இரான் கொடி தாங்கிய கப்பலை சுட்டு, கைப்பற்றிய அமெரிக்கா - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Centcom
கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் இரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது.
தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு விடுத்த எச்சரிக்கையை கேட்காததால், அமெரிக்க கடற்படை டௌஸ்கா எனும் கப்பலை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.
இது போர்நிறுத்த மீறல் என்றும், இந்த 'ஆயுதமேந்திய கடற்கொள்ளைச் செயலுக்கு' விரைவில் பதிலடி கொடுப்போம் என்றும் இரான் கூறியுள்ளது.
அரசு ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, இரானின் உயர்மட்ட ராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறுகையில், போர் நிறுத்தத்தை மீறி ஓமன் கடலில் இரானின் வணிகக் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா துப்பாக்கி சூடு நடத்தி அதன் வழிகாட்டும் அமைப்பை செயலிழக்கச் செய்ததாகவும் கடற்படையினரை நிறுத்தி அக்கப்பலில் ஏறியதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகள், அமெரிக்க கடற்படையின் ஆயுதமேந்திய கடற்கொள்ளைக்கு விரைவில் பதிலடி கொடுக்கும்," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளுக்கான மற்றொரு தூதுக்குழுவுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமை தாங்குவார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய பிறகு, இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தான் கலந்துகொள்வது குறித்து தெஹ்ரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க கடற்படையின் முற்றுகை இன்னும் செயல்பாட்டில் இருப்பதால் அதிகாரிகள் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார்கள் என, இரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"இன்று, இரானிய கொடி பொருத்தப்பட்ட டௌஸ்கா (TOUSKA) என்ற 900 அடி நீளமுள்ள, விமானந்தாங்கி கப்பலை ஒத்த எடை கொண்ட கப்பல், எங்களின் கடற்படை முற்றுகையை கடந்து செல்ல முயற்சித்தது, ஆனால் அம்முயற்சி பயனளிக்கவில்லை," என டிரம்ப் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலை நிறுத்துமாறு அமெரிக்கா நியாயமான எச்சரிக்கை விடுத்தும் அந்த எச்சரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், "அதனால், நமது கடற்படை அந்தக் கப்பலை வந்துகொண்டிருந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தியது." என குறிப்பிட்டுள்ளார்.
"முன்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதிவுகள் இருப்பதால், டௌஸ்கா கப்பல் அமெரிக்க கருவூல தடைகளின் கீழ் உள்ளது. தற்போது அக்கப்பல் எங்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது, அக்கப்பலில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்துவருகிறோம்!"
பின்னர், கடற்படை கப்பல் சரக்குக் கப்பலை இடைமறிப்பதாக கூறும் காணொளி ஒன்றை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் வெளியிட்டது. அதில், சரக்குக் கப்பலை நோக்கி சுடுவதை பார்க்க முடிகிறது.
ஒப்பந்தம் ஏற்படாத வரை இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் என்று வெள்ளிக்கிழமை டிரம்ப் தெரிவித்தார்.
பிப்ரவரி 28 அன்று இரான் முழுவதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பித்தது, இதைத் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்தன. அதைத்தொடர்ந்து, இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாததையடுத்து, அமெரிக்க கடற்படை முற்றுகையை டிரம்ப் அறிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னுடைய பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வருவார்கள் என ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் தெரிவித்தார். தற்போது அமலில் உள்ள போர் நிறுத்தம் புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

பட மூலாதாரம், Centcom
வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், இந்த பேச்சுவார்த்தைக்கான குழுவில் ஜேடி வான்ஸ் தவிர, முந்தைய பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆலோசகர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னெர் ஆகியோரும் பங்கேற்பர் என்று தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் என வரும் செய்திகள் "உண்மையல்ல" என இரானிய அரசு செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையுடன் அதன் "அதிகபட்ச" கோரிக்கைகள் மற்றும் எச்சரிக்கையான சொல்லாடல்கள் ஆகியவை "பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவதை தடுத்துவிட்டதாகவும்" தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளன.

பட மூலாதாரம், US Central Command/X
கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இரானிய பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக, பிபிசியின் பாகிஸ்தான் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை பேசியதாக, அவருடைய அலுவலகம் வெளியிட்ட அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. அதில், இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க கடற்படையின் முற்றுகை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக இரான் அறிவித்தது.
ஹோர்மூஸ் நீரிணை வாயிலாகவே உலகின் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆகியவை கொண்டு செல்லப்படுகின்றன. சமீபத்திய மோதலால் அந்த நீரிணையில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தன, இதனால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன.
நீரிணை தொடர்பான எச்சரிக்கைகளால் இரானால் அமெரிக்காவை "மிரட்ட" முடியாது என, டிரம்ப் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், தெஹ்ரானில் உள்ள ஒவ்வொரு பாலம் மற்றும் மின் நிலையத்தையும் தகர்ப்போம் என டிரம்ப் எச்சரித்தார்.
"அவர்கள் (இரான்) ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது என் கடமை," என டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மற்றொரு ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களை தாக்கி, போர்நிறுத்தத்தை மீறுவதாகவும் அமெரிக்க அதிபர் இரான் மீது குற்றம் சாட்டினார். இதில், பிரெஞ்சு கப்பல் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பலும் அடங்கும்.
பிரெஞ்சு கப்பல் நிறுவனமான சிஎம்ஏ சிஜிஎம், தங்களின் கப்பல்களுள் ஒன்றின் மீது சுடப்பட்டதாக, ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தது. "எச்சரிக்கைக்காக சுடப்பட்டது" என அந்நிறுவனம் கூறியுள்ளது. பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களின்படி, சனிக்கிழமை பிரிட்டனுக்கு தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த செய்திகளும் இல்லை.
சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் ஒன்று மற்றும் சரக்குக் கப்பல் ஒன்று என இரு கப்பல்கள் தாக்கப்பட்டதாக, பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UK Maritime Trade Operations) தெரிவித்துள்ளது. இந்த கப்பல்கள் எந்த நாட்டுடன் தொடர்புடையவை என்பது குறித்த மேலதிக தகவல்களை அந்த கடல்சார் பாதுகாப்பு முகமை வழங்கவில்லை.
இதனிடையே, ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கொடி ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக, இந்தியா தெரிவித்துள்ளது.
மரைன்டிராஃபிக் எனும் கண்காணிப்பு தளம் வழங்கிய தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கியது.
ஐஆர்ஜிசியுடன் தொடர்புடைய தஸ்னிம் எனும் செய்தி முகமை கூறுகையில், "போட்ஸ்வானா மற்றும் அங்கோலா கொடி பொருத்தப்பட்ட" இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஹோர்மூஸ் வாயிலாக பயணிக்க முயன்ற நிலையில், "இரான் ஆயுதப் படைகளின் தக்க நேரத்திலான நடவடிக்கையால் தன் பாதையை மாற்றி அவை பின்வாங்க வேண்டியிருந்தது," என தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































