டிரம்ப் அறிவிப்புக்கு முன்பே 'கணிப்பு': இரான் – வெனிசுவேலா நடவடிக்கையால் இவர்களுக்கு லாபமா?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிக் மார்ஷ்
- பதவி, வணிகச் செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் முழுவதும், அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதற்குச் சற்று முன்னதாக வர்த்தகர்கள் லட்சக்கணக்கான டாலர்களை ஊக வணிகத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
பிபிசி, பல நிதிச் சந்தைகளின் வர்த்தக அளவு தரவுகளை ஆய்வு செய்து, சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அதிபரின் மிக முக்கியமான சில கருத்துக்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தது.
சமூக ஊடகப் பதிவு அல்லது ஊடக நேர்காணல் வெளியிடப்படுவதற்கு முன், சில மணி நேரங்களுக்கு முன்போ அல்லது சில சமயங்களில் சில நிமிடங்களுக்கு முன்போ, தொடர்ந்து ஒரே மாதிரியான சந்தை உயர்வுகள் நிகழ்ந்ததாக கண்டறிந்தது.
பொதுவெளியில் வெளியிடப்படாத தகவல்களின் அடிப்படையில் ஊக வணிகத்தில் ஈடுபடுவது சட்டவிரோத உள் வர்த்தக முறையின் அடையாளங்களை இது கொண்டிருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்தச் சூழல் இன்னும் சிக்கலானது என்றும், அதிபரின் தலையீடுகளை முன்கூட்டியே கணிப்பதில் சில வர்த்தகர்கள் அதிகத் திறமை பெற்றுள்ளனர் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.
மிக முக்கியமான ஐந்து எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
9 மார்ச் 2026: 'போர் ஏறக்குறைய முடிந்துவிட்டது'
மிகப்பெரிய மாற்றங்களில் சில 'ஃபியூச்சர்ஸ்' சந்தையில் எண்ணெய் வர்த்தகத்தில் நிகழ்ந்துள்ளன.
இரானுடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒன்பதாவது நாளில், டிரம்ப் சிபிஎஸ் செய்திகளுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், இந்த மோதல் "கிட்டத்தட்ட முழுமையாக முடிந்துவிட்டது" என்று கூறினார்.
- 18:29 ஜிஎம்டி: எண்ணெய் ஊக வணிகம் அதிகரிப்பு
- 19:16 ஜிஎம்டி: போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று டிரம்ப் கூறினார்.
- 19:17 ஜிஎம்டி:எண்ணெய் விலை 25 சதவீதம் குறைகிறது.
கிழக்கு நேரப்படி மாலை 15:16 மணிக்கு (19:16 ஜிஎம்டி) சிபிஎஸ் செய்தியாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நேரத்தில்தான், இந்த நேர்காணல் பற்றி பொதுமக்களுக்கு முதன்முதலில் தெரியவந்தது.
மோதல் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற இந்த செய்தியால் எண்ணெய் வர்த்தகர்கள் எண்ணெயை விற்கத் தொடங்கினர். இதனால் அதன் விலை சுமார் 25% சரிந்தது.
இருப்பினும், செய்தியாளர் பதிவிடுவதற்கு 47 நிமிடங்களுக்கு முன்பே, அதாவது 18:29 ஜிஎம்டி மணியளவில், எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் என அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டதை சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்தப் ஊக வணிகத்தில் முதலீடு செய்த வர்த்தகர்கள், எண்ணெய் விலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களைச் சம்பாதித்திருப்பார்கள்.
பட மூலாதாரம், Bloomberg via Getty Image
23 மார்ச் 2026: 'போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான தீர்வு'
இரானின் மின் உற்பத்தி நிலையங்களை "அழித்துவிடுவோம்" என்று அச்சுறுத்திய இரண்டே நாட்களுக்குப் பிறகு, மார்ச் 23 அன்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், போர் நடவடிக்கைகளுக்கு "முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தீர்வை" எட்டுவது குறித்து அமெரிக்கா மற்றும் இரான் இடையே "மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்கள்" நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது ராஜீய ஆய்வாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
- 10:48 - 10:50 ஜிஎம்டி:எண்ணெய் ஊக வணிகம் அதிகரிப்பு
- 11:04 ஜிஎம்டி: போர் நடவடிக்கைகளுக்கு "முழுமையான தீர்வு" எட்டப்படும் என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
- 11:05 ஜிஎம்டி : எண்ணெய் விலை 11 சதவீதம் சரிந்தது.
உடனடியாக, பங்குச் சந்தைகள் உயர்ந்தன. அதுவரை உயர்ந்து கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்தது.
அதிபர் பதிவிடுவதற்கு 14 நிமிடங்களுக்கு முன்னதாகவே, அமெரிக்க எண்ணெய் விலையில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான முதலீடுகள் செய்யப்பட்டதை அந்த நேரத்தில் பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.
மற்றொரு முக்கிய எண்ணெய் விலைக் குறியீடான ப்ரெண்ட் கச்சா எண்ணெயை வாங்கும் ஒப்பந்தங்களிலும் வர்த்தகர்கள் இதே போன்ற ஒரு மாதிரியைப் பின்பற்றியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
"அந்த வர்த்தகங்கள் நிச்சயமாக இயல்புக்கு மாறானவையாகத் தோன்றின"என அப்போது ஒரு எண்ணெய் ஆய்வாளர் பிபிசியிடம் கூறினார்.
9 ஏப்ரல் 2025: 'விடுதலை நாள்' இடைநிறுத்தம்
மத்திய கிழக்குப் போரைத் தவிர, ஆச்சர்யமளிக்கும் வகையில் பிற வர்த்தக நடவடிக்கைகளுக்கான உதாரணங்களும் உள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, 'விடுதலை நாள்' என்று தான் அழைத்த ஒரு திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இது நடைமுறையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட விரிவான வரி விதிப்பாகும்.
இதனால் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.
ஆனால் ஒரு வாரம் கழித்து, சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் இந்த வரிவிதிப்பில் 90 நாட்கள் விலக்கு அளிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தபோது, பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
முக்கியக் குறியீடான எஸ் அண்ட் பி 500 இன்டெக்ஸ் 9.5% உயர்ந்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வுகளில் ஒன்றாகும்.
பட மூலாதாரம், Getty Images
- 18:00 பிஎஸ்டி :பங்குச் சந்தை உயரும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் பெரிய அளவில் ஊக வணிகத்தில் ஈடுபட தொடங்கினார்கள்.
- 18:18 பிஎஸ்டி: வரிகளை இடைநிறுத்துவதாக டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
- 18:19 பிஎஸ்டி: பங்குச் சந்தை அதிக அளவு உயர்ந்தது.
மீண்டும், இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக வழக்கத்திற்கு மாறான வர்த்தக முறை காணப்பட்டது. எஸ் அண்ட் பி 500-ஐ பின்தொடரும் ஒரு நிதியத்தின் மீது, அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான ஊக வணிக செயல்பாடுகள் நடந்தன.
பிஎஸ்டி நேரப்படி மாலை 18:00 மணிக்குச் சற்றுப் பிறகு, வர்த்தகம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு 10,000-க்கும் மேலாக உயர்ந்தது. அன்றைய தினத்தின் முற்பகுதியில் இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் மட்டுமே இருந்தது.
பங்குச் சந்தை தொடர்ந்து ஏழு நாட்கள் நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், சில வர்த்தகர்கள் அன்று சந்தை உயரும் என்று 2 மில்லியன் டாலருக்கும் மேல் ஊக வணிகத்தில் முதலீடு செய்தனர்
பந்தயம் கட்டினர். இந்த மிகப்பெரிய உயர்வு அவர்களுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர் லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கக்கூடும்.
அந்த வாரத்தின் பிற்பகுதியில், அமெரிக்க செனட்டிலுள்ள பல மூத்த ஜனநாயகக் கட்சியினர், அதிபரின் அறிவிப்புகள் "அமெரிக்க பொதுமக்களின் இழப்பில், நிர்வாகத்தின் உள்வட்டார நபர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆதாயம் அளித்துள்ளதா" என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நிதி ஒழுங்குமுறை அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு(எஸ்இசி) கடிதம் எழுதினர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்று பிபிசி கேட்டபோது, எஸ்இசி செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட வழக்கத்திற்கு மாறான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பிபிசி கேட்ட கருத்துக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்கவில்லை.
பட மூலாதாரம், Reuters
3 ஜனவரி 2026: மதுரோ சிறைபிடிப்பு
- டிசம்பர் 2025:பர்டன்சம்-மிக்ஸ் கணக்கு உருவாக்கப்பட்டது
- 2 ஜனவரி 2026: மதுரோ பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற கருத்தின் மீது அக்கணக்கு 32,000 டாலர் ஊக வணிகத்தில் முதலீடு செய்தது.
- 3 ஜனவரி 2026: மதுரோ சிறைபிடிக்கப்பட்டார் மற்றும் பர்டன்சம்-மிக்ஸ் 436,000 டாலர் வென்றது.
இணையவழி கணிப்புச் சந்தைகளின் சமீபத்திய வளர்ச்சியும் பார்வையாளர்களிடையே அதிகக் கவனிப்பைப் பெற்றுள்ளது.
பாலிமார்க்கெட் மற்றும் கல்ஷி போன்ற பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் தளங்கள், வானிலை, பேஸ்பால் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் ஊகித்துப் பந்தயம் கட்டும் வாய்ப்பைப் பயனர்களுக்கு வழங்குகின்றன.
அதிபர் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், பாலிமார்க்கெட் நிறுவனத்தில் முதலீட்டாளராக இருப்பதோடு அதன் ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். அவர் கல்ஷி நிறுவனத்தின் உத்தி ஆலோசகராகவும் செயல்படுகிறார். இது குறித்த கருத்தைக் கேட்க பிபிசி அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.
2025 டிசம்பரில், ஒரு பயனர் பாலிமார்க்கெட்டில் 'பர்டன்சம்-மிக்ஸ்' என்ற பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கினார். டிசம்பர் 30 அன்று, அந்தப் பயனர் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ 2026 ஜனவரி இறுதிக்குள் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனத் தனது முதல் ஊக வணிகத்தில் ஈடுபட்டார்
டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை, அந்த நிலைப்பாட்டின் மீது அக்கணக்கு, மொத்தம் 32,500 டாலர்களைப் ஊக வணிகத்தில் முதலீடு செய்தது
அடுத்த நாள் அமெரிக்கச் சிறப்புப் படைகளால் மதுரோ பிடிக்கப்பட்டு பதவியிறக்கப்பட்டபோது, பர்டன்சம்-மிக்ஸ் கணக்கு 4,36,000 டாலர்களை வென்றது.
சிறிது காலத்திற்குப் பிறகு, அந்தக் கணக்கு தனது பயனர் பெயரை மாற்றியது. அதன் பிறகு அக்கணக்கு எந்த ஊக வணிகத்திலும் ஈடுபடவில்லை.
பட மூலாதாரம், Getty Images
28 பிப்ரவரி 2026: இரான் மீதான தாக்குதல்கள்
- பிப்ரவரி 2026:பாலிமார்க்கெட்டில் ஆறு கணக்குகள் உருவாக்கப்பட்டன
- பிப்ரவரி 28:அக்கணக்குகள் தங்களுக்குள் 1.2 மில்லியன் டாலர் வென்றன.
பிளாக்செயின் பகுப்பாய்வு இணையதளமான பபிள்பேப்ஸ் கூற்றுப்படி, பிப்ரவரி மாதத்தில் பாலிமார்க்கெட்டில் ஆறு கணக்குகள் தொடங்கப்பட்டன.
அனைத்துமே பிப்ரவரி 28-க்குள் இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பதற்கு ஆதரவாக ஊக வணிகத்திலும் ஈடுபட்டன. அன்று அதிகாலையில் அதிபர் டிரம்ப் அந்தத் தாக்குதல்களை உறுதிப்படுத்தியபோது, இந்தக் கணக்குகள் தங்களுக்குள் மொத்தம் 12 லட்சம் டாலர்களை ஈட்டின.
அந்த ஆறு பயனர்களில் ஐந்து பேர் அதன் பிறகு எந்தப் ஊக வணிகத்திலும் ஈடுபட்டவில்லை. ஆனால் ஒரு கணக்கின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ஏப்ரல் 7-க்குள் அமெரிக்கா-இரான் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் எனச் சரியாகப் கணித்து 1,63,000 டாலர்களை ஈட்டியுள்ளது. அமெரிக்காவும் இரானும் அன்றுதான் அந்தப் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
பாலிமார்க்கெட் பிபிசியிடம் கூறுகையில், தாங்கள் "சந்தைக்கு மிக உயர்ந்த தரநிலைகளை நிர்ணயித்து, பராமரித்து மற்றும் செயல்படுத்துவதாக " தெரிவித்தது. மேலும் அதைச் செய்வதற்கு ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினருடன் "ஆக்கபூர்வமாக" பணியாற்றுவதாகவும் கூறியது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், பாலிமார்க்கெட் மற்றும் கல்ஷி ஆகிய இரண்டுமே உள்வர்த்தக முறையை ஒடுக்க புதிய விதிகளை வெளியிட்டன.
முன்கணிப்புச் சந்தைகள் கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷனின் (சி.எஃப்.டி.சி ) அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு சி.எஃப்.டி.சி பதிலளிக்கவில்லை. ஆனால் அதன் தலைவர் சமீபத்தில் ஒரு நாடாளுமன்றக் குழுவிடம், தனது அமைப்பு மோசடி மற்றும் உள்வர்த்தக முறையை " பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் வெள்ளை மாளிகை தனது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தது தெரியவந்துள்ளது. அதில், கணிப்புச் சந்தைகளில்முதலீடு செய்ய உள்ளகத் தகவல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களை அது எச்சரித்துள்ளது.
செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்கிள் அப்போது பிபிசியிடம் , "ஆதாரங்கள் இன்றி அரசு அதிகாரிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுவது அடிப்படை ஆதாரமற்றது மற்றும் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவதாகும்" என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
நிரூபிப்பது கடினம்
1933-ஆம் ஆண்டு செக்யூரிட்டீஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு உள் வர்த்தகம் சட்டவிரோதமான ஒன்றாக இருந்து வருகிறது.
2012-ல் இது அமெரிக்க அரசாங்க அதிகாரிகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது, ஆயினும் இன்றுவரை இந்தச் சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை.
இ.எஸ்.எஸ்.இ.சி பிசினஸ் ஸ்கூலில் நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் பால் ஊடின், இந்த விதிகளை அமல்படுத்துவது கடினம் என்கிறார்.
"தகவலின் ஆதாரம் யார் என்பதைக் கண்டறிய முடியாவிட்டால், நிதித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் வழக்குத் தொடர மாட்டார்கள்" என்று ஊடின் கூறுகிறார்.
பிபிசி தொடர்பு கொண்ட அமெரிக்க நிதி அதிகாரிகள் எவரும் உள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை.
"டொனால்ட் டிரம்ப் எதை அறிவிக்கப் போகிறார் என்பதை யாரோ ஒருவர் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டும் வகையில், ஒரு நிதி மீது மிகப்பெரிய அளவில் வர்த்தகங்கள் நடக்கலாம்" என்கிறார் ஊடின்.
"ஆனாலும், யாரும் தண்டிக்கப்படாமல் போவதற்கு வலுவான வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை