இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை? - ஹோர்மூஸ் பதற்றத்துக்கிடையே டிரம்ப் வெளியிட்ட பதிவு

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது பிரதிநிதிகள் நாளை மாலைக்குள் பாகிஸ்தான் சென்றடையலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் செல்கின்றனர். பேச்சுவார்த்தைக்காக அவர்கள் நாளை மாலை அங்கு சென்றடைவார்கள்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மேலும் கூறுகையில், "நாங்கள் மிகவும் நியாயமான ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிகிறோம். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், அமெரிக்கா இரானின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் மற்றும் ஒவ்வொரு பாலத்தையும் தரைமட்டமாக்கும்," என்றார்.

பிபிசி பெர்சிய சேவையின்படி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகத் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனது பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை பாகிஸ்தான் செல்கிறார்களா இல்லையா என்பது குறித்து இரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இப்போது பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், "இனி எந்த தளர்வும் இருக்காது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் "மிகவும் வேகமாகவும் எளிதாகவும் தகர்க்கப்படும்" என்று அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் இரான் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தனது சமூக ஊடகக் கணக்கு மூலம், இரான் "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது" என்றும் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"ஒரு பிரான்ஸ் கப்பலையும், பிரிட்டன் சரக்குக் கப்பலையும் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இரான் தரப்பில் கூறப்பட்டது," என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

நீரிணையை மூடும் இரானின் முடிவை அமெரிக்க அதிபர் "விசித்திரமானது" என்று வர்ணித்துள்ளார். அமெரிக்காவின் முற்றுகையாலேயே "ஹோர்மூஸ் நீரிணை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது" என்பதால் இது விசித்திரமானது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

"அவர்கள் அறியாமலேயே நமக்கு உதவுகிறார்கள். இந்த வழித்தடம் மூடப்படுவதால் அவர்களுக்கே நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பும் இல்லை," என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அதே சமயம், இரானிய துறைமுகங்களில் கடற்படை முற்றுகையை ஏற்படுத்தி, அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு முன்னதாக, பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சில ஏற்பாடுகள், இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடக்கலாம் என்பதைப் பிரதிபலித்தன.

பிபிசி உருது சேவையின்படி, பாகிஸ்தான் தலைவர்களின் ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தன. அதோடு, ஒப்பந்தம் ஏற்பட்டால் தான் பாகிஸ்தான் செல்லத் தயார் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

பிபிசி உருது தகவலின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலான மேரியட் நிர்வாகம், ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்குள் விருந்தினர்களை ஹோட்டலை காலி செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

தவிர, ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் துணை ஆணையர்கள், ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளனர்.

முதல் பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.  வான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அறிவித்தார்.

இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கத் தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்று கூறினார். அமெரிக்கா தனது இறுதி வாய்ப்பை இரானுக்கு அளித்துவிட்டதாகக் கூறிவிட்டு அவர் நாடு திரும்பினார்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே 21 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஒப்பந்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முழு முயற்சி எடுத்தது, ஆனால் "கெட்ட செய்தி என்னவென்றால் எங்களால் எந்த ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை" என்று ஜே.டி. வான்ஸ் கூறினார்.

அமெரிக்கத் துணை அதிபர் கூறுகையில், இந்தச் செய்தி அமெரிக்காவை விட இரானுக்குத் தான் மிகவும் மோசமானது, "ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை, நாங்கள் அமெரிக்காவிற்குத் திரும்புகிறோம்," என்றார்.

பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்காவும் இரான் தரப்பும் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழுவும் இஸ்லாமாபாத் சென்றடைந்தனர்.

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவும் இரான் தரப்பும் வெவ்வேறு காரணங்களைக் கூறி வருகின்றன.

பேச்சுவார்த்தையில் பெரிய முட்டுக்கட்டை

மேக்சர் செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையத்தின் சுரங்க நுழைவாயில்களில் புதிய சேதங்கள் ஏற்பட்டதைக் காட்டுகின்றன. இது 2025 ஜூன் 22-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், 2025 Maxar Technologies/Getty

படக்குறிப்பு, மேக்சர் செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையத்தின் சுரங்க நுழைவாயில்களில் புதிய சேதங்கள் ஏற்பட்டதைக் காட்டுகின்றன. இது 2025 ஜூன் 22-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.

பிபிசி பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் பிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, இரான் அணுசக்தி செறிவூட்டல் விவகாரம் பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

பிராங்க் கார்ட்னர் கூறுகையில், "தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று இரான் விரும்புகிறது. அதன் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. இப்போது நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது, ஏனெனில் வளைகுடா பகுதியில் உள்ள தனது துறைமுகங்கள் வழியாகத் தனது ஏற்றுமதிகளை வெளியே அனுப்ப முடியாமல் அது தவிக்கிறது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவும் இரான் தரப்பும் இரண்டு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன: முதலாவது அணுசக்தி செறிவூட்டல். இரண்டாவது, இஸ்ஃபஹான் மலைகளுக்குக் கீழே உள்ள சுரங்கங்களில் இன்னும் இருக்கும் அதிகப்படியாகச் செறிவூட்டப்பட்ட யுரேனியம். கடந்த ஆண்டு அமெரிக்கா குண்டுவீச்சு நடத்திய அதே இடம் இது," என்றார்.

பிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, "அதை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒரு சிறப்பு அமெரிக்க ராணுவ நடவடிக்கையை அனுப்புவது குறித்துப் பல கற்பனையான கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இரான் அந்த இடத்தைத் தனது ராணுவத்தால் சூழ்ந்து கொள்ளும்."

"நீங்கள் அவர்களின் அனுமதி இல்லாமல் இதைச் செய்ய முடியாது. குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட சுரங்கங்களுக்குள் இறங்குவது என்பது மிகவும் நுணுக்கமான ஒரு நடவடிக்கையாக இருக்கும்." என்கிறார் அவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை இதைச் செய்யத் தயாராக உள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் அல்ல. இரான் இதற்குச் சம்மதித்தால் மட்டுமே இது அமெரிக்காவுடனான ஒரு கூட்டு நடவடிக்கையாக இருக்க முடியும்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு