கோவை சிங்காநல்லூரில் பேருந்து தட்டுப்பாடு: வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் போதுமான பேருந்துகள் இல்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
நேற்றிரவு முதல் இன்று காலை 7.40 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து வந்த பேருந்துகளும் எந்த ஊருக்கு செல்கின்றன என்பது தெளிவில்லாமல் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வெளிமாவட்டங்களுக்கு, தென் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பேருந்துகள் இல்லாததை கண்டித்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பயணிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.
இருப்பினும், கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்கப்படாததால், வாக்களிக்கச் செல்லும் பொதுமக்கள் இன்னும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆம்னி பேருந்துகளில் 2,000 ஆயிரம் முதல் 3,000 வரை ஒரு நபருக்கு வாங்கப்படுவதால், பலரும் அரசு பேருந்துகளை நம்பி காத்திருக்கின்றனர். 170 பேருந்துகள் இயக்கப்படுவதாக தவறான தகவல்களை தருவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.






