'சுமார் 10,000 பேர் வேலை இழந்திருக்கலாம்' - ஆரக்கிள் நிறுவனத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், காலி ஹேய்ஸ்
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் செவ்வாயன்று "குறிப்பிடத்தக்க" அளவில் ஆட்குறைப்புகளை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் இணையத்தில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்படாத மூத்த மேலாளரான மைக்கேல் ஷெப்பர்ட், "மூத்த பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், செயல்பாட்டுத் தலைவர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்" ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக லிங்க்ட்இன் தளத்தில் எழுதியுள்ளார்.

ஆரக்கிள் நிறுவனத்திற்குள் செய்தி அனுப்பும் அமைப்பான 'ஸ்லாக்'-இல் செயலில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை மேற்கோள் காட்டி, இதுவரை சுமார் 10,000 பேர் வேலை இழந்திருக்கலாம் என்று ஊழியர் ஒருவர் பிபிசி-யிடம் செவ்வாயன்று தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி நியூஸ் தொடர்பு கொண்டபோது, கருத்து தெரிவிக்க ஆரக்கிள் நிறுவனம் மறுத்துவிட்டது.

செயற்கை நுண்ணறிவு

இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காகப் பெருமளவில் செலவு செய்து வருகிறது. ஆனால் இந்த ஆட்குறைப்புகள் அந்த முதலீட்டுடன் தொடர்புடையதா என்பது தெரியவில்லை.

ஆரக்கிள் நிறுவனம் தனது உள் செயல்பாடுகளுக்கு ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வருகிறது. குறைவான ஊழியர்களைக் கொண்டு அதிக வேலைகளைச் செய்ய இது வழிவகுப்பதாக அந்நிறுவன நிர்வாகிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்த "குறிப்பிடத்தக்க அளவிலான பணியாளர் குறைப்பு" என்பது ஊழியர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று ஷெப்பர்ட் எழுதியுள்ளார்.

"பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் செய்த அல்லது செய்யத் தவறிய எந்தவொரு விஷயத்திற்காகவும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பணிநீக்கங்கள் குறித்து விவரிக்கும் இது போன்ற டஜன் கணக்கான பதிவுகளில் அவருடைய பதிவும் ஒன்றாகும்.

முன்னாள் ஆரக்கிள் ஊழியர் கெண்டல் லெவின் லிங்க்ட்இன் தளத்தில், "நிறுவனத்தின் மிகப்பெரிய பணியாளர் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக" தனது பணி நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதிகாலையில் மின்னஞ்சல்கள் வரப்பெற்றதாகவும், அதில் தாங்கள் இனி பணியில் இல்லை என்றும், ஒரு மாதத்திற்கான பணிநீக்கக் கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகப் பல ஊழியர்கள் விவரித்துள்ளனர்.

ஆரக்கிள் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இது மற்ற நிறுவனங்களுக்கு மென்பொருள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்புகளை வழங்குகிறது.

பல நிறுவனங்கள்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான லாரி எலிசன், ஆரக்கிளின் இணை நிறுவனர், தலைவர் மற்றும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஆவார்.

ஆரக்கிள் நிறுவனத்திற்குள் குறிப்பிடத்தக்க பணிநீக்கங்கள் குறித்த பேச்சுகள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கின.

குறைவான ஊழியர்களைக் கொண்டு அதிக வேலைகளைச் செய்ய ஏஐ கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்ற ஆரக்கிள் நிர்வாகிகளின் வாதத்தைப் போன்றே, மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிளாக் நிறுவனத்தின் ஜாக் டோர்சி போன்ற தொழில்நுட்பத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு நிர்வாகிகளும் ஏற்கனவே இந்த ஆண்டில் தங்கள் நிறுவனங்களில் ஆட்குறைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் உள்ள இத்தகைய தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பெருமளவிலான பணிநீக்கங்களை நடத்தி வருகின்றனர். முந்தைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஏஐ மீது குற்றம் சுமத்தப்படவில்லை.

இந்த ஆண்டு வேலைவாய்ப்பைக் குறைத்த மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் அமேசான், பின்டெரெஸ்ட் மற்றும் எபிக் கேம்ஸ் ஆகியவை அடங்கும்.

ஸ்டார்கேட் முயற்சி

சொந்த உள்கட்டமைப்பு மற்றும் ஓபன் ஏஐ போன்ற பிற நிறுவனங்களுடனான கூட்டாண்மை என ஏஐ-யில் ஆரக்கிள் பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில் இந்த ஆட்குறைப்புகள் வந்துள்ளன.

இந்த ஆண்டு உள்கட்டமைப்பிற்காக குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் செலவிட அது திட்டமிட்டுள்ளது. மேலும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 50 பில்லியன் டாலர் கடனையும் பெற்றுள்ளது.

ஓபன் ஏஐ, சாஃப்ட் பேங்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவு பெற்ற ஏஐ முதலீட்டு நிதியான MGX ஆகியவற்றுடன் இணைந்து, ஸ்டார்கேட் முயற்சியிலும் ஆரக்கிள் ஒரு அங்கமாக உள்ளது.

ஸ்டார்கேட் என்பது அமெரிக்காவில் தரவு மையத் திறனை உருவாக்குவதற்கான 500 பில்லியன் டாலர் திட்டமாகும். அடுத்த சில ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள ஏஐ செயலாக்கம் மற்றும் மின் தேவைகளுக்காக இது அவசியம் என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"ஏஐ உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது, ஆனால் எங்களது செயல்பாட்டு முறை லாபத்தை உறுதி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று ஆரக்கிளின் இணை தலைமை நிர்வாக அதிகாரி கிளேட்டன் மாகுய்ர்க் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார்.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு