You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் போர் நிறுத்தம் கோரியதா? டிரம்ப் கூற்றுக்கு அந்நாட்டில் பதில் என்ன?
இரானின் 'புதிய ஆட்சியின் அதிபர்' போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இரான் போர்நிறுத்தத்தைக் கோரியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கூற்று, "பொய்யானது மற்றும் ஆதாரமற்றது" என்று இரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இரானின் புதிய தலைவர் முந்தைய தலைவரைவிட தீவிரம் குறைந்தவராகவும் விவேகமானவராகவும் இருக்கிறார். இந்தப் போரை முடிக்க வேண்டும் என அவர் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்," என அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு மிகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தால் மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம். அது நடக்கின்றவரை நாங்கள் இரானை முழுமையாக அழித்து அவர்களை 'கற்காலத்திற்கே' அனுப்பிவிடுவோம்," எனத் தெரிவித்தார்.
புதிய இரான் தலைவர் என டிரம்ப் கூறியுள்ள நிலையில் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பதில் தெளிவில்லை.
போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வரும் தகவல்களை இரான் தொடர்ந்து மறுத்துவருகிறது. மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் சில தகவல்கள் மட்டுமே பரிமாற்றப்பட்டதாகவும் இரான் தெரிவித்துள்ளது.
டிரம்ப் யாரை கூறுகிறார்?
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, அந்நாட்டின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல மூத்த இரானிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மார்ச் 8 அன்று அயதுல்லா அலி காமனெயிக்கு பிறகு அவரது மகன் மொஜ்தபா காமனெயி பதவியேற்றார்.
அன்று முதல் அவர் பல எழுத்துப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளார், ஆனால் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது தனக்கே தெரியாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இரானுக்கு புதிய அதிபர் என யாரும் இல்லை. மசூத் பெசெஷ்கியன் 2024-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரானிய ஊடகங்களின்படி, அவர் நேற்று பொதுவெளியில் தோன்றினார். போரை முடிவுக்குக் கொண்டுவர இரானுக்குத் தேவையான மன உறுதி உள்ளது என்று அவர் செவ்வாயன்று கூறியிருந்தார். ஆனால் டிரம்ப் குறிப்பிட்ட நபர் இவர்தானா என்பது தெளிவாக இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு