You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாட்ரிக் தோல்வியடைந்த சிஎஸ்கே போட்டியைத் தவறவிட்டது எங்கே?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றிருக்கிறது. ஆர்சிபி விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிராக விளையாடிய கடைசி 4 போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்கிறது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது.
அதை சேஸ் செய்த சிஎஸ்கே 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நிதானமாகத் தொடங்கி அதிரடிக்கு மாறிய ஆர்சிபி
ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்தது. ஆடுகளம் சற்று ஈரப்பதமாக இருந்தது. புதிய பந்து நன்கு பௌலர்களுக்கு உதவியதால் ஆர்சி பேட்டர்கள் சற்று கவனமாக ஆடினார்கள். அதனால், அந்த அணி பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் இந்த கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தனர்.
கோலி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியில் அவர் பெற்றார்.
அதன் பின்னர் வந்த படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார், சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 19 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதற்கிடையே 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த சால்ட் ஆட்டமிழந்தார்,
ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் களம் கண்ட டிம் டேவிட், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அவர் வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 70 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்த சீசனில் இதுதான் ஒரு அணி எடுத்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர்.
டெத் ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. அனைத்து பௌலர்களும் பெரும்பாலான பந்துகளை 'ஸ்லாட்டில்' வீசினர். மேலும், தொடர்ச்சியாக வேகமான பந்துகளையே வீசினார்கள். லென்த்திலேயோ, வேகத்திலேயோ அவர்கள் பெரிதாக மாற்றங்கள் செய்யவே இல்லை. போட்டியின்போது வர்ணனையில் இருந்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் முன்னாள் வீரர் ஃபாஃப் டுப்ளெஸி, சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சாளர்கள் ஸ்லோயர் பால்களே வீசவில்லை என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
16 முதல் 20 வரையிலான 5 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி 97 ரன்கள் எடுத்தது. இந்த 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி 4 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் விளாசியது.
ஏமாற்றிய சூப்பர் கிங்ஸ் டாப் ஆர்டர்
பெரிய இலக்கை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் டாப் ஆர்டர் ஏமாற்றமே கொடுத்தது.
முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார் ஜேக்கப் டஃபி. அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆயுஷ் மாத்ரே அவுட் ஆனார். மூன்றாவது ஓவரில் மற்றொரு ஓப்பனருமான சஞ்சு சாம்சனும் பெவிலியன் திரும்பினார். அதனால் 30/3 என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது சூப்பர் கிங்ஸ்.
நான்காவது வீரராகக் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் விக்கெட்டுகள் வீழ்ந்ததைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக விளையாடினார். புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, அபினந்தன் சிங் ஆகியோரின் பந்துவீச்சுகளை பதம் பார்த்த அவர், பவர்பிளே முடிவிலேயே தன் அரைசதத்தை நிறைவு செய்தார்.
பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், குருனால் பாண்டியாவின் முதல் பந்தையே அடித்து ஆட நினைத்து இறங்கி வந்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர், 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்தார்.
கார்த்திக் ஷர்மாவும் அதே ஓவரில் வெளியேற 84/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நம்பிக்கை கொடுத்த பிரஷாந்த் வீர்
மிடில் ஓவர்களில் நம்பிக்கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் ஷிவம் துபேவும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்திருந்தாலும் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது சிஎஸ்கே.
அதன்பிறகு 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரஷாந்த் வீர் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த இணை 5.2 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பிரஷாந்த் வீர் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 6 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடித்தார்.
ஓரளவு அதிரடி காட்டிய ஓவர்டன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பௌலர்களில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் பல கட்டங்களில் ரன் எடுத்ததில் ஆர்சிபி-யை விட சூப்பர் கிங்ஸ் முன்னாலேயே இருந்தது.
- பவர்பிளே முடிவில்: ஆர்சிபி 51/1 - சிஎஸ்கே 77/3
- 10 ஓவர்கள் முடிவில்: ஆர்சிபி 91/1 - சிஎஸ்கே 109/6
- 15 ஓவர்கள் முடிவில்: ஆர்சிபி 153/3 - சிஎஸ்கே 165/6
ஆனால், இந்த கட்டங்களில் அதிக விக்கெட்டுகளை இழந்திருந்த காரணத்தால் சிஎஸ்கே அணியால் போட்டியில் நீடித்திருக்க முடியவில்லை. சிஎஸ்கே பௌலர்கள் டெத் ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்தது, ஒட்டுமொத்தமாக பேட்டர்கள் மீதான நெருக்கடியை அதிகப்படுத்தியது. அது விரைவில் விக்கெட்டுகளை இழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
தோல்விக்குப் பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் பேட்டிங் செய்த விதம் குறித்து நானும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். சர்ஃபராஸ், ஓவர்டன், பிரஷாந்த் வீர் மற்றும் துபே ஆகியோர் சிறப்பாகப் போராடினார்கள். நான் இன்னும் கொஞ்சம் பங்களித்திருந்தால், ஒருவேளை முடிவு மாறியிருக்கலாம். இன்றைய தோல்விக்கு நிச்சயம் நான்தான் பொறுப்பு." என்று கூறினார்.
புவனேஷ்வர் 200*
இந்தப் போட்டியில் ஆயுஷ் மாத்ரே விக்கெட்டை வீழ்த்தியபோது 200 ஐபிஎல் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் புவனேஷ்வர் குமார்.
200 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் யுஸ்வேந்திர சஹல்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார் புவனேஷ்வர் குமார்.
2011ம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய புவனேஷ்வர் குமார், இதற்கு முன் புனே வாரியர்ஸ் இந்தியா (2011 - 2013), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014 - 2024) ஆகிய அணிகளுக்கு விளையாடினார். 2025 சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை ஒப்பந்தம் செய்தது.
முன்னதாக 2009 - 2010 காலகட்டத்திலும் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்தார். ஆனால், அவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
2016, 2017 என தொடர்ந்து இரண்டு ஐபிஎல் சீசன்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்குக் கொடுக்கப்படும் பர்ப்பிள் கேப்பை அவர் வென்றார். இதுவரை தொடர்ந்து 2 சீசன்கள் பர்ப்பிள் கேப் வென்றிருக்கும் ஒரே பௌலர் அவர்தான்.
2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோடும், 2025ல் ஆர்சிபி-யோடும் அவர் ஐபிஎல் கோப்பை வென்றிருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
- யுஸ்வேந்திர சஹல் - 224
- புவனேஷ்வர் குமார் - 202
- சுனில் நரைன் - 193
- பியூஷ் சாவ்லா - 192
- ரவிச்சந்திரன் அஷ்வின் - 187
போட்டிக்குப் பிறகு இந்த வெற்றி பற்றிப் பேசிய புவனேஷ்வர் குமார், "இது ஒரு சவாலான ஆடுகளம். சில பந்துகள் நின்று வந்தன, பிறகு திடீரென்று இது பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்று தோன்றியது. நாங்கள் எங்களது அடிப்படை யுத்திகளைப் பின்பற்றினோம். மைதானம் மிகவும் ஈரமாக (கனமாக) இருந்தது. எனக்குத் தசைப்பிடிப்பும் ஏற்பட்டது, அதனால் திட்டத்தை எளிமையாக வைத்துக்கொண்டு பிட்ச்சில் பந்தை நன்றாகக் குத்தி வீச முயன்றேன்." என்று கூறினார்.
டாஸில் என்ன நடந்தது?
பந்துவீச்சை தேர்வு செய்த ருதுராஜ் கெய்க்வாட், "நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம். இது அதிக ரன்கள் எடுக்கக்கூடிய மைதானம். ஆடுகளம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அவர்களை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முயற்சிப்போம். தோனி மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார், சில நேரங்களில் அதற்கு அவகாசம் தேவைப்படும், அவர் விளையாடத் தயாராக இருந்தால், அது விரைவில் நடக்கும். முதல் போட்டி ஏமாற்றமளித்தது, ஆனால் இரண்டாவது போட்டியில் எங்கள் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்." என்று கூறினார்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஆனால் ஆடுகளம் கடினமாகத் தெரிவதால் பேட்டிங் செய்வதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு புதிய ஆடுகளம். கடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள், அதை இங்கேயும் தொடர நினைக்கிறோம். கடந்த போட்டியில் அனைவரும் விளையாடிய விதம் அபாரமானது, ஒவ்வொருவருக்கும் தங்கள் பொறுப்பு குறித்து தெளிவு இருந்தது, மேலும் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நாங்கள் அதே அணியுடன் களமிறங்குகிறோம்." என்றார்.
விளையாடும் வீரர்கள் யார்?
ஆர்சிபி எந்த மாற்றங்களும் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆடாத ஜேமி ஓவர்டன் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பிளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, அபினந்தன் சிங்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சுயாஷ் ஷர்மா, ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, பிரஷாந்த் வீர், ஜேமி ஓவர்டன், மேட் ஹென்றி, நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அஹமது.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ணா கோஷ், கார்த்திக் ஷர்மா, அகீல் ஹொசைன், மேத்யூ ஷார்ட்.
நேருக்கு நேர்
2025 சீசன் வரை ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இதுவரை 36 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் 13 போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 22 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
தற்போது 37 போட்டிகளில் 22-14 என சூப்பர் கிங்ஸ் முன்னிலை வகிக்கிறது.
கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தங்கள் ஹோம் கிரவுண்டில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ தங்கள் முதலிரு போட்டிகளில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நீயூஸ்ரூம் வெளியீடு