தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - நேரலை

பட மூலாதாரம், PTI
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவு சரியாக 7 மணிக்கு தொடங்கியது.
நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூர் தொகுதியில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையின் நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
'தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.
காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், ஆண்கள் 3,579, பெண்கள் 443, திருநங்கை ஒருவர்.
அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.
தமிழ்நாட்டில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், ANI
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 188-வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் மாதிரி வாக்கு பதிவானது நடைபெறாமல் உள்ளது.
மாற்று வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து வருமாறு கட்சி பிரமுகர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்து செல்லையாபுரம் வாக்குச்சாவடி, இருவேலி வாக்குச்சாவடி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்துக்கல்வலசை வாக்குச்சாவடி என மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

பட மூலாதாரம், ANI
அரசியல் கட்சிகளின் நிலவரம்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடுவதுடன், விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. அதுதவிர ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் களத்தில் உள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
திமுக 166 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தலா இரண்டு தொகுதிகள், மனிதநேய எஸ்டிபிஐ மற்றும் தமிழர் தேசம் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8, தேமுதிகவுக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்களும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிடுகின்றது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஒரு தொகுதி), புதிய நீதிக் கட்சி (ஒரு தொகுதி), புரட்சி பாரதம் (ஒரு தொகுதி) உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் போட்டியிடுகின்றன.
புதிதாகக் களமிறங்கி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாருக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியில் ஆண்கள் 117 பேரும், பெண்கள் 116 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பட மூலாதாரம், ANI
வாக்களிப்பது எப்படி?
முதலில் வாக்குச்சாவடி அலுவலர் உங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் அடையாள அட்டையைப் பரிசோதிப்பார். பின்னர், அடுத்த அலுவலர் இடது ஆட்காட்டி விரலில் நீல நிற மை வைத்து, ஸ்லிப் ஒன்றைக் கொடுத்து, பிறகு வாக்குப் பதிவுக்காக கையெழுத்து பெறுவார்.
மூன்றாவது அலுவலரிடம் நீங்கள் அந்த ஸ்லிப்பை கொடுத்து, விரலில் மை வைக்கப்பட்டதைக் காண்பிக்க வேண்டும். பின்னரே வாக்களிக்க முடியும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் தாம் விரும்பும் வேட்பாளருக்கான பொத்தானை (நீல நிற பொத்தான்) அழுத்துவதன் மூலம் வாக்குப்பதிவு கருவியில் வாக்களிக்கும்போது, குறிப்பிட்ட வேட்பாளரின் பொத்தானுக்கு நேராக சிவப்பு விளக்கு ஒளிரும்.
வாக்களித்ததை சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் கருவி, அச்சுப்பொறியில் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் அடங்கிய ஒரு சீட்டு அச்சிடப்பட்டு சுமார் 7 விநாடிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் சாளரம் வாயிலாக கண்களுக்குப் புலப்படும்.
அதன் பின், இந்த அச்சிடப்பட்ட சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு அக்கருவியின் முத்திரையிடப்பட்ட சீட்டு சேகரிப்புப் பகுதியில் விழும்.
வாக்களிப்பு வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்ய கட்டுப்பாட்டுக் கருவியில் இருந்து 'பீப்' ஒலி கேட்கும்.

பட மூலாதாரம், Getty Images
வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அலுவலர் சரவண மூர்த்தி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்த விவரங்கள் இனி...
1. வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கலாமா?
வாக்கின் ரகசியம் என்பது முக்கியமானது. அதை மீறி வெளிப்படுத்துவது தீவிரமான குற்றமாகும்.
2. வாக்குச் சாவடிக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்லலாமா?
மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்குச் சாவடிகளுக்கு வெளியே மொபைல் போன்களை வைக்க பூத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கே ஒப்படைத்துவிட்டு வாக்களிக்கச் சென்று திரும்பி வந்து பெற்றுக் கொள்ளலாம்.

3. அரசியல் கட்சிகளின் சின்னத்தை எடுத்துச் செல்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது போன்றவற்றை மேற்கொள்ளலாமா?
வாக்குச் சாவடியைச் சுற்றி 100 மீட்டர் வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. அதற்குள் எந்தவிதமான பரப்புரைகளையும் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
4. அரசியல்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான வரையறை என்ன?
முகவர்கள் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பேட்ஜ் கொடுக்கப்படும். அங்கு தொப்பி போன்ற பரப்புரை செய்யக்கூடிய எந்தப் பொருட்களையும் எடுத்து வரக் கூடாது. வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே அவர்களுடைய பூத்தை அமைத்துக் கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































