கம்பேக் கொடுத்த நடராஜன் ; டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமான இருவர்

    • எழுதியவர், நிதீஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தொட்டாலே சிக்ஸ் பறக்கும் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம், பவுலர்கள் பந்துபோடவே யோசிக்கும் மும்பை வான்கடே மைதானம், முன்னொரு காலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்து இன்று 'ஸ்பின்னா... அப்படின்னா?' என கேட்கும் சென்னை சேப்பாக்கம் என கிரவுண்டுகள் எல்லாம் பேட்ஸ்மேன்களின் பேட்டையாக மாறிக்கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக ஐ.பி.எல்லில்...! பதிலுக்கு பவுலர்கள் காத்திருப்பது ஒரே ஒரு கிரவுண்டில் ஆடத்தான். லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான ஏகானா ஸ்டேடியத்தில்.

நீளமான ஸ்ட்ரெயிட் பவுண்டரி, ஸ்பின்னர்களுக்கும் ஸ்லோ பால் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமான பிட்ச் என பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான சூழலே நிலவியதால் மற்ற மைதானங்களை போல இங்கே சிக்ஸ் மழை பொழிந்ததில்லை. அந்தவகையில் பேட்டுக்கும் பாலுக்கும் இடையில் சமநிலையை தக்கவைத்திருந்த மிகச்சில மைதானங்களில் ஒன்று ஏகானா.

ஆனால் ஐ.பி.எல்லின் பிசினஸ் மாடல், அடிக்கப்படும் சிக்ஸர்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்பதால் இந்த மைதானத்திலும் சமீபத்தில் பிட்ச்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதுவரை 7.5-ஆக இருந்த ரன்ரேட் ஒன்பதாக மாறியது. அதனால் நேற்றும் ஹை ஸ்கோரிங் மேட்ச்சை எதிர்பார்த்தே வந்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் நடந்ததோ வேறு.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை இங்கு ஆடப்பட்டிருக்கும் 22 ஐபிஎல் போட்டிகளில் ஒன்பதில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது என்பதே அவரின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

டெல்லி அணியில் கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆகிப் நபிக்கு இடமில்லை. லக்னௌவில் ஆஸ்தான பவுலரான ஆவேஷ் கானும் வெளியே இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சீசனில் லக்னௌவுக்கு ஓப்பனிங் ஆடி ரன்களைக் குவித்த மார்ஷும், மார்க்ரமுமே ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ஷுடன் ஓப்பனிங் இறங்கியது கேப்டன் ரிஷப் பன்ட். முன்னாள் வீரரான அஸ்வின் உள்பட சிலர், 'பன்ட் ஓப்பனிங் ஆடுவதே அவருக்கு நல்லது' என தொடருக்கு முன்பாக கருத்து தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், பன்ட்டின் ஓப்பனிங் ரெக்கார்ட் சொல்லிக்கொள்ளும்படியெல்லாம் இல்லை. இந்திய அணிக்காக சர்வதேச டி20யில் ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் ஆடி அவர் எடுத்திருப்பது வெறும் 71 ரன்களே. ஐ.பி.எல்லிலும் ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் இறங்கி 125 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

போக, இந்திய டி20 அணியில் வெயிட்டிங் லிஸ்டிலேயே கில், சாய் சுதர்ஷன், ஜெய்ஸ்வால் என எக்கச்சக்க ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பன்ட் ஓப்பனிங் இறங்கி சாதித்தாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகமே. பின் ஏன் இந்த பரீட்சார்த்த முயற்சி என்பது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு மட்டுமே வெளிச்சம்.

முதல் பந்திலிருந்தே அடிப்பது பன்ட்டின் ஆட்டமுறை இல்லை. சில பந்துகள் களத்தையும், பவுலர்களையும் அவதானித்தபின்பே ஆடுவார். ஆனால் இந்தமுறை அதற்கு வாய்ப்பே இல்லாதபடி ஒரு தற்செயல் ரன் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார். 9 பந்துகளில் ஏழு ரன்கள். அடுத்துவந்த மார்க்ரமும் சீக்கிரமே அவுட்டாகிவிட மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார் மார்ஷ். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 48/2. பிட்ச் இருந்த நிலைமைக்கு இது ஒரு நல்ல ஸ்கோர் தான். இப்படியே போனால் 170 எனும் சவாலான இலக்கை லக்னோ நிர்ணயித்துவிடும் என்கிற நிலைமைதான் இருந்தது அப்போது.

கம்பேக் கொடுத்த யார்க்கர் கிங்!

வேகப்பந்து வீச்சாளர்களின் பிரதான ஆயுதம் யார்க்கர்கள். காலுக்கு மிக அருகில் குத்தி எகிறும் பந்துகள் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அசந்தாலும் ஸ்டம்ப்களை தகர்த்துவிடும். அதேசமயம் போடுவதற்கு மிகச்சிரமமான பந்தும் யார்க்கர்களே. முக்கால்வாசி நேரம் அவை ஃபுல் டாஸ் பால்களாக பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிக்க ஏதுவாக மிதந்துபோய் பேட்டில் படும். பும்ரா போன்ற ஒருசிலருக்கே இந்த யார்க்கர் ஆயுதம் முறையாக பயன்பட்டிருக்கிறது.

இதே யார்க்கர்களில் இன்னொருவகை வைட் யார்க்கர்கள். துல்லியமாக வைட் லைனுக்கு அருகில் இறங்கும் பந்துகள். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் இந்தவகை பந்தை டீப் கவர் மீதோ, லாங் ஆஃப் மீதோ மட்டும்தான் அடிக்கமுடியும். அதே சமயம் அது சிக்ஸராக மாறுவதற்கு அசாத்திய பலத்தை இரு கைகளின் வழியேயும் பிரயோகிக்க வேண்டியதிருக்கும். பெரும்பாலான நேரங்களில் பலம் போதாமல் கேட்ச்சாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. தோனி போன்ற கேப்டன்கள் தங்களின் டெத் ஓவர் பவுலர்களிடம் எதிர்பார்ப்பது பந்து இந்த வைட் யார்க்கர்களைத் தான். சிஎஸ்கேவின் பிராவோ ஸ்லோ வைட் யார்க்கர்கள் போடுவதில் கைதேர்ந்தவர்.

இந்த இரண்டு யார்க்கர் ஆயுதங்களையும் ஐ.பி.எல்லில் சரியாக பயன்படுத்திய மற்றுமொரு வீரர் உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன். இந்தத் திறமையே அவரை டெத் ஓவர் பவுலராக, மூன்று ஃபார்மட்களிலும் ஆடக்கூடிய வீரராக இந்திய அணி வரை இழுத்துச் சென்றது.

ஆனால், தொடர் காயங்கள் காரணமாக அவரால் இந்திய அணியில் தன் இடத்தை தக்கவைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஐ.பி.எல்லிலும் அவர் ஆடியது இரண்டே போட்டிகளில்தான். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் ஆறு போட்டிகளில் ஆடி 8 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். எனவே இந்த முறை ப்ளேயிங் லெவனில் அவர் ஆடுவதே சந்தேகம் என்றெல்லாம் கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லி வந்தார்கள்.

ஆனால், டெல்லி அணி நிர்வாகம் அவர் மேல் நம்பிக்கை வைத்து முதல் போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்தது. 'இந்த வாய்ப்புக்கு தான் தகுதியானவர் என்பதை தன் முதல் ஓவரிலேயே நிரூபித்தார் நடராஜன். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே அவர் போட்ட லென்த் பாலில் டக் அவுட்டாகி வெளியேறினார் ஆயுஷ் படோனி.

இன்னொரு முனையில் இருந்து குல்தீப்பும் தன் பங்குக்கு தாக்க, விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தன. நேற்றைய போட்டியில் லக்னௌ அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஒரே வீரர் அப்துல் சமத் மட்டுமே. கடைசியில் அவரை வீழ்த்தவும் நடராஜனே வரவேண்டியதாக இருந்தது. ஸ்லாட்டில் சீறியபடி வந்த பந்தை சிக்ஸர் அடிக்க நினைத்து விக்கெட்டை பறிகொடுத்தார் சமத்.

லக்னௌ அணிக்கு அவரின் பங்களிப்பு 25 பந்துகளில் 36 ரன்கள். அதே ஓவரில் ஷமியின் விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்த 141 ரன்களுக்கு மொத்தமாகவே ஆட்டமிழந்தது லக்னௌ அணி. நான்கு ஓவர்கள் போட்டு 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார் நடராஜன். அவருக்கு மிகத் தேவையாய் இருந்த கம்பேக் இது.

”பயமறியா இளங்கன்று”

142 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது டெல்லி அணி. முதல் பந்தில் விக்கெட் எடுக்கும் சம்பிரதாயத்தை காலங்காலமாக பின்பற்றி வருகிறார் ஷமி. நேற்றைய ஆட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டது ராகுல். டீப் பாயின்ட்டில் தூக்கியடித்து டக் அவுட்டானார் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.

மறுபக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருக்கும் மொஹ்சின் கான், தன் முதல் ஓவரிலேயே நிதிஷ் ராணாவை அவுட்டாக்கி விக்கெட் மெய்டன் எடுத்தார். ஒரே போட்டியில் நிகழ்ந்த இரண்டாவது கம்பேக் இது.

அதுமட்டுமல்லாமல், பிரின்ஸ் யாதவும் தன் பங்கிற்கு ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் எடுக்க டெல்லி அணியின் ஸ்கோர் ஐந்து ஓவர்களில் 30/4. திரைப்படங்களில் வருவதைப்போல ஒரு ஹீரோ வந்துதான் டெல்லி அணியை காப்பாற்ற வேண்டிய நிலைமை.

ஆனால், விக்கெட்கள் அடுத்தடுத்து பறிபோன நிலையிலும், நூறு ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியதிருந்தபோதும் மில்லருக்கு முன்பாக நேற்று சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கியது அணி நிர்வாகம். நார்க்கியா மின்னல் வேகத்தில் வீசிய ஷார்ட் பாலை அசராமல் டீப் தேர்ட் திசையில் தூக்கி சிக்ஸ் அடித்து தன் வரவை அறிவித்தார்.

சமீர் ரிஸ்வி. உள்ளூர் போட்டிகளில் உத்தரப் பிரதேசத்துக்காக ஆடிவரும் அதிரடி ஆட்டக்காரர். 2023 ஏலத்தின்போது சமீர் ரிஸ்வியை குறிவைத்து மற்ற அணிகளோடு சண்டை போட்டு 8.40 கோடிக்கு அவரை வாங்கியது சென்னை அணி. சென்னை அணிக்காக அந்த சீசனில் ஐந்து போட்டிகளில் ஆடியிருந்தாலும் அவரால் 51 ரன்களே எடுக்க முடிந்தது. கடந்த சீசனில் டெல்லி அணிக்காகவும் நான்கே போட்டிகளில்தான்

ஆடியிருந்தார். மில்லர், ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா என இந்த சீசனில் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் அதிரடிக்கு பஞ்சமே இல்லையென்பதால் இவர் இந்த சீசனில் களமிறங்குவதே சந்தேகம் என்பதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால் நேற்று டெல்லி அணிக்கு இக்கட்டான நேரத்தில் இவர் கைகொடுத்தார்.

ஷபாஸ் அகமதின் ஒரே ஓவரில் லெக் சைடில் மூன்று பவுண்டரிகள், மார்க்ரமின் பந்தை விலகி நின்று லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ், ஸ்கொயர் கட் ஆடி ஒரு பவுண்டரி என 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது வெற்றிக்கு தேவையாக இருந்தது 35 ரன்கள் மட்டுமே. அதன்பின்னும் வேகம் குறையாமல் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விரட்டி 17.1 ஓவர்களிலேயே டெல்லி அணியை வெற்றிக்கோட்டைத் தாண்டி இழுத்துப்போனார். 47 பந்துகளில் 70 ரன்கள்.

ஆட்டத்தின் எந்தவொரு இடத்திலும் ஸ்கோர் போர்ட் கொடுக்கும் அழுத்தத்தை அவரும் எடுத்துக்கொள்ளவில்லை. ரசிகர்களுக்கும் கடத்தவில்லை. 22 வயதுக்கு அவர் நேற்று களத்தில் வெளிக்காட்டியது அசாதாரண முதிர்ச்சி. ஆட்டநாயகனும் அவரே.

முறையே பவுலிங்கில் ஒருவர், பேட்டிங்கில் ஒருவர் என இரு கம்பேக்கின் வழியே இரண்டு புள்ளிகளை சம்பாதித்திருக்கிறது டெல்லி. ஆனால் அந்த அணியின் பலம் என சொல்லப்பட்ட பேட்டிங் கிட்டத்தட்ட தோல்வியின் முனையை தொட்டுவிட்டு திரும்பியிருக்கிறது.

மறுபக்கம் லக்னௌவுக்கு பேட்டிங்கும் கைவரவில்லை. பவுலிங்கிலும் பவர்ப்ளேயைத் தவிர வேறு எந்தக்கட்டத்திலும் தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை. இரு அணிகளும் தங்கள் பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ள நேற்றைய போட்டி உதவியிருக்கிறது. அவற்றைக் களைவதன் மூலம் மட்டுமே இந்த இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியப்படும்.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு