விண்வெளியிலிருந்து பார்க்கும் போது பூமி எப்படி இருக்கிறது? - ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த புகைப்படம்

    • எழுதியவர், சோபியா ஃபெரைரா சாண்டோஸ்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் 2 விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர்தரப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது .

விண்கலக் குழுவினர் தங்களின் இறுதி எஞ்சின் எரிப்பு செயல்பாட்டை முடித்து, நமக்கு மிக நெருக்கமான விண்வெளி அண்டை வீடான நிலவை நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கிய பிறகு, இந்த "அற்புதமான" படங்களை அந்தத் திட்டத்தின் கமாண்டர் ரீட் வைஸ்மேன் எடுத்ததாக நாசா கூறுகிறது.

விண்கலம் ஏவப்பட்ட இரண்டு நாட்கள், ஐந்து மணிநேரம் மற்றும் 24 நிமிடங்களுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், விண்கலக் குழுவினர் ஒட்டுமொத்தமாக "மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக" விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் கூறினார்.

'ஹலோ, வேர்ல்ட்' என்று அழைக்கப்படும் முதல் புகைப்படம், பரந்து விரிந்த நீல அட்லாண்டிக் பெருங்கடலைக் காட்டுகிறது.

பூமி சூரியனை மறைக்கும்போது வளிமண்டலத்தின் ஒளியாலும், இரு துருவங்களிலும் தோன்றும் பச்சை நிற துருவ ஒளிகளாலும் (அரோரா) இப்படம் சூழப்பட்டுள்ளது.

இதில் பூமி தலைகீழாகத் தோன்றுகிறது.

இடதுபுறத்தில் மேற்கு சஹாரா மற்றும் ஐபீரிய தீபகற்பமும், வலதுபுறத்தில் தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியும் தெரிகின்றன.

கீழ் வலதுபுறத்தில் பிரகாசமாகத் தெரியும் கோளை வெள்ளி என்று நாசா அடையாளம் கண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் விண்கலக் குழுவினர் நிலவை நோக்கிய பயணத்திற்கான 'டிரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' எரிப்புச் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பிறகு இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.

இந்த எரிப்புச் செயல்பாடு ஓரியன் விண்கலத்தைப் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேற்றியது. ஓரியன் விண்கலத்தில் இருந்த நான்கு விண்வெளி வீரர்களும் நிலவை நோக்கி 200,000 மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்க இலக்கு வைத்துள்ளனர்.

ஆர்ட்டெமிஸ் II தற்போது ஒரு மீள் பாதையில் உள்ளது. இந்தப் பாதை, விண்கலக் குழுவினரை நிலவின் மறுபக்கத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வரும். 1972-ஆம் ஆண்டிற்குப் பிறகு மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டிப் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது. விண்கலக் குழுவினர் ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவின் மறுபக்கத்தைக் கடந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் இறங்குவதன் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிப்புச் செயல்பாடு முடிந்ததும், புகைப்படங்கள் எடுப்பதற்காக விண்கலக் குழுவினர் ஜன்னலுக்கு அருகிலே இருந்து படங்களை எடுத்துக் கொண்டிருந்ததாக மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஜெர்மி ஹேன்சன் ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திடம் தெரிவித்தார்.

"நிலவின் ஒளியால் ஒளிரும் பூமியின் இருண்ட பகுதியின் அழகான காட்சியை நாங்கள் காண்கிறோம்," என்று அவர் கூறினார்.

விண்வெளியைப் பார்க்கும் ஆர்வத்தில் ஜன்னல்களில் கறை படிந்ததால், அவற்றை எப்படிச் சுத்தம் செய்வது என்று கேட்பதற்காக வைஸ்மேன் பின்னர் ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு மீண்டும் அழைத்தார்.

விண்கலத்திலிருந்து நமது கிரகத்தைப் படம் பிடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. அவ்வளவு தூரத்தில் புகைப்படம் எடுக்கும்போது 'எக்ஸ்போஷர்' அமைப்புகளைச் சரிசெய்வது சிரமமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"இது உங்கள் வீட்டின் பின்புறம் சென்று நிலவைப் படம் பிடிக்க முயல்வதைப் போன்றது. இப்போது அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கட்டுப்பாட்டு மையத்திடம் கூறினார்.

ஆனால் அது இப்போது ஒரு பிரச்னையாக இல்லை.

வைஸ்மேன் எடுத்த மற்றொரு புகைப்படம், பூமியை இரவு மற்றும் பகலாகப் பிரித்துக் காட்டுகிறது. ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான அந்த எல்லைக்கோடு 'டெர்மினேட்டர்' என்று அழைக்கப்படுகிறது.

பின்னர், பூமி கிட்டத்தட்ட முழு இருளில் மூழ்கியிருக்க, இரவில் மனிதகுலத்தின் மின்விளக்குகள் மினுமினுப்பதைக் காட்டும் மற்றொரு படத்தை நாசா வெளியிட்டது.

மேலும், 2026-இல் எடுக்கப்பட்ட பூமியின் தோற்றத்தையும், மனிதர்கள் கடைசியாக நிலவில் கால் பதித்த 1972-ஆம் ஆண்டு அப்பல்லோ 17 குழுவினர் எடுத்த அதே போன்ற ஒரு படத்தையும் நாசா அருகருகே வைத்து ஒப்பிட்டுக் காட்டியது.

"கடந்த 54 ஆண்டுகளில் நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், ஆனால் ஒரு விஷயம் மாறவில்லை. விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது பூமி அவ்வளவு அழகாக இருக்கிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு