You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இரான் கூறுகிறது.
அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான சிஎன்என் இந்தச் சம்பவம் பற்றி வெளியிட்டுள்ள செய்தியில், "இரானுடனான போர், அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் ஏற்கெனவே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதிய மற்றும் மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.
இரான் வான் பரப்பில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக முதலில் தகவல் வந்தது எனக் கூறப்பட்டுள்ள அந்தச் செய்தியில் வெள்ளியன்று மேலும் ஒரு அமெரிக்க போர் விமானத்தை இரான் இலக்கு வைத்ததாக தகவல் கிடைத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அமெரிக்கா ராணுவ மேலாதிக்கம் கொண்டுள்ள ஒரு மோதலில், இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்த சமச்சீரற்ற போரின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அதன் செலவினங்கள் அமெரிக்க பொதுமக்களால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறிவிட்டது," என்று சிஎன்என் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், "இந்தச் சம்பவங்கள், இரான் மீது முழு வான் மேலாதிக்கம் கொண்டிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருவதை கேள்விக்குள்ளாக்குகிறது. கடந்த மாதம் முழுவதும் அமெரிக்கா கட்டமைத்து வந்த ஊடுருவ முடியாத பாதுகாப்பு என்கிற பிம்பத்தையும் உடைத்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அமெரிக்க ஆதிக்கம் என்கிற கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது"
இரானின் கூற்றைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ள என்பிசி நியூஸ், "சமீபத்திய மோதலில் இரானுக்குள் ஒரு அமெரிக்க விமானம் விழுந்திருப்பது இதுவே முதல்முறை. இரானின் வான்பரப்பு மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் என்கிற கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது"
மேலும் அந்த செய்தியில், "இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்வதற்கு இரானுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இந்தப் போரில் டிரம்ப் வெற்றியை அறிவித்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறக்கவில்லை என்றால் இந்தப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அச்சுறுத்துவதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு புதிய படைகளை அனுப்பியுள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்க விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இரான் கூறுகிறது என்றும் இது இரான் வான்பரப்பு மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆதிக்கம் பற்றிய தகவல்கள் மீது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது.
"இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு நடவடிக்கையின் முதன்மையான நோக்கம் என்பது இரானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழிப்பது மற்றும் பலவீனப்படுத்துவதாக இருந்தது. ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதும் பதில் தாக்குதல் நடத்தும் திறனை இரான் தக்கவைத்துள்ளது" என்றும் என்பிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"டிரம்ப் நிர்வாகம் மீது எழும் கேள்விகள்"
சேதமடைந்ததாகக் கூறப்படும் அமெரிக்க போர் விமானத்தின் புகைப்படத்தை இரானிய அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவிக்கிறது.
ஆனால் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் ஃபாக்ஸ் நியூஸ் கூறுகிறது.
ஒரு போர்க்களத்தில் வான்பரப்பை கட்டுப்படுத்துவது என்பது ஆபத்தே இல்லை என அர்த்தமாகாது என வல்லுநர்கள் கூறுவதாக குறிப்பிடும் ஃபாக்ஸ் நியூஸ், விமானப்படையின் எஃப்-15இ போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது இரான் வான் பரப்பின் மீது மேலாதிக்கம் செலுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் கோரி வருவது பற்றி கேள்விகளை எழுப்புவதாகவும் பதிவு செய்துள்ளது.
"வரலாற்று ரீதியாகவும் பார்த்தால் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நான்கு வார சண்டைக்குப் பிறகு ஒரு போர் விமானத்தை இழப்பது என்பது அசாதாரணமானது அல்ல," என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் டெப்டுலா வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
"இது, நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும், எந்த தடையும் இல்லாமல் உங்கள் வேலையை செய்வதற்கான திறன் உங்களுக்கு இருப்பதையே உணர்த்துகிறது," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் கூற்றுப்படி, ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்மில், 43 நாட்கள் சண்டையின்போது கூட்டணி படைகள் தினமும் ஒரு விமானத்தை இழந்துவந்தன.
1990-இல் குவைத் மீதான இராக்கின் தாக்குதலுக்குப் பிறகு இராக்கிற்கு எதிராக ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம் தொடங்கப்பட்டது.
"டிரம்புக்கு அரசியல் சவாலாக மாறலாம்"
இரானின் திறன்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தொடர்ந்து கூறி வந்ததாக ஏபிசி நியூஸ் தெரிவிக்கிறது.
இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு அமெரிக்க ராணுவத்தால் அழிக்கப்பட்டது என அவர் கூறியதாக ஏபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வெள்ளிக்கிழமை, இரான் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானமான எஃப்-15இ சுட்டு வீழ்த்தப்பட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் கூறுவது அவரின் கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது.
இந்தச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், "காணாமல் போன அமெரிக்க வீரரைத் தேடுவது அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் ஆபத்தான தருணமாக மாறிவிட்டது. இது காணாமல் போனவரை மட்டுமல்லாது அவரை மீட்கும் பணியில் உள்ள குழுவினரையும் இரானிய தாக்குதல் ஆபத்தில் நேரடியாக இட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதலில் எதிரியின் பகுதிக்குள் அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் இந்தச் சம்பவம் டிரம்புக்கு அரசியல் ரீதியாக சவாலாக மாறலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
"இரான் போரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாது தனது ஆதரவாளர்கள் மத்தியிலும் டிரம்ப் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்த வாரம் நிகழ்த்திய உரையில் போர் 'அதன் முடிவை நெருங்கி வருவதாக' டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகளை அந்தக் கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றன," என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சண்டைக்கு நடுவே தேடுதல் மற்றும் மீட்பு பணி என்பது அமெரிக்க ராணுவத்தின் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளுள் ஒன்று. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டர்களும் விமானமும் தரைக்கு மிகவும் நெருக்கமாக பறக்கும். இதில் எதிரியின் தாக்குதல்களுக்கு இலக்காகும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.
"இது மிகவும் ஆபத்தான பணி," என்கிறார் விமான மீட்பு பணிகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அமெரிக்க தளபதியாக ஜேம்ஸ் ஸ்லிஃப். "எதிரி நிலப்பரப்பில் ஒருவர் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ அவ்வளவு தூரம் அவரை பாதுகாப்பாக மீட்டெடுப்பது கடினமானது." என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், "தகவல் முழுமையாக இல்லையென்றாலும் இத்தகைய பணிகள் உடனடியாக தொடங்கப்படுகின்றன. ஏனெனில் அந்த வீரர் பிடிக்கப்பட்டால் எதிரி அதனை பரப்புரைக்காக பயன்படுத்தலாம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு