாதவ் மற்றும் வினய் மௌரியா ஆகியோர் அவரை துரத்தியுள்ளனர். அதேசமயம், ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் நீருக்கடியில் அந்நபர் ஒளிந்துகொண்டார்.

அதில் எங்கும் பாசியும் நீர்த்தாவரங்களும் நிறைந்திருப்பதால் மேலே இருந்து பார்க்கையில் எதுவுமே தெரியாத நிலையில் இருந்தது. இரு காவலர்களும் குளத்தில் அவரை நீண்ட நேரத்துக்கு தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்பின், ரயில்வே பாதுகாப்புப் படை காவல்நிலைய பொறுப்பாளர் ராஜிவ் காரபிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. கிதௌலா காவல்நிலைய போலீஸாரின் உதவியுடன் அந்நபரை பிடிக்கும் முயற்சியில் ரயில்வே பாதுகாப்புப் படை ஈடுபட்டது. அதன்பின், பிடிபட்ட நபர் ஜபல்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

யார் அந்த நபர்?

சிஹோராவிலிருந்து ஜபல்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்நபரிடம் காவல்நிலைய பொறுப்பாளர் ராஜிவ் காரப் விசாரணை நடத்தினார். அப்போது, தன் பெயர் மற்றும் முகவரி குறித்து முரணான தகவல்களை அளித்துள்ளார். அப்போது, பிடிபட்ட நபரின் முகம் நன்கு அறியப்பட்ட முகமாக இருப்பதை காவல்நிலைய பொறுப்பாளர் கண்டுகொண்டார்.

அவர் தனது மொபைலில் ஆங்கில செய்தித்தாளில் வெளியாகியிருந்த புகைப்படத்துடன் அந்த நபரின் முகத்தை ஒப்பிட்டு பார்த்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருந்த நபரும் தற்போது பிடிபட்டவரும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதையறிந்து காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நபர் பல வழக்குகளில் சிக்கிய 32 வயதான ஹர்விந்தர் சிங் என்பதும் அவர் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஹல்தௌர் (Haldaur) காவல்நிலையத்துக்குட்பட்ட நிஷிக் மொஹல்ல கேடாவை சேர்ந்த நபர் என்பதும் தெரியவந்தது.

'5 மணிநேரம் குளத்துக்கு அடியில் தாமரைத் தண்டு மூலம் சுவாசித்தேன்' - திருடன் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஜிஆர்பி போபால், ஜிஆர்பி இடார்சி, ஜிஆர்பி இகாத்புரி, ராஜ்கத் காவல்நிலையம், வால்சந்த் நகர் (புனே) காவல்நிலையம், எம்ஐடிசி காவல் நிலையம் (மும்பை), ஜிஆர்பி/பிஎஸ் விசாகபட்டினம் மற்றும் ஜிஆர்பி கூடிவாலா காவல்நிலையம் ஆகியவற்றில் பல மாதங்களாக அந்நபரை தேடி வந்துள்ளனர்.

மிகவும் தேடப்படும் நபராக மாறியது எப்படி?

32 வயதான ஹர்விந்தர் சிங் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த சம்பவங்களில் கோடிக்கணக்கிலான பணம் திருடு போயுள்ளது. பயணிகளிடம் இருந்து மட்டுமல்லாமல் அவ்வப்போது ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையையும் ஏமாற்றும் அளவுக்கு தந்திரமானவராகவும் சாமர்த்தியம் கொண்டவராகவும் இருந்துள்ளார்.

ரயில் ஏசி பெட்டிகளிலும் ஹர்விந்தர் திருடியுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். முன்பு அவர் மற்ற பயணிகளைப் போலவே டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால், ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, டிக்கெட்டுகள் இணையம் வாயிலாக விற்கப்பட தொடங்கியபோது, அவர் டிக்கெட் எடுப்பதை நிறுத்திவிட்டார்.

'5 மணிநேரம் குளத்துக்கு அடியில் தாமரைத் தண்டு மூலம் சுவாசித்தேன்' - திருடன் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

டிக்கெட் பரிசோதகர் வந்துவிட்டால் கழிவறையில் ஒளிந்துகொள்வார். டிக்கெட் பரிசோதகர் சென்றபின், அந்த பெட்டியில் தனியாக பயணிக்கும் பெண்களை குறிவைக்கத் தொடங்குவார்.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் தான் முதன்முறையாக திருடியதாக ஹர்விந்தர் தெரிவித்துள்ளார். அப்போதிருந்து அவர் 400க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு விஜயவாடா காவல்துறை அவரை திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்தது.

சன்னி என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ச்சி

விசாரணையின்போது அவர் தன் பெயரை பப்லு என்று மாற்றி கூறியுள்ளார். தான் சண்டிகரை சேர்ந்தவன் என்றும் சிலமுறை கூறியுள்ளார்.

ரயில்வே பாதுகாப்புப் படை காவல்நிலைய பொறுப்பாளர் ராஜி காரப் கூறுகையில், 2018-ஆம் ஆண்டு கோடாவில் உள்ள ரயில்வே உளவுத்துறையில் அவர் இருந்துள்ளார். அந்த சமயத்தில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் இடம்பெற்றிருந்த திருடர் ஒருவரின் புகைப்படத்துடன் இவரும் ஒத்துப்போயுள்ளார்.

அந்த புகைப்படம் அவருடைய மொபைலில் இன்றளவும் இருந்துள்ளது. அந்த செய்தித்தாளில் அவருடைய பெயர் ஹர்விந்தர் சிங் என்கிற சன்னி என எழுதப்பட்டுள்ளது. தற்போது விசாரணையின்போது ராஜிவ் காரப் அந்த புகைப்படத்தைப் பார்த்து, 'சன்னி, நீ சிக்கிக்கொண்டாய்' என கூறியுள்ளார். அதைக் கேட்ட ஹர்விந்தர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

முழுமையான விசாரணைக்குப் பிறகு ஹர்விந்தர் 2018-ஆம் ஆண்டில் தன்னை திருட்டு குற்றச்சாட்டில் விஜயவாடா காவல்துறை கைது செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் ரூ. 70 லட்சத்து 38,500 மதிப்புள்ள வைரங்கள் மற்றும் தங்க அணிகலன்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஹர்விந்தர் கைதான பின் மற்ற மாநிலங்களை சேர்ந்த காவல்துறையினரும் விசாரணைக்காக வந்துள்ளனர்.

சுயேச்சை மாநகராட்சி உறுப்பினர்

2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பை சென்ட்ரல் - இந்தோர் அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவரிடம் ஹர்விந்தர் திருடியுள்ளார். ஹர்விந்தர் உரிமம் பெற்ற 32 கைத்துப்பாக்கிகள் 10 தோட்டாக்கள் மற்றும் ரூ. 1.90 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடியுள்ளார். மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளின் வாயிலாக பாதிக்கப்பட்ட நபர் ஹர்விந்தர் சிங்கை அடையாளம் காட்டினார்.

2017 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, ஹர்விந்தர் சிங் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹல்தார் நகராட்சி நிர்வாக அதிகாரி அபிஷேக் குமார் தெரிவித்தார். இருப்பினும், அவரது குற்றப் பின்னணி குறித்து அவரது குடும்பத்தினர் எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு ரயில்வே காவல் நிலையங்களில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 379 மற்றும் 411-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

திருட்டுக்குப் பின் புதிய சிம் கார்டு

ஹர்விந்தர் சிங் என்ற சன்னி மிகவும் தந்திரமானவர்; ஒவ்வொரு முறை திருடும்போதும் ஒரு புதிய மொபைல் சிம்-ஐ பயன்படுத்தியுள்ளார். தனது மொபைல் மூலம் தன்னுடைய இருப்பிடத்தைக் கண்டறிந்து, தன்னைக் கைது செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். தனது உண்மையான அடையாளம் வெளிப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அவர் தன்னுடன் எந்த அடையாள அட்டையையும் எடுத்துச் செல்லவில்லை.

ரயில்வே பாதுகாப்புப் படை அளித்த தகவலின்படி, தான் அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்கவும், எவ்விதத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் இருக்கவும், அவர் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை தனது வழித்தடத்தையோ அல்லது பயணப் பாதையையோ மாற்றிக்கொள்வார். சில சமயங்களில் திருட்டில் ஈடுபடுவதற்காக அவர் டெல்லியிலிருந்து போபாலுக்குப் பயணிப்பார்; சில சமயங்களில் கொல்கத்தாவிலிருந்து பிகாருக்குப் பயணிப்பார்; வேறு சில சமயங்களில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வழித்தடத்தில் பயணிப்பார்.

ஹர்விந்தர் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விசாரிப்பதற்காகப் பிற மாநிலக் காவல்துறையினரும் ஜபல்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையைத் தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

"தற்போது பல்வேறு மாநிலங்களிலிருந்து அவரைப் பற்றி விசாரித்து எங்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சென்னையில் உள்ள அதிகாரிகளும் அவரது காணொளிக் காட்சிகளை அனுப்பியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக நாங்கள் அவற்றைச் சரிபார்த்து வருகிறோம்," என்று ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி ராஜிவ் குமார் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் தெரிவித்தார்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு