You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்டெமிஸ் 2: நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் மலம் கழிப்பது எப்படி?
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
நீங்கள் ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் இருக்கும்போது, எவ்வாறு கழிப்பறையைப் பயன்படுத்துவீர்கள்?
அதைப் புரிந்து கொண்டு சரியான முறையை உருவாக்க நாசா விஞ்ஞானிகள் 23 மில்லியன் டாலருக்கும் மேல் செலவு செய்துள்ளனர். இந்திய நேரப்படி ஏப்ரல் 2 அதிகாலை நடைபெறவுள்ள ஆர்டெமிஸ் 2 விண்வெளி பயணத்திற்காக இதனை உருவாக்கியுள்ளனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஆர்டெமிஸ் 2 மூலம் நாசா மேற்கொள்கிறது. இது சுமார் 10 நாட்கள் நீடிக்கும்.
இந்த பயணத்தில் செல்லும் விண்வெளி வீரர்களுக்காக 'பொதுவான கழிவு மேலாண்மை அமைப்பு' என்று அழைக்கப்படும் ஒரு முறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது மலம் மற்றும் சிறுநீர் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், கழிவுகளைக் கையாளும் விதம் பூமியில் இருப்பதை விட முற்றிலும் மாறுபட்டது.
தனி பயிற்சி
கழிவுகளை வெளியேற்ற அங்கு காற்று உறிஞ்சும் விசை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் ஒரு குழாய் வழியாக உறிஞ்சப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
திடமான கழிவுக்கு வலுவான இழுவைத் திறனுடன் ஒரு சிறப்பு இருக்கை உள்ளது. அது திடக்கழிவை இழுத்து ஒரு தனி கொள்கலனில் சேகரிக்கிறது. கழிப்பறையை வீரர்கள் பயன்படுத்தும் போது நகராமல் இருக்கும் வகையில் அவர்களை பிணைத்துக்கொள்ள சாதனங்கள் உள்ளன.
கழிவறையைப் பயன்படுத்தும் முறைக்குத் தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்வெளி வீரர்கள் கழிப்பறையை பயன்படுத்தும்போது அவர்களுக்கு தனிமை கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறிய அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் தங்கும் அறைக்கு அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் மனிதர்கள் இல்லாத 'ஆர்டெமிஸ் I' பயணத்தைத் தொடர்ந்து, நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்குச் செல்வதற்கான பயணங்களுக்கு தயாராகி வருகிறது. இதன் இறுதி இலக்கு 2030-களில் செவ்வாய் கிரகத்தை அடைவதாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு