ரூ.520 கோடி சொத்து மதிப்பு - வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டது என்ன?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தன்னுடைய வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
அந்த வேட்புமனுவில் தன்னுடைய பெயரில் 404 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மனைவி பெயரில் 15.5 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய பெயரில் 4 சொகுசு கார்கள் உட்பட 5 கார், ஒரு டிவிஎஸ் XL சூப்பர் இருசக்கர வாகனம் இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய பெயரில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 883 கிராம் தங்கம் மற்றும் 15 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களும், தன்னுடைய மனைவி பெயரில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 3132 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 135 கேரட் வைரம் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல தன்னுடைய பெயரில் சுமார் 115 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதையும் அதன் தற்போதைய சந்தை மதிப்பு 220 கோடி என்பதையும் வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலில் மனைவி சங்கீதா விஜய் 12.60 கோடி ரூபாய் கடனும், தந்தை சந்திரசேகர் 3 கோடி ரூபாய், தாய் சோபா 87 லட்சம், மகன் ஜேசன் விஜய் 8 லட்சம், தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் 3 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு இடைநிற்றலையும் தன்னுடைய வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.