'மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை': தமிழக தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அது பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன.

மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளில் திமுக முக்கியமான பங்கு வகித்தது. அதேவேளையில் இந்த மசோதாக்களை வரவேற்றிருந்த அதிமுக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தது.

மசோதா தோல்வியடைந்ததுமே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அது பேசுபொருளாகிவிட்டது. மறுநாளே தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் மோதி, ராகுல்காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அதுதொடர்பாக எதிரணியைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். என்ன நடக்கிறது?

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் தோல்வியடைந்தது.

மோதி அரசு கொண்டு வந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்று, கடந்த 12 ஆண்டுகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

இந்த மசோதா விஷயத்தில் திமுக - அதிமுக இடையே நிலவும் முரண்பாடு தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலிக்கிறது. நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வியடைந்த மறுநாளே இரு தரப்பும் தேர்தல் களத்தில் அதனை முன்னிறுத்தி எதிரணியை சாடுகின்றன.

அதிமுக - பாஜக கூட்டணி கூறுவது என்ன?

கோவையில் நேற்று (18-04-2026) தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோதி, "திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதா நிறைவேறாமல் தடுத்து விட்டனர். எளிய குடும்பங்களில் இருந்து பெண்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் வந்திருப்பார்கள். தமிழ்நாட்டிற்கும் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும்." என்றார்.

"ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதனை விரும்பவில்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடும். திமுகவிற்கு காட்டுவதற்கும் எந்த சாதனையும் இல்லை, குற்றம் சொல்ல எந்த உண்மையான பிரச்னையும் இல்லை."

"தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் மாறக்கூடாது என திமுக தான் முன்னர் கூறினார்கள். அதன் அடிப்படையில் தான் மசோதா கொண்டு வரப்பட்டது. தற்போது போக்கை மாற்றிவிட்டார்கள்." என்றார் மோதி.

பட மூலாதாரம், Dhiraj Singh/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, தமிழக தேர்தல் பிரசார களத்தில் பிரதமர் மோதி

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரம் மற்றும் 20 எம்பி இடங்கள் என்கிற உரித்தான பங்கை அதிகரிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. 50% கூடுதல் இடங்கள் பெறுவதற்கு பிரதமர் மோதி வழங்கிய பொன்னான வாய்ப்பை நாம் தவறவிட்டது மட்டுமில்லை. மு.க.ஸ்டாலின் இந்த வாய்ப்பின் அடிப்படையை புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்த்துள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால் நாம் 9 இடங்களை இழந்திருப்போம். தங்களின் அர்த்தமற்ற எதிர்ப்பால் தற்போது 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறும், நாம் மேலும் இடங்களை இழப்போம்." என்றும் கூறியிருந்தார்.

இதேபோல், தமிழகம் வந்த பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதன் தமிழக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இதே குரலில் தேர்தல் பிரசார கூட்டங்களில் ஒலிக்கின்றனர்.

ராகுல் காந்தி பிரசாரம்

அதேநேரத்தில், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வேண்டும் என்ற முயற்சி முறியடிக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (18-04-2026) பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, "நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் என் உணர்வு தமிழ் மண்ணுடன் ஒன்றியிருக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா மூலமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதை நாம் நேற்று தோற்கடித்துவிட்டோம்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் "இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023"-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள். குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை," என தெரிவித்திருந்தார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதிமுகவின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா, அதிமுக வரலாற்றுப் பிழை செய்திருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023-ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது. அதனை தொகுதி மறுவரையறை உடன் இணைக்க வேண்டிய தேவை ஏன் இங்கு வந்தது என்பது தான் கேள்வி. பாஜக முன்வைக்கும் மசோதா தமிழ்நாட்டிற்கு தீங்கானது என்பதை உணராமல் திமுகவை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக இந்த மசோதாவை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார்." என்றார்.

மகளிர் இடஒதுக்கீட்டிற்கு தொகுதி மறுவரையறை முடிகின்ற வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறும் அவர், "தற்போது இருக்கின்ற இடங்களிலே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோருகிறோம். பாஜக அதற்கு தயாராக உள்ளதா? அதிமுக அதற்கு குரல் எழுப்பத் தயாரா? தமிழ்நாட்டு மக்கள் இதனை தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில நலனுக்கு எதிராக உள்ளவர்களுக்கு 23-ஆம் தேதி வாக்குப்பதிவின் போது மக்கள் பதிலளிப்பார்கள்." என்றும் தெரிவித்தார்.

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சசி ரேகாவோ, திமுக பெயரளவில் தான் சமூக நீதியைப் பேசுவதாக கூறுகிறார் . தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என முதலில் கூறியது அவர்கள் தான். தற்போது அதையே எதிர்க்கிறார்கள். மகளிரின் நலனில் திமுகவிற்கு அக்கறை இல்லை. திமுக கட்சியிலுமே மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்த மசோதா நிறைவேறியிருந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் இடங்கள் மட்டுமல்லாமல், மகளிருக்கும் இடஒதுக்கீட்டின் கீழ் கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும். இது மாநிலத்திற்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். திமுக சுய நல தேர்தல் நோக்கங்களுக்காக அதை கிடைக்காமல் செய்துவிட்டது." என்றார்.

திமுகவின் முடிவை பிற்போக்கான நகர்வு எனக் குறிப்பிட்ட அவர், "திமுக தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் மகளிர் உரிமைகளை அதிமுக விட்டுக்கொடுக்காது. திமுக மகளிரின் எதிர்ப்பைச் சந்திக்கும். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் பின்னாளில் அதனை 50% ஆக உயர்த்துவதற்கும் குரல் எழுப்பியிருக்கலாம். மகளிருக்கு இடம் கிடைக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துவிட்டார்கள்." என்றார்.

பட மூலாதாரம், Reuters

பிபிசி ஹிந்தியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி, "இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை; எனவே, தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அங்குள்ள முக்கியப் பிரச்னை தொகுதி மறுவரையறை (delimitation) சார்ந்ததாகவே இருந்தது." என்றார்.

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாததால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படலாம் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. "பெண்கள் வாக்கு வங்கி என்பதைவிட சிறுபான்மை வாக்கு வங்கி தான் அரசியல் கட்சிகளின் முடிவில் அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

"பாஜக இந்த மசோதாவைக் கொண்டு வந்தபோது, தங்களுக்கான சிறுபான்மை வாக்கு வங்கி பாதிக்கப்படும் என நினைத்த அகிலேஷ் மற்றும் தேஜஸ்வி போன்றோர் இதற்கு எதிராக வாக்களித்தனர். இது சில வழிகளில் பின்னடைவு என்றாலும் சிறுபான்மை வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க உதவும் என்பதால் அவர்கள் எதிர்த்து வாக்களித்தனர்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டிலும் பெண்கள் வாக்கு யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் இந்த மசோதா பெரிதாக தாக்கம் செலுத்தாது. மாறாக, பாஜகவுக்கு எதிராக உறுதியாக நிற்பது போன்ற தோற்றத்தை தருவதால் திமுக கூட்டணிக்கு சாதகமாக சிறுபான்மையினர் வாக்குகள் திரள வாய்ப்புள்ளது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படலாம்." என்றும் தெரிவித்தார்.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு