மும்பை அணியில் தொடரும் இந்த சிக்கலை சிஎஸ்கே சாதகமாக்கி கொள்ளுமா? இன்று மோதல்

CSK vs MI, ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தலா 2 வெற்றிகளும், 4 தோல்விகளும் சந்தித்திருக்கின்றன (கோப்புப் படம்)
    • எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
    • பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அதன் 'எல் கிளாசிகோ' போட்டிக்காகத் தயாராகிவிட்டது. இந்தத் தொடரின் வெற்றிகரமான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரண்டும் வான்கடேவில் இன்று (ஏப்ரல் 23) இரவு மோதுகின்றன.

புள்ளிப் பட்டியலில் இரண்டாம் பாதியில் இருக்கும் இந்த இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி மிகவும் முக்கியம். இந்த மிகப் பெரிய போட்டியில் வெற்றி பெறுவது 2 புள்ளிகளை மட்டும் தரப்போவதில்லை. தொடர்ந்து முன்னேறுவதற்கான பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும். அதேசமயம், இந்தப் போட்டியில் தோற்றால் அது பின்னடைவை ஏற்படுத்தும். பிளே ஆஃப் வாய்ப்பையே கூட கேள்விக்குறியாக்கும். இந்த இரண்டு பெரிய அணிகளும் அப்படியொரு முக்கியமான, இக்கட்டான தருணத்தில் தான் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஓரளவு நல்ல முன்னேற்றம் கண்டு வந்தது. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக கையில் இருந்த ஆட்டத்தை நழுவவிட்டது. பந்துவீச்சுதான் பிரச்னை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், தற்போது பந்துவீச்சில் முன்னேற்றம் தெரிகிறது; அதேசமயம் பேட்டிங் சொதப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே வேறு இப்போது காயமடைந்திருக்கிறார்.

மாத்ரே இந்த சீசளில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மிகவும் சீராக ஆடினார். சுமார் 140 கிமீ வேகத்தில் வரும் பந்தை ஃப்ரன்ட் ஃபூட் வைத்து புல் ஆடுவதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை.

அதேசமயம் மாத்ரேவின் இடத்தைக் கூட உர்வில் பட்டேல் வைத்து நிரப்பிட முடியும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு மாற்று வீரராக வந்து அவர் சிறப்பாக செயல்பட்டார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்திருக்கிறார். பலவிதமான ஷாட்கள் ஆடக்கூடியவர். மாத்ரே கொண்டுவந்த அந்த 'இன்டென்ட்'டை இவரிடம் பார்க்க முடியும். என்ன, மிடில் ஓவர் பேட்டிங்கில் மட்டும் சிஎஸ்கே சற்று கவனம் செலுத்த வேண்டும். சிறிய தருணங்களை எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்று பார்க்க வேண்டும்.

சில பிரச்னைகள் இருந்தாலும் சிஎஸ்கே பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன். கடந்த போட்டியில் 30 ஓவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு பௌலரும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.

மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டிருக்கிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு கடந்த போட்டியில் நல்ல கம்பேக் கொடுத்தார்கள். பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலுமே நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பும்ரா பதிய பந்தில் பந்துவீசுவது அந்த அணிக்கு மிகவும் நல்ல விஷயம். முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி பெரிய மாற்றத்தைக் காட்டினார். அந்த வெற்றிக்குப் பிறகு அவர்கள் பெரும் நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் காண்பார்கள். ஆனால், இந்தப் போட்டி அவர்களுக்கு எளிதாக இருந்துவிடப் போவதில்லை.

சூப்பர் கிங்ஸுக்கு முக்கியமான இரண்டு பேட்டர்கள்

CSK vs MI, ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசன் 6 போட்டிகளில் 192 ரன்கள் எடுத்திருக்கிறார் சஞ்சு சாம்சன்

வான்கடே மைதானம் பேட்டிங் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். செம்மண் ஆடுகளங்கள் கொண்ட இந்த மைதானத்தில் பந்து நன்கு வேகமாக வரும், நல்ல பவுன்ஸ் இருக்கும். இது சஞ்சு சாம்சன் மற்றும் டெவால் பிரெவிஸ் ஆகியோருக்கு ஏற்றதாக இருக்கும். அவர்கள் இருவருமே வேகம் மற்றும் பவுன்ஸை விரும்பக் கூடியவர்கள். அது சீராக இருக்கும் இந்த ஆடுகளங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த மார்ச் மாதம் இந்த மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதும் வென்றிருந்தார். அப்படியொரு நல்ல தொடக்கத்தை அவரால் இந்தப் போட்டியிலும் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படி நல்ல தொடக்கம் கிடைக்கும்போது அது சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸுக்கு பெரும் பலமாக இருக்கும். இந்த இடத்தில் பும்ராவுக்கும் சாம்சனுக்குமான யுத்தம் ஆட்டத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும். புதிய பந்தில் பும்ராவால் சாம்சனை வீழ்த்த முடிந்தால் அது சென்னைக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும். ஒருவேளை சாம்சன், பும்ராவுக்கு எதிராக அதிரடி காட்டினால் அது மும்பை இந்தியன்ஸின் நம்பிக்கைக்கு பெரிய அடியாக அமையும்.

சென்னைக்கு இந்தப் போட்டியில் முக்கியமான இன்னொரு பேட்டர் என்றால் அது டெவால் பிரெவிஸ். நல்ல பவுன்ஸ் இருக்கும் ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார். இங்கே, அவரால் பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடியும். கடந்த போட்டிக்குப் பிறகு அவருடைய ஃபார்ம் பற்றி சில கேள்விகள் எழுந்ததைப் பார்க்க முடிந்தது. காயத்திலிருந்து மீண்டு வந்து இரண்டு போட்டிகள் தான் விளையாடியிருக்கிறார். எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும் காயத்திலிருந்து திரும்பிய பிறகு பழையபடி ஆடுவது எளிதல்ல. அதற்குமே ஒரு அவகாசம் தேவைப்படும். டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிராக அவர் ஓரளவு நன்றாகவே ஆடினார். இந்த வான்கடே மைதானம் அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உகந்ததாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சூப்பர் கிங்ஸின் இரண்டு முக்கிய பேட்டர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் செயல்பாடுகளும் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

கேப்டன் கெய்க்வாட் நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தொடங்கவேண்டும். அணிக்கு அது மிகவும் முக்கியம். அதேசமயம் இது ஃபார்ம் பிரச்னை என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு ரன் வரவில்லை அவ்வளவுதான். ஒரு நல்ல இன்னிங்ஸ் அதை மாற்றிவிடும். மும்பைக்காரரான ஷிவம் துபேவுக்கு இது 'ஹோம் கிரவுண்ட்'. இந்த மைதானத்தின் பவுண்டரிகள் பக்கவாட்டில் சற்று சிறியவை. அதனால் ஷார்ட் லென்த்தில் பிட்சாகும் பந்துகளை அவர் சிக்ஸர்களாக மாற்றக்கூடும்.

ஒட்டுமொத்தமாக, வான்கடே மைதானத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் சூப்பர் கிங்ஸ் பேட்டர்களால் சிறப்பாக செயல்பட்டு பேட்டிங்கில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஒரு பெரிய ஸ்கோரையும் பதிவு செய்யமுடியும்.

மும்பை பேட்டிங் vs சூப்பர் கிங்ஸ் பௌலிங்

CSK vs MI, ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசன் 6 போட்டிகளில் 121 ரன்கள் எடுத்திருக்கிறார் சூர்யகுமார்

மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல வெற்றிக்குப் பிறகு நம்பிக்கை அளிக்கும் வகையில் தென்பட்டாலும் அந்த அணியின் பேட்டிங்கின் மீது இன்னும் கேள்விகள் இருக்கவே செய்கின்றன. திலக் வர்மா சிறப்பான ஒரு சதம் அடித்தார். நமன் திர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால், அதைத் தவிர்த்து சில முன்னணி வீரர்களின் ஃபிட்னஸ், ஃபார்ம் மீது சந்தேகம் இருக்கவே செய்கிறது.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவால் இன்னும் தன் பேட்டிங் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. துணை கேப்டன் சூர்யகுமார் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறியிருக்கிறார். இருவரின் ஃபார்ம் மீதும் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு. முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபிட்னஸ் பற்றி இன்னும் உறுதியான செய்திகள் வரவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை நிச்சயம் அழுத்தத்துக்குள் தள்ள முடியும்.

இந்த இடத்தில் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு அந்த அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லை. இருந்தாலும் அவர்கள் சரியாகத் திட்டுமிட்டு அவர்களின் திட்டத்தை சிறப்பாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது கடந்த சில போட்டிகளாக சீராகவும் நடந்துகொண்டிருக்கிறது.

அன்ஷுல் கம்போஜ் தன் பாசிடிவ், நெகடிவ் என்ன என்பதை நன்கு தெரிந்து அதற்கு ஏற்ப பந்துவீசுகிறார். புதிய பந்தில் ஓரளவு நன்கு ஸ்விங் செய்கிறார். டெத் ஓவர்களில் 'வைட் யார்க்கர்' பந்துகளை துல்லியமாக வீசுகிறார். ஓவர்டன் போட்டிக்குப் போட்டி மெருகேறியிருக்கிறார். தன்னுடைய உயரத்தாலும் லென்த்தாலும் பேட்டர்களை அச்சுறுத்துகிறார். குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி ஆகியோரும் தங்கள் பணிகளை சரியாகச் செய்கிறார்கள்.

வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்பின்னர் நூர் அஹமதும் தன் சிறந்த ஃபார்மை மீட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அவர்தான் முன்னணி ஸ்பின்னர் என்றிருந்த போது அவர் நெருக்கடியை உணர்ந்திருக்கலாம். வேகமாக வீசிக் கொண்டிருந்தார். சரியான லென்த்தில் பந்தை பிட்ச் செய்யவில்லை. ஆனால், கடந்த சில போட்டிகளாக கடந்த சீசனில் ஆடிய நூர் அஹமதுவைப் பார்க்க முடிகிறது. மிடில் ஓவர்களில் அவர் விக்கெட்டுகள் வீழ்த்தும்போது அது அணிக்கு மிகவும் நல்ல விஷயம்.

இதுதான் சூப்பர் கிங்ஸுக்கு தற்போது சாதகமான அம்சம். தங்களின் திட்டத்துக்கு ஏற்ப பந்துவீசும் பௌலர்கள் நிச்சயம் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். அதுவும் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் சில சிக்கல்கள் தொடரும் போது நிச்சயம் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

CSK vs MI, ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அன்ஷுல் கம்போஜ்

என்னைப் பொறுத்தவரை இது மிகவும் நெருக்கமான போட்டியாகவே இருக்கும். இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. ஒரே மாதிரியான சூழ்நிலையில் இந்தப் போட்டியை எதிர்கொள்கின்றன. அதனால் இரண்டு அணிகளுக்குமே நெருக்கடி இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் - குறிப்பாக டெத் ஓவர்களில்.

வான்கடேவைப் பொறுத்தவரை ஹைதராபாத் போன்ற இடங்களில் வருவதுபோல் பவர்பிளேவிலேயே ரன் வந்துவிடாது. ஆனால், டெத் ஓவர்களில் ரன் மழை பொழியலாம். கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் கைவசம் இருந்தால், நிச்சயம் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இரண்டு அணிகளின் டெத் பௌலிங்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதனால், எந்த அணி டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்படுகிறதோ அவர்களுக்கே இந்தப் போட்டியில் 2 புள்ளிகள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

என்னதான் கடினமான நிலையில் இருந்தாலும் இந்த இரு அணிகளுமே சிறப்பான கம்பேக் கொடுக்கக்கூடிய அணிகள். கடந்த காலங்களில் அதைப் பலமுறை செய்திருக்கிறார்கள். சொல்லப்போனால் மும்பை அணி பல சீசன்களில் அதைச் செய்திருக்கிறது. சீசனை மெதுவாகத் தொடங்குவது அவர்களின் வழக்கம். திடீரென்று திலக் வர்மாவின் இன்னிங்ஸ் போல ஒரு ஆட்டம் வரும். அது அவர்களின் சீசனை அப்படியே மாற்றிவிடும். இப்போதும் அவர்கள் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்திருப்பார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் இந்த சூழல் புதிதல்ல. அந்த 2010 சீசன் அனைவருக்குமே ஞாபகம் இருக்கும். அவர்களாலும் நிச்சயம் இந்த சீசனில் எழுச்சி பெற முடியும். நான் தனிப்பட்ட முறையில் இந்தப் போட்டி சூப்பர் கிங்ஸ் அணி எழுச்சி பெறுவதற்கான தொடக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில், அவர்களின் பந்துவீச்சின் மீது எனக்குக் கூடுதல் நம்பிக்கை இருக்கிறது.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு