மு.க.ஸ்டாலின் 4-வது முறையாக போட்டியிடும் கொளத்தூர் தொகுதி கள நிலவரம்

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செய்யும் பிரசாரத்தைப் போலவே அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் தனி கவனத்தைப் பெறுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி சென்னையில் அதிகம் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது.
2011ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார் மு.க. ஸ்டாலின். தற்போது 4வது முறையாக தொடர்ந்து அவர் இதே தொகுதியில் களம் காண்கிறார்.
கொளத்தூர் தொகுதியில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் அதிக அளவிலான வாக்காளர்கள் எண்ணிக்கை மாற்றம் கண்ட தொகுதிகளில் ஒன்றாக கொளத்தூரும் இருந்தது.

பட மூலாதாரம், X/MK Stalin
இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 2,07,251 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 99,607 ஆண் வாக்காளர்களும் 1,07,607 பெண் வாக்காளர்களும், 37 திருநர் வாக்காளர்களும் அடங்குவர்.
2008இல் சட்டப்பேரவை தொகுதி மறுவரையறையில் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியின் கீழ் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உருவானது.
2011இல் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுகவின் சைதை துரைசாமி போட்டியிட்டார். சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின், அதே தொகுதியில் 2021இல் 70,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். (தேர்தல் ஆணைய இணையதள தரவின்படி)
முதலமைச்சரின் தொகுதி, ஸ்டாலின் தொடர்ந்து மூன்று முறை வென்ற தொகுதி என்றாலும் பொதுமக்களுக்கு சில நிறைவேறாத கோரிக்கைகள் இருக்கவே செய்கின்றன. கொளத்தூர் தொகுதியில் என்ன நடக்கிறது?
'நான்கு முனைப் போட்டி'

பட மூலாதாரம், ECI
கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வி.எஸ்.பாபு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சௌந்தரபாண்டியன் லூடர் சேத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தவெக தலைவர் விஜய் தனது முதல் கட்ட பயணத்தில் கொளத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட போது 'பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை' எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் கொளத்தூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது, "உள் கட்டமைப்பு வசதிகள் எதுவுமே செய்யாத திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்குகிறார். மக்கள் அவருக்குச் சரியான பாடத்தைப் புகட்டி அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று அவர் பேசியிருந்தார்.

மக்கள் அடர்த்தி மிகுந்த தொகுதியாக இருந்தாலும் சென்னையின் மையப் பகுதிகளில் காணப்படும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்ற வானளாவிய கட்டடங்களை கொளத்தூர் தொகுதியில் அதிகம் காண முடிவதில்லை. சிறு வணிகமே இந்தத் தொகுதி மக்களின் பிரதானமான வாழ்வாதாரமாக உள்ளது.
கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்குச் செல்வோர் சென்னையின் மையப் பகுதி மற்றும் இதர புறநகர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வட சென்னையின் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியும் தற்போது கூடுதல் கவனம் பெற்று வருகிறது. பெரம்பூர், திரு.வி.க நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகள் அடுத்தடுத்து உள்ளன.
ஆனால் பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளுடன் ஒப்பிடுகையில், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பரபரப்பு சற்று குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சிக் கொடிகள் மற்றும் போஸ்டர்கள் அதிக அளவில் இருந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் மிகப்பெரிய அளவிலான பதாகைகளையோ விளம்பரங்களையோ பார்க்க முடியவில்லை. சிறிய அளவிலான பிரசாரங்களையே விரும்புவதாக வேட்பாளர்களும் பிரமுகர்களும் தெரிவிக்கின்றனர். பூத் ஸ்லிப் சரிபார்த்து விநியோகிக்கும் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொளத்தூரில் 5 ஆண்டுகளில் நடந்தது என்ன?
வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அலங்காரப் பணிகளில் மட்டுமே திமுக கவனம் செலுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டும் அதிமுகவினர் அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் வட சென்னையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக கொளத்தூர் இருந்தது என்கிறார் கொளத்தூரை சேர்ந்தவரும் மாநில குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான நீலகண்ணன்.
"கடந்த 2021 வரை மழை பெய்தால் 2, 3 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் மழைநீர் வடிகால் பணிகள் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தற்போது பெரிய அளவில் மழைநீர் தேங்குவது இல்லை," என அவர் தெரிவித்தார்.
அதேபோல கொளத்தூர் தொகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டமைப்புகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறுகிறார் சமூக ஆர்வலர் ரகுகுமார் சூடாமணி.
"கொளத்தூரில் புதிய கலைக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது, புதிய பூங்காக்கள், சிறு வணிகர்களுக்கான விற்பனை அங்காடி, சமூக நலக் கூடம், திருமண மண்டபம், நீச்சல் குளம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன." என்று அவர் தெரிவித்தார்.

கொளத்தூர் சந்திக்கும் சவால்கள் என்ன?
இவை ஒருபுறம் இருந்தாலும் சில அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றம் தேவை என குடியிருப்புவாசிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
வட சென்னையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான பேப்பர் மில்ஸ் சாலை கொளத்தூரை திரு வி.க நகர் மற்றும் பெரம்பூருடன் இணைக்கிறது.
இந்தச் சாலை நெடுகிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறுகிறார் நீலகண்ணன்.
"பேப்பர் மில்ஸ் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால் அலுவல் நேரங்களில் கொளத்தூர் தொடங்கி பெரம்பூர் வரை அனைத்து சந்திப்புகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. ஒரு சில இடங்களில் பெயரளவிலான பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்" என்றார் அவர்.
கொளத்தூர் தொகுதியில் ஆக்கிரமிப்புகளும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாகக் கூறுகிறார் ரகுகுமார்.
"பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபாதை என்பதே கிடையாது. பல இடங்களில் அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ரெட்டேரியின் மறுசீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டபோதும் பணிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை. பிரதான சாலைகள் நன்றாக இருந்தாலும் மகாத்மா காந்தி நகர், அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில் உள்புற சாலைகள் பல ஆண்டுகளாக மோசமான நிலையில்தான் உள்ளன" என்று அவர் கூறினார்.

கொளத்தூர் தொகுதியில் நிலத்திற்கான பட்டாக்கள் பெறுவதும் பிரச்னையாக இருந்து வருவதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளாக பட்டா பிரச்னை இருக்கிறது என்கிறார் சிவ சக்தி நகரைச் சேர்ந்த மெர்லின். 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டாவுக்காக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
"நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குதான் வசித்து வருகிறேன். கொளத்தூரின் கண்ணகி நகர், சிவசக்தி நகர் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளில் பல குடும்பங்கள் பட்டா பெறக் காத்திருக்கின்றன. முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின் போதுகூட பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதான அதிருப்தியும் மக்களிடம் வெளிப்படுவதைப் பார்க்க முடிந்தது.
சென்னை உள்வட்டச் சாலையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த சத்யா.
"கொளத்தூரை சுற்றி முக்கியமான வணிக மையங்கள் உள்ளதால் பிரதான சாலைகள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் அதை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. மழை பெய்தால் சாலைகள் நடப்பதே கடினமாகிவிடும். அதேபோல பாதாள சாக்கடைப் பணிகளும் பல இடங்களில் தொடங்கப்படாமலே உள்ளன. முதலமைச்சர் நீண்ட இடைவெளிகளில் அவ்வப்போது தொகுதிக்கு வந்துள்ளார். நலத்திட்ட உதவிகள் போன்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்கிறார். ஆனால் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை பொது மக்களால் எளிதில் அணுக முடிவதில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் சொல்வது என்ன?
கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணனை பல முறை அலைபேசி மூலம் தொடர்புகொண்டும் அவரின் இணைப்பைப் பெற முடியவில்லை.
அவருக்காக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அதிமுகவின் கொளத்தூர் பகுதி வட்டச் செயலாளரான ராமச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "முதலமைச்சரின் தொகுதி என்கிற விளம்பரம்தான் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அலங்காரபூர்வமாக சில பணிகளைத் திறந்து வைத்துள்ளனர். ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மழை நீர் வடிகால் பணிகளுக்குப் பிறகும் பல இடங்களில் மழைநீர் தேங்கவே செய்கிறது. அதிமுக வென்றால், சாலை, பாதாள சாக்கடை போன்ற மீதமிருக்கும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா தொடர்பான மக்களின் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு பிபிசி தமிழிடம் பேசுகையில், "குடியிருப்புப் பகுதிகளில் சாலை பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு சில இடங்களில் அவசர கதியில் சாலைகள் போடப்பட்டன. எனவே சாலைகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்" என்றார்.
கொளத்தூர் தொகுதியில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது எனக் கூறும் அவர், "இங்குள்ள இளைஞர்கள் வேலைக்காக தினசரி நீண்ட தூரம் பயணிக்கின்றனர். ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட புதிய தொழில் நிறுவனங்கள் வருவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க குரல் கொடுப்பேன். பட்டா பெறக் காத்திருக்கும் மக்களுக்கு தனிக்குழு அமைத்து எந்தவிதமான ஆட்சேபனை மற்றும் சட்டச் சிக்கல்களும் இல்லாத பட்சத்தில் உடனடியாக பட்டா பெறுவதற்கு ஏற்பாடு செய்வேன்" என்றார்.

கொளத்தூர் தொகுதியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சௌந்தர பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.
"கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத பல பணிகளைக் கடந்த 6 மாதங்களில் தேர்தலுக்காகச் செய்துள்ளனர். போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன்" எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை திமுகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மறுக்கிறார். "உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இத்தனை ஆண்டுகளாகச் செய்யாததைக் கடந்த 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். கொளத்தூர் தொகுதியையே மாற்றியுள்ளோம். மழை வெள்ள பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கொளத்தூர் தொகுதியில் இளைஞர்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதால் சில வளர்ச்சிப் பணிகள் தற்காலிகமாகத் தடைபட்டிருக்கலாம்" என்றார்.
பட்டா தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறும் அவர் நிலத்தின் தன்மையைப் பொருத்துதான் அதை வழங்க முடியும் எனத் தெரிவித்தார். "கிராம நத்தமாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் நீர்நிலை பொறம்போக்கு நிலமாக இருந்தால் கொடுக்க நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. நிலத்தின் தன்மை முழுமையாக ஆராயப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும்" என்றார்.
பேப்பர் மில்ஸ் சாலை விரிவாக்கம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "நிலம் கையகப்படுத்தும் பணிகள் சட்டச் சிக்கல்களால் தாமதம் ஆகியுள்ளது. சில வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை விரைவாக முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































