'ஆதாரம் தேடி 3 மாதம் தினசரி வீதியில் அலைந்தேன்' - ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்கும் ஒரு தாயின் கதை

டேராடூனைச் சேர்ந்த க்ஷிதிஜின் மரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் நிகழ்ந்தது

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, டேராடூனைச் சேர்ந்த க்ஷிதிஜ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தொன்றில் உயிரிழந்தார்.
    • எழுதியவர், ஆசிஃப் அலி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டேராடூனின் பிரேம்நகர் பகுதியில் 18 வயதான க்ஷிதிஜ் சௌத்ரி (Kshitij Chaudhary) சாலை விபத்தில் உயிரிழந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை போலீஸாரால் இதுவரை பிடிக்க முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தனது ஒரே மகனைப் பறிகொடுத்த தாய் லலிதா சௌத்ரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல் நிலையங்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறார்.

விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் போலீஸார் மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், அவர்களின் பதிலில் திருப்தி இல்லாததால் ஆதாரங்களைத் திரட்டும் பணியில் தாமே இறங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், தனது ஆதங்கத்தை அதிகாரிகளிடம் அவர் மீண்டும் கொண்டு சென்றார். அதன் பிறகு, இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.

என்ன நடந்தது?

டம்பர் லாரி மோதியதன் காரணமாகவே க்ஷிதிஜ் உயிரிழந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, லாரி மோதியதால்தான் க்ஷிதிஜ் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்

2024 பிப்ரவரி 16-ஆம் தேதி இரவு சுமார் 2:45 மணியளவில், க்ஷிதிஜ் சௌத்ரி தனது நண்பர் ஒருவருடன் டேராடூனின் பிரேம்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

குடும்பத்தினர் அளித்துள்ள தகவலின்படி, அந்த நேரத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் வாகனத்துடன் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விபத்து நடந்த உடனேயே அவரது நண்பர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்ததாகவும், ஆனால் சுமார் 45 நிமிடங்கள் வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் க்ஷிதிஜின் தாய் லலிதா சௌத்ரி கூறுகிறார். போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சரியான நேரத்திற்கு வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆம்புலன்ஸ் மூலம் 'தூன்' மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட க்ஷிதிஜ் சௌத்ரியின் நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து, மருத்துவர்கள் அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 17-ஆம் தேதி மாலை அவர் உயிரிழந்தார்.

விபத்து நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 19-ஆம் தேதி லலிதா சௌத்ரி பிரேம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முன்னதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த புகாரை போலீஸார் பதிவு செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

'ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள் என்று என்னிடம் கூறப்பட்டது'

தமக்கு ஒரு சிசிடிவி காட்சி கிடைத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தாம் ஆதாரங்களைத் திரட்டியதாகவும் லலிதா கூறுகிறார்.

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, தமக்கு ஒரு சிசிடிவி காட்சி கிடைத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தாம் ஆதாரங்களைத் திரட்டியதாகவும் லலிதா கூறுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தனது மகனைப் பற்றி நினைவு கூர்ந்த லலிதா சௌத்ரி, "என் மகன் என் கண்களில் ஒருபோதும் கண்ணீரைப் பார்க்கச் சகிக்கமாட்டான். எங்கள் உறவு தாய்-மகன் என்பதைத் தாண்டி, நண்பர்களைப் போன்றது," என்கிறார்.

விபத்து நடந்த அன்று இரவு சுமார் மூன்று மணியளவில் தமக்கு போன் வந்ததாக அவர் கூறுகிறார்.

"நான் அவனிடம் பேசியபோது, ஒரு கணத்தில் அவனது குரலை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவன் கடும் வலியில் துடித்துக் கொண்டிருந்தான். நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, 'அம்மா, வந்துவிட்டீர்களா?' என்று கேட்டான்."

சரியான நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் தனது மகனின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என லலிதா நம்புகிறார். "100 மற்றும் 108 ஆகிய எண்களுக்கு நான் செய்த அழைப்புகள் சரியான நேரத்தில் ஏற்கப்பட்டிருந்தால், என் மகன் இன்று என்னுடன் இருந்திருப்பான்," என்கிறார் அவர்.

ஆனால், உண்மையான போராட்டம் அதற்குப் பிறகுதான் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.

"வழக்கின் முன்னேற்றம் குறித்து நான் போலீஸாரிடம் கேட்டபோது, 'உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள், எங்களிடம் ஒன்றும் மந்திரக்கோல் இல்லை' என்று என்னிடம் கூறப்பட்டது."

இதன் பின்னர் தாமே விசாரணையில் இறங்குவது என முடிவு செய்ததாக லலிதா கூறுகிறார். "நான் இதைச் செய்யாவிட்டால், வேறு யாரும் செய்யப்போவதில்லை என்று எனக்குத் தோன்றியது," என்கிறார் அவர்.

பல மாதங்களாக அந்தச் சாலைக்குச் சென்று மக்களிடம் அவர் பேசியுள்ளார். கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்களைத் தேடி அலைந்தார். சாத்தியமான அனைத்துத் தகவல்களையும் திரட்ட முயன்றார்.

"மூன்று மாதங்களாக நான் தினமும் அந்தச் சாலையிலேயே சுற்றித் திரிந்தேன்" என்கிறார் அவர்.

தமக்கு ஒரு சிசிடிவி காட்சி கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்றதாகவும் லலிதா கூறுகிறார். அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் பல வாகனங்களின் எண்களை அவர் சேகரித்துள்ளார்.

"சுமார் 10 வாகனங்களின் எண்களை போலீஸாரிடம் கொடுத்தேன்," என்கிறார் அவர்.

இருப்பினும், விசாரணையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார். "விசாரணை நடத்தப்பட்டுவிட்டது, ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்றே என்னிடம் கூறப்பட்டது," என்றார் லலிதா.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதை அவர் அறிந்தார். "அன்று எனது உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதாக நான் உணர்ந்தேன்," என்கிறார் லலிதா.

விவசாய சங்கத்திற்குச் சென்ற விவகாரம்

விவசாய சங்கம்

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, லலிதா சௌத்ரி சமீபத்தில் விவசாய சங்கத் தலைவர்களைச் சந்தித்து க்ஷிதிஜின் மரணம் குறித்த விவகாரத்தை எழுப்பினார்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, லலிதா சௌத்ரி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.

டேராடூனில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, அவர் தனது மகன் உயிரிழப்புக்கு நீதி கோரி குரல் எழுப்பினார். அந்தச் சமயத்தில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்தைச் சந்தித்த லலிதா, இந்த விவகாரம் குறித்த முழு விவரங்களையும் அவரிடம் தெரிவித்தார்.

பாரதிய கிசான் யூனியன் வெல்ஃபேர் ஃபவுண்டேஷனின் தேசியத் தலைவர் சோம் தத் சர்மா இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் லலிதா சௌத்ரியைச் சந்தித்தோம். அவரது கதையைக் கேட்ட பிறகு நாங்கள் அவருக்குத் துணையாக நிற்கத் தீர்மானித்தோம். நாங்கள் அவரை அழைத்துக் கொண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம்," என்றார்.

சோம் தத் சர்மாவின் கூற்றுப்படி, இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக முதலில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், லலிதா திரட்டிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்ட பிறகு, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

"ஒரு தாய் தனது மகனின் மரணத்திற்குத் தாமே ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருந்தது என்பது துரதிர்ஷ்டவசமானது," என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இனியும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இனிமேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம். பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்தும் எங்களுடன் இங்கே களத்தில் நிற்பார்," என்று அவர் கூறினார்.

காவல்துறை கூறுவது என்ன?

புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், க்ஷிதிஜின் மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், க்ஷிதிஜின் மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் இப்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் இது மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் டேராடூனின் காவல்துறை கண்காணிப்பாளர் பிரமேந்திர தோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய அவர், "கிடைக்கப் பெற்ற அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளருக்கு மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.

எஸ்பி-யின் கூற்றுப்படி, இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

விசாரணையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மெத்தனம் காட்டப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

லலிதா சௌத்ரி உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர். அவரது மகள் டெல்லியில் இன்டர்ன்ஷிப் செய்து வருகிறார்.

தனது மகனுக்காகத் தான் செய்ததெல்லாம் ஒரு தாயின் கடமை என்று லலிதா சௌத்ரி கூறுகிறார்.

"போலீஸார் செய்திருக்க வேண்டிய வேலையை நான் செய்தேன்," என்கிறார் அவர்.

"என் மகன் என்னிடம், 'அம்மா என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்," என்று அவர் கூறினார். அவரது குரலில் இன்றும் அந்த வலி தெளிவாகத் தெரிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு