8 ஆண்டுகளாக தொடரும் சோகம் - மறுபடியும் 190 இலக்கை சேஸ் செய்யத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் 27வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்தியது.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் வீரர்கள் அபிஷேக் ஷர்மா, ஹெய்ன்ரிக் கிளாசன் இருவரும் தலா 59 ரன்கள் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுதத்து. சூப்பர் கிங்ஸுக்கு மேத்யூ ஷார்ட் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக இஷான் மலிங்கா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.
2018ம் ஆண்டுக்குப் பிறகு 190+ இலக்கை சேஸ் செய்ததே இல்லை என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருந்தத்தக்க சாதனை, இன்னும் தொடர்கிறது.
அபிஷேக் கொடுத்த அதிரடி தொடக்கம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். அகீல் ஹொசைனுக்குப் பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்ட முடிவு சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கைகொடுக்கவில்லை. ஷார்ட் வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார். அதன்மூலம் அவர் 15 பந்துகளிலேயே தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிவேக ஐபிஎல் அரைசதம் இது.
பவர்பிளேவில் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், அதன் கடைசி 2 பந்துகளில் கம்பேக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். முகேஷ் சவுத்ரி வீசிய ஆறாவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் டிராவிஸ் ஹெட் (23 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (டக் அவுட்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 75/2 என்ற நிலையில் பவர்பிளேவை முடித்தது சன்ரைசர்ஸ்.

பட மூலாதாரம், ANI
தடுமாறிய சன்ரைசர்ஸ், கரைசேர்த்த கிளாசன்
சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வழக்கமாக நடப்பது இந்த விஷயம் தான் - அதிரடியாகத் தொடங்குவார்கள், வேகமாக விக்கெட்டுகள் இழப்பார்கள், அதன்பிறகு நிதானமாக விளையாடி கிளாசன் அந்த அணியை மீட்பார், மறுபடியும் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை இழப்பார்கள். இந்தப் போட்டியிலும் இதே புளூ பிரின்ட் படித்தான் சன்ரைசர்ஸ் பேட்டிங் அமைந்தது.
அரைசதம் அடித்திருந்த அபிஷேக் ஷர்மாவும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 59 ரன்கள் எடுத்த அவர், ஓவர்டன் பந்துவீச்சில் அவர் எட்டாவது ஓவரிலேயே அவுட் ஆனார். அதன்பிறகு வந்த வீரர்கள் அதே வேகத்தில் வெளியேறினார்கள். ஆனால், கிளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 59 ரன்கள் எடுத்தார். அவர் 18வது ஓவரில் கம்போஜ் பந்துவீச்சில் போல்டானார்.
எதிர்பார்த்ததை விடக் குறைவான ரன் எடுத்திருந்ததால் அந்த இன்னிங்ஸிலேயே இம்பேக்ட் வீரராக லிவிங்ஸ்டனைப் பயன்படுத்தியது சன்ரைசர்ஸ். ஆனால், அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் தொடர்ச்சியாக யார்க்கர்கள் மற்றும் ஸ்லோயர் பால்களை சரியாக வீச எந்த சன்ரைசர்ஸ் பேட்டராலும் ரன் குவிக்க முடியவில்லை. அதனால் சன்ரைசர்ஸ் இன்னிங்ஸ் 194 ரன்களில் முடிவுக்கு வந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

பட மூலாதாரம், ANI
சென்னைக்கு கிடைத்த நல்ல தொடக்கம்
2018ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190க்கும் அதிகமான இலக்கை சேஸ் செய்யவில்லை. அது இந்தப் போட்டியில் மாறுமா என்று ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் எழுந்தன.
அந்த சந்தேகங்களுக்கு ஏற்ப இரண்டாவது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து நித்திஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். ஆனால், அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். நன்றாக அடித்து ஆடிக்கொண்டிருந்த அவருக்கு ஒரு கட்டத்தில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால், அவர் ஓட முடியாமல் தடுமாறினார். வலி இருந்தும் தொடர்ந்து ஆடிய அவர் நித்திஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.
மாத்ரே அவுட்டான மூன்று பந்துகளிலேயே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் 6 போட்டிகளிலும் சேர்த்து அவர் 82 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.
சில விக்கெட்டுகள் விழுந்திருந்தாலும் பவர்பிளேவை 76/3 என்று நல்லபடியாக முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சொதப்பிய இன்னொரு 190+ சேஸ்

பட மூலாதாரம், ANI
கெய்க்வாட் அவுட்டான பிறகு மேத்யூ ஷார்ட், சர்ஃபராஸ் கான் ஆகியோர் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதனால் 10 ஓவர்கள் முடிவில் 111/3 என்ற நிலையில் இருந்தது சூப்பர் கிங்ஸ்.
கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 84 ரன்களே தேவைப்பட்டது. சூப்பர் கிங்ஸ் எளிதாக இலக்கை சேஸ் செய்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில் ஆட்டம் மெல்ல மாறத் தொடங்கியது. இஷான் மலிங்கா வீசிய 11வது ஓவரில் சர்ஃபராஸ் கான் வெளியேறினார். அவர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் அதிரடி வீரர் டெவால் பிரெவிஸ் டக் அவுட் ஆகி வெளியேற சூப்பர் கிங்ஸுக்கு நெருக்கடி அதிகரித்தது.
அதுமட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் பவுண்டரிகள் வருவதுமே நின்று போனது. 9வது ஓவரின் கடைசிப் பந்தில் சர்ஃபராஸ் கான் ஒரு பவுண்டரி அடித்திருந்தார். அதன்பிறகு 28 பந்துகள் கழித்து 14வது ஓவரின் நான்காவது பந்தில் தான் ஒரு சிக்ஸர் வந்தது. இப்படி பவுண்டரிகள் வராததால் ரன்ரேட் குறைய, அது நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது.
கடைசி கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசி சவால் கொடுத்தார்கள். முதல் இரு ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்திருந்த சகிப் ஹுசைன், தன்னுடைய கடைசி 2 ஓவர்களிலும் சேர்த்து 12 ரன்கள் மட்டுமே கொடுத்து துபேவின் முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். நித்திஷ் குமார் ரெட்டி, இஷான் மலிங்கா என அனைவரும் சிறப்பாகப் பந்துவீச, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்றிருக்கும் சூப்பர் கிங்ஸ் ஏழாவது இடத்தில் இருக்கிறது.
டாஸில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். இது பார்க்க ஒரு சிறந்த ஆடுகளமாகத் தெரிகிறது. பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதால் இலக்கைத் துரத்த விரும்புகிறோம். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டாவது போட்டியிலிருந்தே நாங்கள் அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்யத் தொடங்கிவிட்டோம். நிதானமாகவும் சீராகவும் செயல்படுவதே வெற்றிக்கான வழி. கடந்த போட்டியில் நூர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார், அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தது நல்லது; அன்ஷுல் கூட கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுகிறார். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் போலத் தெரிகிறது, ஆனால் நாங்கள் அதற்கேற்ப விளையாட வேண்டும்." என்று கூறினார்.
சன்ரைசர்ஸ் கேப்டன் இஷான் கிஷன், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்திருந்தோம். இது ஒரு நல்ல ஆடுகளமாகத் தெரிகிறது, எனவே ஒரு வலுவான ஸ்கோரை எடுக்க விரும்புகிறோம். தனிப்பட்ட சாதனைக்காக இல்லாமல் அணிக்காக விளையாட வேண்டும். தொடர் இன்னும் நீண்ட தூரம் இருப்பதால், இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாகக் கவனித்து விளையாட வேண்டும். ஆரம்பத்தில் பந்து சற்று நகரும் என்று நினைக்கிறேன், எனவே பேட்டர்கள் பந்தைக் கவனித்து நிதானமாக விளையாட வேண்டும்." என்று கூறினார்.
பிளேயிங் லெவனில் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தப் போட்டிக்கான சூப்பர் கிங்ஸ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. அகீல் ஹொசைன் நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸின் இடது கை டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னைப் பயன்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்தார். அதேபோல், காயம் காரணமாக கலீல் அஹமது இந்த சீசனில் இருந்து விலகியிருக்கும் நிலையில், முகேஷ் சௌத்ரி பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.
பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால் பிரெவிஸ், ஜேமி ஓவர்டன், மேத்யூ ஷார்ட், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், மேட் ஹென்றி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்தப் போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஹர்ஷ் துபேவிற்குப் பதிலாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா அணியில் சேர்க்கப்படுவதாக டாஸின்போது இஷான் கிஷன் தெரிவித்தார். ஆனால், பேட்டிங்கின்போது விரைவாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் இம்பேக் வீரராகக் களமிறக்க்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), அனிகேத் வெர்மா, ஷிவாங் குமார், பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், இசான் மலிங்கா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஸ்மரன் ரவிச்சந்திரன், ஹர்ஷ் துபே, தில்ஷன் மதுஷன்கா, லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ஷல் பட்டேல்.
































