ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஜடேஜா: 160 ரன் இலக்கை எட்ட விடாமல் லக்னௌவை சுருட்டிய ராஜஸ்தான்

ஒரு ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ரவீந்திர ஜடேஜா. தங்களையே தாக்கிய லக்னௌ அணியின் ஆயுதம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 43 ரன்கள் எடுத்ததோடு 1 விக்கெட்டும் கைப்பற்றிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்
    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது ராயல்ஸ்.

முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல்ஸ் வெற்றி பெறுவது கடினம் என்று கருதப்பட்டது. ஆனால், சிறப்பான பந்துவீச்சின் காரணமாக லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது ரியான் பராக்கின் அணி.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ஓவர்கள் முடிவில் 110/6 என்ற நிலையில் இருந்தது. அதே 16 ஓவர்கள் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஸ்கோர் 111/6.

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழ்நிலையில் தான் இரு அணிகளும் இருந்தன. ஆனால், அந்த அணிகள் எடுத்த முடிவுகள், வேகத்தைப் பயன்படுத்திய விதம் இரு அணிகளின் சூழ்நிலைகளையும் மாற்றின.

அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு ஓவரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ராயல்ஸ் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன. ரவீந்திர ஜடேஜா அதன் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து ஆட்ட நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் பேட்டர்கள் இந்தப் போட்டியில் நிறைய தவறுகளை செய்தார்கள். அது தற்போது பரவலான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், இந்தப் போட்டியில் பந்துவீச்சின்போதே அவர்கள் பின்தங்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

ஒரு ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ரவீந்திர ஜடேஜா. தங்களையே தாக்கிய லக்னௌ அணியின் ஆயுதம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் தங்களுடைய 5வது வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆடுகளம் பற்றிய இரு அணிகளின் புரிதல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறாவது விக்கெட்டை இழந்தபோது களத்தில் இருந்தது ரவீந்திர ஜடேஜா. அடுத்து வரவிருந்தது ஜோஃப்ரா ஆர்ச்சர். 25 பந்துகள் மீதமிருந்த நிலையில், இம்பேக்ட் வீரராக ஷுபம் துபேவைக் களமிறக்கியது அந்த அணி. இந்த முடிவின் காரணமாக ஒரு பௌலிங் ஆப்ஷன் குறைவாகும். அப்படியொரு அபாயம் இருந்தும் அவர்கள் துணிந்து அந்த முடிவை எடுத்தார்கள். ஆர்ச்சர் அடிக்கக் கூடியவர் தான் என்றாலும், கூடுதலாக ஒரு பேட்டரைக் களமிறக்கியது அந்த அணி.

இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் போகப்போக மெதுவாகிக் கொண்டே இருந்தது. டாஸின் போது பேசிய ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், "நான் என்ன தேர்வு செய்வது என்று குழம்பிக் கொண்டே இருந்தேன். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது இந்த ஆடுகளம் மெதுவாகிறது. அது இந்தப் போட்டியிலும் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். அதனால், நிதானமாக ஆடி ஒரு நல்ல ஸ்கோர் எடுப்பது போதுமானது என்று கருதி ஷுபம் துபே களமிறக்கப்பட்டிருக்க வேண்டும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜடேஜா - துபே இருவரும் அதற்கு ஏற்ப விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் ஆடினார்கள். அநாவசியமான ஷாட் முயற்சிகள் எதுவும் செய்யாமல், சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆஇட்னார்கள். அவர்கள் இருவரும் அந்த 25 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தனர். அந்த பார்ட்னர்ஷிப்பின் காரணமாகத்தான் ராயல்ஸ் 159 என்ற ஸ்கோரை எடுத்தது.

ஒருவேளை இன்னும் 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தாலும், மிடில் ஓவர்களில் லக்னௌ அணியின் அணுகுமுறை சற்று வேறு மாதிரியாக இருந்திருக்கும், அது அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், 160 என்ற இலக்கு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராயல்ஸ் அணிக்கு இருந்த ஆடுகளம் பற்றிய புரிதல், 'ஹோம் டீம்' எல்எஸ்ஜி வசம் இருந்ததா என்ற கேள்வி அனைவருக்குமே எழுந்தது. குறிப்பாக, கேப்டன் ரிஷப் பன்ட் ஆடிய விதம் ஆச்சர்யமளிப்பதாக இருந்தது. முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில், தொடர்ச்சியாக பெரிய ஷாட்கள் ஆட முயற்சி செய்துகொண்டே இருந்தார் பன்ட். முதலிரு பந்துகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும், மூன்றாவது பந்தில் எட்ஜாகி கீப்பரிடம் கேட்சானார். அடுத்த ஓவரில் மார்க்ரம் அதே தவறை செய்தார். மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த எல்எஸ்ஜி அதன்பிறகு அந்த சரிவிலிருந்து எழவே இல்லை.

லக்னௌ அணியின் டாப் 4 பேட்டர்களில் 3 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லக்னௌ அணியின் டாப் 4 பேட்டர்களில் 3 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்

அதேபோல், லக்னௌ அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது களத்தில் இருந்தது என்னவோ முகுல் சவுத்ரி மற்றும் மொஹம்மது ஷமி இருவரும். அவர்களின் பந்துவீச்சாளர்கள் யாரும் பெரிதாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள் இல்லை என்பதால், அந்த இடத்தில் முகுல் சவுத்ரி மீதும் நெருக்கடி ஏற்பட்டது.

ஜடேஜா, துபே என இரு பேட்டர்கள் களத்தில் இருந்ததால் அவர்கள் கணக்கிட்டு அந்த பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். ஆனால், முகுல் சவுத்ரி தானே ஆட்டத்தை முடிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். அதனால், பெரிய ஷாட் அடிக்க நினைத்து 17வது ஓவரின் முதல் பந்திலேயே அவர் வெளியேறினார். லக்னௌ அணியின் வெற்றி வாய்ப்பு அந்த இடத்திலேயே முடிவுக்கு வந்தது.

மெதுவாகிக் கொண்டிருக்கும் ஆடுகளம், ஏழே பேட்டிங் ஆப்ஷன்கள் என்று இருக்கும்போது லக்னௌ பேட்டர்கள் நிதானமாக விளையாடி இலக்கை சேஸ் செய்திருக்கலாம். ஆனால், மாறாக அவர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. அதனால், அவர்களுக்கு 5 பௌலர்களே போதுமானதாக இருந்தது.

ஓரளவு எல்எஸ்ஜி பேட்டர்கள் தாக்குப்பிடித்து ஆடியிருந்தாலும், பிரிஜேஷ் ஷர்மா போன்ற அனுபவமற்ற ஒரு பௌலரை டார்கெட் செய்து ரன் சேர்த்திருக்கலாம். நிதானமாக ஆடி விக்கெட் இழக்காமல் இருந்திருந்தால், ரன்ரேட் நெருக்கடி ஏற்படாமல் இருந்திருந்தால் பூரன் பேட்டிங் செய்தபோது பிஷ்னாய் அல்லது ஜடேஜாவைப் பயன்படுத்த பராக் யோசித்திருக்கலாம். அவரே பந்துவீச வந்திருக்கலாம். அதை லக்னௌ பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், பூரன் ஆடியபோது விக்கெட், ரன்ரேட் என அனைத்து நெருக்கடியும் இருக்கவே பராக் எதைப் பற்றியும் யோசிக்காமல் இடது கை ஸ்பின்னரையும், லெக் ஸ்பின்னரையும் பயன்படுத்தினார்.

ஆனால், அந்த நிதானத்தை சற்றும் கடைபிடிக்காமல் தொடர்ச்சியாக பவர்பிளேவில் மிரட்டிக் கொண்டிருக்கும் ஆர்ச்சர் - பர்கர் இணையை அட்டாக் செய்து அந்த வாய்ப்பைத் தவறவிட்டது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்.

மயாங்க் யாதவ் & ரவீந்திர ஜடேஜா: மாற்றம் ஏற்படுத்திய இருவர்

இந்தப் போட்டியில் மயாங்க் யாதவ் தவிர்த்து மற்ற 9 பௌலர்களின் எகானமியும் 8-க்கும் குறைவாகவே இருந்தது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் மயாங்க் யாதவ் தவிர்த்து மற்ற 9 பௌலர்களின் எகானமியும் 8-க்கும் குறைவாகவே இருந்தது

லக்னௌ அணி தோற்றதற்கான காரணம் அவர்கள் பேட்டிங் மட்டுமேயல்ல. சிறப்பாக செயல்பட்ட அவர்கள் பந்துவீச்சில் இருந்த ஒரு சிறிய விஷயம், ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோதே ஆட்டத்தை அவர்களுக்குப் பாதகமாக மாற்றியது.

இந்தப் போட்டியில் லக்னௌ வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். மொஹம்மது ஷமி அடுத்தடுத்த பந்துகளில் ஜெய்ஸ்வால், ஜுரெல் இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி ராயல்ஸின் சரிவைத் தொடக்கிவைத்தார். சூர்யவன்ஷியை ஸ்டிரைக்கில் வைத்து மெய்டன் ஓவர் வீசியதோடு, அதே ஓவரில் அவர் விக்கெட்டையும் கைப்பற்றினார் மோசின் கான். பிரின்ஸ் யாதவ் வழக்கம்போல் சோபித்து பர்ப்பிள் கேப்பை தன்வசப்படுத்தினார். இப்படி அந்த அணியின் பௌலர்கள் எல்லோரும் அசத்தினார்கள். ஆனால், பெரும் எதிர்பார்ப்போடு களமிறக்கப்பட்ட மயாங்க் யாதவ் செயல்பாடு அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது.

இந்த சீசனில் முதல் முறையாகக் களமிறங்கிய மயாங்க், 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தன்னுடைய வழக்கமான வேகத்தை அவர் வெளிக்காட்டினாலும், லைன் மற்றும் லென்த் சரியாக இருக்கவில்லை. அதனால், ராயல்ஸ் பேட்டர்கள் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

  • மயாங்க் யாதவ்: 4 ஓவர்கள் - 56 ரன்கள் - விக்கெட் இல்லை - 14 எகானமி
  • மற்ற எல்எஸ்ஜி பௌலர்கள் - 16 ஓவர்கள் - 103 ரன்கள் - 6 விக்கெட்டுகள் - 6.44 எகானமி

மற்ற பௌலர்கள் 6.44 என்ற எகானமியில் பந்துவீச, ஓவருக்கு 14 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்தார் மயாங்க். அதிலும் குறிப்பாக அந்தக் கடைசி ஓவர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

தன் இன்னிங்ஸின் முதல் 23 பந்துகளில் ஜடேஜா ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தன் இன்னிங்ஸின் முதல் 23 பந்துகளில் ஜடேஜா ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை

கடைசி வரை நிதானமாகக் காத்திருந்த ரவீந்திர ஜடேஜா, மயாங்க் பந்துவீச்சை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அந்த கடைசி ஓவரில் அவர் 20 ரன்கள் எடுக்க, 159 என்ற போட்டிதரக்கூடிய ஸ்கோர் வந்தது.

இந்த இடத்தில் ஜடேஜாவின் அணுகுமுறை குறித்தும் அலசியாக வேண்டும். மிடில் ஓவர்களில் இரண்டு அணிகளின் பேட்டர்களுமே பல தருணங்களில் நிதானம் இழந்தார்கள். பெரிய ஷாட்கள் ஆட முயன்று தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள். ஓரளவு தாக்குப்பிடித்த பூரன், டானவன் ஃபெரீரா போன்ற வீரர்களுமே அப்படித்தான் ஆட்டமிழந்தார்கள். ஆனால், ஜடேஜா அதைச் செய்யவில்லை. 'பழைய பாணி' கிரிக்கெட்டைக் கையில் எடுத்தார். கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் செல்லும் நோக்கில் நங்கூரமாக நின்றார்.

இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. அதில் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடித்தார். அவை மூன்றுமே மயாங்க் யாதவ் வீசிய கடைசி ஓவரில் அடிக்கப்பட்டவை. முன்பு சந்தித்த 23 பந்துகளில் 1 பவுண்டரி கூட இல்லை. அவர் அதற்குப் பெரிதாக முயற்சி செய்யவுமில்லை. நன்றாகப் பந்துவீசியவர்களின் ஓவர்களைத் தாக்குப்பிடித்து ஆடி, ரன்கள் விட்டுக் கொண்டிருந்த மயாங்க் ஓவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். முன்பு லக்னௌ பேட்டர்கள் செய்யவில்லை என்று சொல்லியது இதைத்தான். சூழலைக் கணக்கிட்டு நிதானமாக கட்டமைத்த ஒரு இன்னிங்ஸ்.

ஜடேஜாவின் அந்த கடைசி ஓவர் அதிரடியால், நம்பிக்கையோடு இடைவேளைக்கு சென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அதே உத்வேகத்தோடு களமிறங்கியவர்கள், ஆரம்பத்தில் இருந்தே பந்துவீச்சிலும் சோபித்தார்கள். வெற்றியையும் வசப்படுத்தினார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு