You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூ.167 கோடிக்கு ஏலம் போன யசோதா, கண்ணன் ஓவியம் - ராஜா ரவிவர்மா படைப்பின் தனித்துவம் என்ன?
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் 19-ஆம் நூற்றாண்டு ஓவியம் ஒன்று, ஏலத்தில் புதிய சாதனையைப் படைத்து இதுவரை விற்கப்பட்ட இந்தியக் கலைப்படைப்புகளிலேயே மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
'யசோதா மற்றும் கிருஷ்ணா' என்ற ஓவியம், புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற சாஃப்ரான்ஆர்ட் ஏலத்தில் சுமார் 167 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இது கடந்த ஆண்டு எம்.எப். ஹுசைனின் 'அன்டைட்டில்ட் - கிராம் யாத்ரா' ஓவியம் ஈட்டிய சுமார் 118 கோடி என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.
விற்பனையிலும் சாதனைகளிலும் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி, இந்திய மற்றும் தெற்காசியக் கலைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைக் காட்டுகிறது.
தற்போதைய கேரள மாநிலத்தில் 1848ம் ஆண்டில் பிறந்த ரவி வர்மா, நவீன இந்திய ஓவியக்கலையின் முன்னோடியாகவும், துணைக்கண்டத்தின் மிகவும் செல்வாக்குமிக்க கலைஞர்களில் ஒருவராகவும் பரவலாகக் கருதப்படுகிறார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான கோடீஸ்வர தொழிலதிபர் சைரஸ் பூனவாலா இந்த ஓவியத்தை வாங்கினார்.
சாஃப்ரான்ஆர்ட் வெளியிட்ட அறிக்கையில், பூனவல்லா இந்த கலைப்படைப்பை ஒரு "தேசிய பொக்கிஷம்" என்று விவரித்தார்.
இது "அவ்வப்போது பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டியது" என்று கூறிய அவர், "இனி வரும் காலங்களில் இதைச் செயல்படுத்துவது எனது முயற்சியாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் சட்டத்தின் கீழ் ரவி வர்மாவின் படைப்புகள் "கலைப் பொக்கிஷம்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது, அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்க முடியும் என்பது தான் இதன் பொருள்.
சாஃப்ரான்ஆர்ட் நிறுவனத்தின் தலைவரும் இணை நிறுவனருமான மினல் வசிரானி கூறுகையில், இந்த மதிப்பீடு "இந்தியக் கலையின் நீடித்த கலாச்சார மற்றும் உணர்ச்சிகரமான தாக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டல்" என்று தெரிவித்தார்.
டிஏஜி ( முன்னாள் டெல்லி ஆர்ட் கேலரி) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஆஷிஷ் ஆனந்த் கூறுகையில், இந்த விற்பனையின் தாக்கம் கலைச் சந்தையில் எதிரொலிக்கும் என்றும், "இந்தியக் கலையை வெறும் அழகியல் மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கானது என்பதையும் தாண்டி, ஒரு தீவிரமான பொருளாதார சொத்தாகப் பார்க்கும் நிலையை இது உருவாக்கும்" என்றும் கூறினார்.
சாஃப்ரான்ஆர்ட் பட்டியலின்படி, இந்த கலைப்படைப்பு ஒரு தனிப்பட்ட சேகரிப்பாளரால் ஏலத்தில் விடப்பட்டது.
இந்து இதிகாசங்கள் மற்றும் புராணக் காட்சிகளை ரவி வர்மா தத்ரூபமாக சித்தரித்தது இந்தியாவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவரது படைப்புகளின் அச்சுப் பிரதிகள் பெரும்பாலும் வீடுகளின் பூஜை அறைகளில் காணப்படுமளவிற்கு புகழ்பெற்றவை.
யசோதா மற்றும் கிருஷ்ணா என்பது 1890-களில் ரவி வர்மா தனது கலை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது வரைந்த ஒரு எண்ணெய் வண்ணப்பூச்சு ஓவியமாகும்.
இந்து கடவுளான கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது அவருக்கும், அவரது வளர்ப்புத் தாய் யசோதைக்கும் இடையிலான ஒரு இனிமையான தருணத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.
இந்த ஓவியத்தில், யசோதை பசுவிடம் பால் கறப்பதையும், கிருஷ்ணர் ஒரு கிண்ணத்தை ஏந்தியபடி அவருக்கு அருகில் நின்று காத்திருப்பதையும் காணலாம்.
குழந்தையின் கண்களில் ஒரு குறும்புத்தனமான பார்வை இருக்க, யசோதையின் முகத்தில் கனிவும் அக்கறையும் பிரதிபலிக்கிறது. அவர்களின் ஆபரணங்கள் எளிமையாக இருந்தாலும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
"புனிதமான ஒன்றை நமக்கு நெருக்கமான முறையில் வழங்கும் இந்த சமநிலையில் தான் ரவி வர்மாவின் மேதைமை " என்று ரவி வர்மாவின் பாரம்பரியத்தை மேம்படுத்திப் பாதுகாக்கும் 'ராஜா ரவி வர்மா ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன்', ஏலத்திற்கு முன்னதாக கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
"பட்டுத் துணியின் அமைப்பு, நகைகளின் பளபளப்பு, சருமத்தின் மென்மை மற்றும் பசுவின் அமைதியான தோற்றம் ஆகியவை இணைந்து பக்தி மற்றும் நெருக்கம் ஆகிய இரண்டையும் ஒருசேர வெளிப்படுத்தும் ஒரு காட்சியை உருவாக்குகின்றன."
கிருஷ்ணர் மற்றும் யசோதையின் உருவம் நீண்டகாலமாக தெற்காசியக் கலைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறது. அவர்கள் பாடல்கள், கோயில் சிற்பங்கள் மற்றும் உள்ளூர் ஓவிய மரபுகளில் இவர்களைச் சித்தரித்துள்ளனர்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
ஆனால் ரவி வர்மா இவர்களை மிகவும் இயற்கையான முறையில் சித்தரித்துள்ளதாக கலை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"கடவுளின் உருவப்படங்கள் [பொதுவாக] பிரமிப்பையே ஏற்படுத்தும், அன்பு அல்லது பாசத்தை அல்ல" என்று குறிப்பிட்டார்.
ஆனால் ரவி வர்மா அதனை மாற்றி, கிருஷ்ணருக்கும் ஓவியத்தைப் பார்ப்பவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தார் என இதனை குறித்து கலைஞர் ஏ. ராமச்சந்திரன் எழுதியுள்ளார்.
இந்த மிகப்பெரிய விற்பனையானது, வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்தியக் கலைப்படைப்புகளுக்கு அதிக விலை கொடுக்க சேகரிப்பாளர்கள் பெரியளவில் தயாராக இருப்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
டிஏஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் பிபிசியிடம் கூறுகையில், "இந்தியக் கலை பார்க்கப்படும் விதத்தில் ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
"சந்தை முதிர்ச்சியடைந்து அளவுகோல்கள் உயரும்போது, சேகரிப்பாளர்கள் அதன் கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பினை அங்கீகரிக்கின்றனர்" என்றும், அடிப்படையில் தரம் தான் இந்த வேகத்தைத் தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.
"பாரம்பரியம், அரிதான தன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படைப்புகள், இப்போது அசாதாரணமான விலையைப் பெறுகின்றன, இது சந்தையின் முதிர்ச்சியைப் பிரதிபலிக்கிறது."
தனித்துவமான படைப்புகளும் விலையை உயர்த்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரவி வர்மா, அம்ரிதா ஷெர்-கில் மற்றும் வி.எஸ். கைடோண்டே போன்ற கலைஞர்களின் பல மாபெரும் படைப்புகள் தனிப்பட்ட சேகரிப்புகளில் உள்ளன அல்லது அரிதாகவே ஏலத்திற்கு வருகின்றன.
உலகளாவிய கலைச் சந்தையில் புராணங்கள் ஒரு தீவிரமான மற்றும் விரும்பத்தக்க வகையாக வளர்ந்து வரும் அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும் ஆனந்த் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு