இஸ்ரேல் தனது ராணுவ வலிமையால் மட்டுமே இரானை வெல்ல முடியாது - ஏன் தெரியுமா?

    • எழுதியவர், லூசி வில்லியம்சன்
    • பதவி, ஜெருசலேம்
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை இணைக்கும் நெடுஞ்சாலையில், தற்போது இஸ்ரேலிய கொடிகளுக்கு இணையாக அமெரிக்க கொடிகளும் பறப்பதைக் காண முடிகிறது. இரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்கா ஆற்றிய பங்குக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவிக்கும் ஒரு வழியாகவே இது பார்க்கப்படுகிறது.

போர் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே தனது பதவியில் இருந்து விலகிய, இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹானெக்பி, நிலைமைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை விளக்கினார். "இரானிடம் இருந்து வரும் 'நம்பகமான ராணுவ அச்சுறுத்தலை' அங்கீகரிக்க வேண்டுமென மட்டுமே நாங்கள் முன்பு அமெரிக்க நிர்வாகங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தோம்," என்றார் அவர்.

மேலும் அவர், "இரானின் திறன்களைக் குறைப்பதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் இரவும் பகலும் இணைந்து உழைத்து வருகின்றன என்பது, என் மிகச் சிறந்த கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட ஓர் யதார்த்தமாகும்," என்று குறிப்பிட்டார்.

அதாவது, முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்காவிடம் இருந்து வலுவான ஆதரவைப் பெறுவதற்கு இஸ்ரேல் சிரமப்பட்டது; ஆனால் இப்போது இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக இணைந்து செயல்படுகின்றன. இது நடக்கும் என்று அவர் ஒருபோதும் கற்பனைகூடச் செய்து பார்த்ததில்லை என்கிறார்.

இரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைவதாக அமெரிக்கா எடுத்த முடிவு, இஸ்ரேலுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும் தத்தமது பலத்திற்கு ஏற்ப இலக்குகளைப் பிரித்துக்கொண்டு, பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் முன்பு குறிப்பிட்டிருந்ததைப் போல, இரானுடனான இந்தப் போர் இஸ்ரேலின் பிற பிராந்திய பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. இரானில் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளை முடித்துக் கொள்வது அல்லது குறைத்துக் கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வரும் நிலையிலும், காஸா, சிரியா போன்ற பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் இப்போதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளையில், தெற்கு லெபனானில் உள்ள ஒரு பரந்த நிலப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இரானின் நட்பு அமைப்பான ஹெஸ்பொலாவிடம் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தப் பகுதி ஒரு 'பாதுகாப்பு மண்டலமாக' (buffer zone) மாற்றப்பட்டு வருகிறது.

ஹெஸ்பொலாவின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகள் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று இஸ்ரேல் கருதும் வரை, இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்ட "பாதுகாப்பு மண்டலத்திற்குள்" வசிக்கும் சுமார் ஆறு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லைக்கு அருகிலுள்ள லெபனான் கிராமங்களில் அமைந்துள்ள வீடுகளை இடித்துத் தள்ளுமாறும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலிய படைகள் முன்பு காஸா பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையைப் போன்றதே இதுவும். காஸாவில் முழுமையான சமூகமே அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடிவு செய்தாலும்கூட, ஹெஸ்பொலா போன்ற பிராந்திய எதிரிகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது நேரடி ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதை சாச்சி ஹானெக்பி தெளிவாகத் தெரிவித்தார்.

இரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள அமெரிக்கா விரைவில் முடிவெடுக்கக்கூடும் என்று சாச்சி ஹானெக்பி விளக்கினார். "இரானின் அணுசக்தித் திறன்களுடன் தொடர்புடைய இலக்குகள் இனி ஏதும் இல்லை என்று டிரம்ப் முடிவெடுக்கக்கூடும், மேலும் அவர் ஒருவித போர் நிறுத்தத்தை விரும்பக்கூடும். அவர் எத்தகைய முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்," என்றும் அவர் என்னிடம் கூறினார்.

"ஆனால் நாங்கள் லெபனானில் எங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வோம்" என்று கூறிய அவர், இஸ்ரேலின் நடவடிக்கைகள் முழுமையாக நின்றுவிடாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

"நாங்கள் அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம். அதற்கு அமெரிக்கா எங்களிடம் 'வேண்டாம்' என்று சொல்லாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறினார் அவர்.

லெபனான் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, இஸ்ரேலின் சமீபத்திய ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து லெபனானில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளையில், போர் தொடங்கியதில் இருந்து இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் ஏறக்குறைய 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இரான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் ஒட்டுமொத்த ராணுவ உத்தியும் மாறியது. முன்னதாக, இஸ்ரேல் தனது எதிரிகளை "கட்டுக்குள் வைக்கும்" கொள்கையைப் பின்பற்றி வந்தது. அதாவது அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அவ்வப்போது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதே அந்தக் கொள்கையாக இருந்தது. ஆனால் இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் "முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்" என்னும் புதிய உத்திக்கு மாறியது. அதாவது, ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காக எதிரிகள் மீது தான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்துவதே அந்த உத்தி.

உத்தியில் ஏற்பட்ட இந்த மாற்றம், இஸ்ரேலை இரானுடன் நேரடி மோதல் சூழலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. காஸா, சிரியா, லெபனான் போன்ற பகுதிகளில் இஸ்ரேல் "பாதுகாப்பு மண்டலங்கள்" என்று அழைக்கும் பகுதிகளை உருவாக்குவதற்கும் இது வழிவகுத்துள்ளது.

இவை அண்டை நாடுகளின் பகுதிகளில் இருந்து இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பரந்த நிலப்பரப்புகளாகும். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் பகுதிகள் தேவைப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. இருப்பினும், ராணுவ வலிமை மட்டுமே நீண்டகால அமைதியை நிலைநாட்டப் போதுமானதாக இல்லை என்பதையும் இந்தச் சூழல் உணர்த்துகிறது.

யூதர்களின் 'பாஸ்ஓவர்' (Passover) பண்டிகைக்குச் சற்று முன்னதாக, செவ்வாய்க் கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியபோது, தெஹ்ரானில் உள்ள அரசாங்கத்திற்கு எதிராக இஸ்ரேல் 10 "பெரிய இழப்புகளை" ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். "எல்லைகளுக்கு அப்பால், அதாவது காஸா, சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கியிருப்பதே" அந்தப் பேரிழப்புகளில் ஒன்று என்றும் அவர் கூறினார். சுருக்கமாகக் கூறுவதெனில், இஸ்ரேல் இரானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், தனது சொந்த எல்லைகளுக்கு அப்பாலும் தனது பாதுகாப்பு இருப்பை விரிவுபடுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனின் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டில் மத்திய கிழக்கு வியூக நிபுணராகப் பணியாற்றும் புர்கு ஓசெலிக், இஸ்ரேலின் "பாதுகாப்பு மண்டல" வியூகம் ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது என்று விளக்குகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த அணுகுமுறை இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ள கால அவகாசத்தை வழங்குகிறது. இது 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலின் பாதுகாப்புச் சிந்தனையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்துடன் தொடர்புடையது.

இருப்பினும், இந்தப் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்படுவதன் காரணம் குறித்து இஸ்ரேலுக்குள் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அதுகுறித்துப் பேசியபோது, "இந்தப் பாதுகாப்பு மண்டலங்கள் இறுதியில் நிரந்தர ஆக்கிரமிப்புக்கோ அல்லது இஸ்ரேலின் எல்லைகள் விரிவாக்கத்திற்கோ வழிவகுக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது தீவிர வலதுசாரிகளால் நீண்ட காலமாக முன்னிறுத்தப்படும் ஒரு சித்தாந்தக் கண்ணோட்டம்," என்று கூறினார். அவரது கூற்றுப்படி, இஸ்ரேல் பிற்காலத்தில் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமல், அவற்றைத் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாக வைத்திருக்க முயலக்கூடும் என்று சில குழுக்கள் நம்புகின்றன.

அதே நேரத்தில், இஸ்ரேலில் உள்ள மற்றவர்கள் மிகவும் நடைமுறை சார்ந்த கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். "லெபனான், காஸா, சிரியாவில் இப்போது நடப்பது ஒரு பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறை எனவும், இஸ்ரேல் பாதுகாப்பாக உணர்ந்தவுடன் இவை அகற்றப்படலாம் எனவும் மிகவும் யதார்த்தமான குரல்கள் வாதிடுகின்றன."

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளிகளுடன் தொடர்ச்சியான மோதல்களுக்கு மத்தியில் நாட்டை வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும், அடுத்த போர் நீண்டகால பாதுகாப்பைக் கொண்டு வரும் எனவும் இஸ்ரேலின் எதிரிகளைத் தோற்கடிக்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

உதாரணமாக, வெறும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, இரானுடனான இஸ்ரேலின் முந்தைய போருக்குப் பிறகு, நெதன்யாகு நாட்டு மக்களிடம், "தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும் ஒரு வரலாற்று வெற்றியை" அடைந்துவிட்டதாகவும், இரானின் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்பட்ட "அச்சுறுத்தல்களை" அகற்றிவிட்டதாகவும் கூறினார்.

ஆனால் ஒவ்வொரு மோதலுக்கும் முன்னும் பின்னும் இத்தகைய வலுவான கூற்றுகள் இருந்தபோதிலும், இஸ்ரேலில் உள்ள பலருக்கு யதார்த்தம் மிகவும் வித்தியாசமாகவே இருக்கிறது. நீடித்த அமைதிக்குப் பதிலாக, சிலர் விவரிக்கும் ஒரு நிலையான அல்லது தொடர்ச்சியான போர்ச் சூழலை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய இஸ்ரேலின் அரசியல் ஆய்வாளர் டாலியா ஷெயின்ட்லின், "ஹெஸ்பொலா, ஹமாஸ் மற்றும் இரானை அழிப்போம் என்ற பிரமாண்டமான வாக்குறுதிகள் நிறைவேறவில்லை" என்று கூறுகிறார்.

இரானுடனான போர், பிராந்தியத்தில் இஸ்ரேல் புதிய கூட்டணிகளை உருவாக்க உதவும் என்று பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்திருந்ததாக டாலியா ஷெயின்ட்லின் கூறுகிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை, அது நடக்கவில்லை. மாறாக, ஏற்கெனவே இஸ்ரேலுடன் நட்பாக இருக்கும் அல்லது கூட்டணியாக மாறக்கூடிய அளவில் இருக்கும் நாடுகள் உள்படப் பல அரபு நாடுகள் இப்போது கவலை கொண்டுள்ளன.

"இது ஒருபோதும் நடப்பதில்லை. ஏனெனில் இஸ்ரேல் நிலப்பரப்பைக் கைப்பற்றக்கூடிய, கணிக்க முடியாத ஒரு போர் குணமிக்க சக்தியாக நடந்துகொள்கிறது," என்று இதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.

மேலும் அவர், "இரான் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலும், காஸா, லெபனான் மற்றும் சிரியாவுக்குள் அதன் அத்துமீறலும், இரான் குறித்த தங்களின் பொதுவான கவலையில் இஸ்ரேல் ஒரு நல்ல கூட்டாளி இல்லை, மாறாக அதுவோர் ஆபத்தான கூட்டாளி என்ற கவலையை உருவாக்குகிறது" என்று தெரிவித்தார். அதாவது, இரானுக்கு எதிரான ஒரு கூட்டாளியாக இஸ்ரேலை நம்புவதற்குப் பதிலாக, இந்த நாடுகள் தற்போது இஸ்ரேலைக் கண்டே அஞ்சுகின்றன.

பல ஆண்டுகளாக, இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது நெதன்யாகுவின் ஒரு முக்கிய அரசியல் செய்தியாக இருந்து வருகிறது. இரானுடனான போரின் ஆரம்ப நாட்களில், இஸ்ரேல் ஏற்கெனவே மத்திய கிழக்கை மாற்றி, அப்பகுதியில் தனது நிலையை வலுப்படுத்தி இருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலான சண்டைக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள அரசாங்கம் இன்னும் ஆட்சியில் உள்ளது. அது இன்னும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்கிறது. அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் கையிருப்பாகக் கொண்டுள்ளது. அதை மேலும் சுத்திகரித்தால், சுமார் ஒரு டஜன் அணுகுண்டுகளைத் தயாரிக்கப் போதுமானதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

போரின் தொடக்கத்தில், யூத இஸ்ரேலியர்கள் மத்தியில் ஆதரவு மிகவும் அதிகமாக இருந்தது. இஸ்ரேல் ஜனநாயக நிறுவனத்தின் ஒரு கருத்துக் கணிப்பின்படி, 90%க்கும் அதிகமாக ஆதரவு இருந்தது. ஆனால் அதன் பின்னர், ஆதரவு கிட்டத்தட்ட 20% புள்ளிகள் குறைந்துள்ளது. அப்படியிருந்தும், போரைத் தொடர்வதற்கு பிரதமருக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இருப்பினும், வரவுள்ள தேர்தல்களில் அவருக்கும் அவரது அரசியல் கட்சிக்கும் ஆதரவு பெரியளவில் அதிகரிக்கவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஷெய்ன்ட்லின் ஒரு பெரிய அரசியல் சிக்கலையும் சுட்டிக்காட்டுகிறார். "ராஜதந்திரத்தை முன்னெடுப்பது, பிராந்தியத்தில் உள்ள நாடுகளை வலுப்படுத்துவது, அரபு நாடுகளுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்றுவது, பாலத்தீன பிரச்னையைத் தீர்ப்பது போன்ற மாறுபட்ட திட்டங்களை எந்தவொரு அரசியல் எதிர்க்கட்சித் தலைவரும் முன்வைக்கவில்லை என்பதே பிரச்னை."

இதற்கிடையில், சாச்சி ஹானெக்பி இஸ்ரேலின் நிலைப்பாட்டை வேறுவிதமாக விளக்குகிறார். அமெரிக்காவால் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தாலும், இஸ்ரேலால் அவ்வாறு செய்ய இயலாது என்கிறார் அவர். அவரைப் பொறுத்தவரை, "இரானுடன் எதைப் பற்றியும் நம்மால் ஓர் உடன்பாட்டிற்கு வர இயலாது. ஏனெனில் அவர்கள் நம் இருப்பையே அங்கீகரிப்பதில்லை. ஏவுகணைகள் மூலமாகவோ அல்லது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பதிலடியாக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாகவோ மட்டுமே இரு நாடுகள் இடையிலான உரையாடல் நிகழ்கிறது."

அதாவது அவரது கூற்றுப்படி, இரான் இஸ்ரேலை ஒரு நாடாகவே ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்றவை. "இரு தரப்பினரும் தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே" என்கிறார் அவர்.

லெபனான் மற்றும் காஸாவில் முன்னர் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், அந்தப் போர் நிறுத்த காலங்களிலும்கூட, இவ்விரு பகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தது.

கடந்த மாதம், இரான் தரப்பில் நின்று போரில் இணைய ஹெஸ்பொலா அமைப்பு முடிவெடுத்தது. இது இஸ்ரேலை லெபனானில் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபடத் தூண்டியது. அதேவேளையில், காஸா பகுதியோ இன்னும் ஒரு நிச்சயமற்ற சூழலிலேயே இருந்து வருகிறது. அங்கு தெளிவான அமைதியோ அல்லது ஸ்திரத்தன்மையோ நிலவவில்லை.

காஸாவை புனரமைப்பதற்கான முயற்சிகள் இரண்டு முக்கிய விவகாரங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளால் தாமதமாகி வருகின்றன. அவை, ஹமாஸ் அமைப்பு எப்போது, எவ்வாறு தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பது, இஸ்ரேலிய படைகள் அந்தப் பகுதியில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பதுமாகும்.

இரானுடனான முழு அளவிலான போர் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறை உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் நடந்து வரும் சண்டைகள், இஸ்ரேலிய மக்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இஸ்ரேலில், குடிமக்கள் பலர் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நடைமுறை அமலில் உள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான இஸ்ரேலிய குடும்பங்கள் இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்படுவதுடன், அதன் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

இஸ்ரேல் பல மோதல் களங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், லட்சக்கணக்கான ரிசர்வ் படை வீரர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் அல்லது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, இந்த ரிசர்வ் படை வீரர்களில் சிலர் ஏற்கெனவே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை ராணுவப் பணிகளைச் செய்து முடித்துள்ளனர். இவர்களில் சிலர் தற்போது மீண்டும் ராணுவப் பணியாற்ற மறுப்பு தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 45 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், இஸ்ரேலில் உள்ள பலரும் முடிவற்ற ஒரு போரை விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து பெருமளவிலான நிதியைச் செலவிடுவதுடன், ஏராளமான வீரர்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்தி வருகிறது.

இரானுடனான போர் என்பது, நாட்டின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய தீவிரமான சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு வழியாகவே முன்வைக்கப்பட்டது. ஆனால், இஸ்ரேல் முன்னதாக நடத்திய போர்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தப் பிரச்னைகளை முழுமையாகத் தீர்ப்பதற்கு வெறும் ராணுவ பலம் மட்டுமே போதுமானதாக இருக்காது என்றே தோன்றுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு