You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்?
- எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இரான் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதிப்படுத்தப்பட்டால், பல தசாப்தங்களாகத் தொடரும் அமெரிக்காவின் போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இதுவே மிகவும் சமீபத்தியதாக இருக்கும்.
பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் (CBS) நியூஸ் தகவல்படி, விமானத்தில் இருந்த இரண்டாவது நபரைத் தேடும் பணி இரானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு (Combat Search and Rescue - CSAR) பணிகள், அமெரிக்க மற்றும் நட்பு நாட்டு ராணுவங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பணிகளிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணிகளாகக் கருதப்படுகின்றன.
அமெரிக்காவில், விமானப்படையின் எலிட் (Elite) பிரிவுகள் சிஎஸ்ஏஆர் (CSAR) நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாகப் பயிற்சி பெற்றுள்ளன. விமானங்கள் இழக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள போர் பகுதிகளுக்கு அருகில் அவர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்படுகிறார்கள்.
போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு என்றால் என்ன?
சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்ஏஆர் பணிகள் என்பது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விமானிகள் மற்றும் தனித்துவிடப்பட்ட துருப்புகள் உள்ளிட்ட உதவி தேவைப்படும் நபர்களைக் கண்டறிவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் அவர்களை மீட்பதற்கும் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஆகும்.
மனிதநேயப் பணிகளின் போதோ அல்லது பேரிடர்களுக்குப் பின்னரோ நடைபெறும் வழக்கமான தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மாறாக - சிஎஸ்ஏஆர் பணிகள் ஆபத்தான அல்லது மோதல்கள் நிறைந்த சூழலில் நிகழ்கின்றன.
சில சந்தர்ப்பங்களில், அதாவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு முயற்சியைப் போல - இந்த நடவடிக்கைகள் எதிரி நாட்டின் எல்லைக்குள் உள்ள தொலைதூர பகுதிகளில் கூட நிகழலாம்.
சிஎஸ்ஏஆர் பணிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தப்படுகின்றன, அவற்றுக்கு ஆதரவாக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அந்தப் பகுதியில் தாக்குதல்களை நடத்தவும் ரோந்துப் பணியில் ஈடுபடவும் மற்ற ராணுவ விமானங்கள் தயார் நிலையில் இருக்கும்.
இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு நடவடிக்கை போன்ற ஒன்றில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் அந்தப் பகுதியில் தேடும் பணியில் குறைந்தது 24 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' (Pararescue Jumpers - வான்வழி மீட்பு வீரர்கள்) ஈடுபடுவார்கள் என்று பாராரெஸ்க்யூ ஸ்குவாட்ரனின் முன்னாள் தளபதி ஒருவர் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் அவர்கள் விமானங்களில் இருந்து குதிக்கத் தயாராக இருப்பார்கள் என்றும், தரையிறங்கியதும் காணாமல் போன ராணுவ வீரரைத் தொடர்பு கொள்வதே அவர்களின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அவர்களைக் கண்டுபிடித்தவுடன், பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ் தேவைப்பட்டால் மருத்துவ உதவி வழங்குவார்கள், எதிரியிடமிருந்து தப்பித்து, தாங்கள் மீட்கப்படக்கூடிய ஒரு இடத்திற்குச் செல்வார்கள் என்று சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.
"இது மிகவும் திகிலூட்டக்கூடிய மற்றும் அபாயகரமான ஒரு பணி என்று சொல்வது கூட அதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும்," என்று அந்த முன்னாள் தளபதி சிபிஎஸ் நியூஸிடம் கூறினார்.
"உலகம் முழுவதும் இதைச் செய்வதற்காக தான் அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் விமானப்படையின் 'சுவிஸ் ஆர்மி நைஃப்ஸ்' (Swiss Army knives - பன்முகத் திறன் கொண்டவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்." என்கிறார் அவர்.
வெள்ளிக்கிழமை இரானில் இருந்து வெளிவந்த சரிபார்க்கப்பட்ட வீடியோ ஒன்றில், இரானின் குசெஸ்தான் மாகாணத்திற்கு மேலே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் இயங்குவதைக் காண முடிந்தது.
சிஎஸ்ஏஆர் குழுக்கள் யாரை மீட்க முயல்கின்றனரோ, அதே அமெரிக்க வீரர்களைக் கண்டறிய எதிரிப் படைகளும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் என்பதால், இந்தப் பணிகள் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டவை.
முன்னாள் அமெரிக்க கடற்படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் நிபுணர் ஜொனாதன் ஹாக்கெட், பிபிசியின் 'வேர்ல்ட் டுநைட்' (World Tonight) நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு மீட்புக் குழுவின் முன்னுரிமை 'உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைத் தேடுவதாக' இருக்கும் என்று கூறினார்.
"தேடப்படும் அந்த நபர் கடைசியாக இருந்ததாகத் தெரிந்த இடத்திலிருந்து, அவர்கள் பின்னோக்கிச் சென்று தேடுவார்கள்; ஒரு கடினமான நிலப்பரப்பில் வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் அந்த நபர் நகரக்கூடிய வேகத்தின் அடிப்படையில் அவர்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்துவார்கள்," என்று ஹாக்கெட் கூறினார்.
"இந்த வகையான மீட்புப் பணி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சிறப்பு உதவி தேவைப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்," என்று ஹாக்கெட் கூறினார்.
"இதில் அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் குழுக்களுடன் முன்னதாகவே தொடர்பு கொள்ளப்பட்டிருக்கலாம், இது ஏதேனும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது."
சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகளின் வரலாறு
வான்வழிப் போர்க்கால மீட்புப் நடவடிக்கைகளுக்கென நீண்ட வரலாறு உள்ளது. முதலாம் உலகப் போரின்போது, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் சக வீரர்களை மீட்பதற்காக பிரான்சில் விமானிகள் தன்னிச்சையாக விமானங்களைத் தரையிறக்கிய காலத்திலிருந்து இது தொடங்குகிறது.
அமெரிக்க ராணுவத்தின் பாராரெஸ்க்யூ பிரிவுகளின் வரலாறு 1943-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. அப்போது, இரண்டு போர்கால மருத்துவர்கள் காயமடைந்த வீரர்களுக்கு உதவ அப்போதைய பர்மாவுக்குள் (தற்போது மியான்மர்) பாராசூட் மூலம் குதித்தனர்.
உலகின் முதல் ஹெலிகாப்டர் மீட்பு ஒரு வருடம் கழித்து நடந்தது, அப்போது ஒரு அமெரிக்க லெப்டினன்ட் ஜப்பானியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து நான்கு வீரர்களை மீட்டார் என்று ஸ்மித்சோனியனின் ஏர் & ஸ்பேஸ் இதழ் கூறுகிறது. இந்தச் சம்பவம் போரில் முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதையும் குறித்தது.
மோதல்கள் முடிந்த உடனேயே அமெரிக்காவில் முறையான தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவுகள் முதன்முதலில் நிறுவப்பட்டன. ஆனால் நவீன சிஎஸ்ஏஆர் வியட்நாம் போரின் போதுதான் தொடங்கியது.
பேட் 21 (Bat 21) என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையில், வட வியட்நாமியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் விமானியை மீட்க முயன்றபோது பல விமானங்கள் மற்றும் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
அந்தப் போரின் காரணமாக, சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகள் பெருமளவில் விரிவுப்படுத்தப்பட்டன, அவை மேலும் பெரிய அளவிலும் சிக்கலானதாகவும் மாற்றப்பட்டன. அந்த அனுபவம் ராணுவத்தின் யுக்திகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்த உதவியது, அவையே பிற்காலத்தில் நவீன மீட்பு நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தன.
அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள்
ஒவ்வொரு அமெரிக்க ராணுவப் பிரிவும் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட சிஎஸ்ஏஆர் திறன்களைக் கொண்டிருந்தாலும், ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது.
முக்கியமாக இந்தப் பணி ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் ஒரு பகுதியான 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படுகிறது.
பாராரெஸ்க்யூவின் அதிகாரப்பூர்வ முழக்கம் 'மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் இவற்றைச் செய்கிறோம்' (These Things We Do, That Others May Live) என்பதாகும்; அவர்களின் பணி, அமெரிக்கப் படை வீரர்களுக்கு அவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று வழங்கப்பட்ட பரந்துபட்ட வாக்குறுதியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
இவர்கள், போர் வீரர்களாகவும் மருத்துவ உதவியாளர்களாகவும் உயர்தர பயிற்சி பெற்றவர்கள், மேலும் அமெரிக்க ராணுவத்திலேயே மிகவும் கடினமானதாகக் கருதப்படும் தேர்வு மற்றும் பயிற்சிப் பாதைகளில் ஒன்றைக் இவர்கள் கடந்து வருகிறார்கள்.
ஆரம்பம் முதல் முடிவு வரை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் இந்தத் தேர்வு மற்றும் பயிற்சி செயல்பாட்டில், பாராசூட் மற்றும் டைவிங் பயிற்சி, அத்துடன் நீருக்கடியில் அழித்தல் (underwater demolition) தொடர்பான அடிப்படை பயிற்சி, கடினமான சூழல்களில் உயிர் பிழைத்தல், எதிர்ப்பு மற்றும் தப்பித்தல் பயிற்சி மற்றும் முழுமையான சிவில் மருத்துவ உதவியாளர் படிப்பு ஆகியவை அடங்கும்.
போர்க்கள மருத்துவம், சிக்கலான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த சிறப்புக் கல்வி மற்றும் பயிற்சிகளையும் அவர்கள் பெறுகிறார்கள்.
களத்தில், இந்த அணிகள் சிறப்புப் போர்கால மீட்பு அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன; மீட்புப் பணிகளைத் திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது மற்றும் செயல்படுத்துவது இவர்களின் பொறுப்பாகும்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
சமீபத்திய அமெரிக்க மீட்பு நடவடிக்கைகள்
இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் முழுவதும் பாராரெஸ்க்யூ குழுக்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்த அல்லது வெளியேற்றப்பட வேண்டிய அமெரிக்க மற்றும் நட்பு நாட்டுத் துருப்புகளை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான நடவடிக்கைகளை இவை மேற்கொண்டன.
2005-ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க நேவி சீல் வீரரை மீட்பதில் விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஈடுபட்டன; தனது குழு திடீரென தாக்கப்பட்டு, குழுவின் பிற மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிய கிராமம் ஒன்றில் அந்த வீரர் தஞ்சம் புகுந்திருந்தார். அவரை மீட்ட இந்தச் சம்பவம் பின்னர் 'லோன் சர்வைவர்' (Lone Survivor) என்ற ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் விமானிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் சமீபத்திய தசாப்தங்களில் அரிதாகவே நிகழ்ந்துள்ளன.
1999-ஆம் ஆண்டில், செர்பியாவின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-117 (F-117) ஸ்டெல்த் போர் விமானத்தின் விமானி பாராரெஸ்க்யூ வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.
1995-ஆம் ஆண்டில் போஸ்னியாவில் நடந்த ஒரு புகழ்பெற்ற சம்பவத்தில், அமெரிக்க விமானி ஸ்காட் ஓ'கிராடி, தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகும் ஆறு நாட்கள் பிடிபடாமல் தப்பித்தார். பின்னர் விமானப்படை மற்றும் கடற்படைப் படையின் கூட்டு சிஎஸ்ஏஆர் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு