You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா?
"தி.மு.க உடன் எத்தனையோ முறை கூட்டணி பேசப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. 2016 ஆம் ஆண்டில் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' என கருணாநிதி கூறினார். பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் அது விழுந்துள்ளது"
தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது குறித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், 'கட்சிகளின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமை முடிவெடுக்கும்' என தி.மு.க கூறுகிறது.
தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?
மூன்று நாட்களில் மாறிய காட்சிகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதே நிகழ்வில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார். அவருடன் பிரேமலதா பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டணி உறுதிப்படுத்தப்படலாம் என ஊடகங்களில் பேசப்பட்டது.
ஆனால், அடுத்த மூன்று நாட்களில் தி.மு.க கூட்டணியை தே.மு.தி.க தலைமை தேர்வு செய்துள்ளது.
இப்படியொரு முடிவு எடுத்தது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, "கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்குப்பெட்டி வைத்து அனைவரின் கருத்தையும் கேட்டோம். இந்தமுறை தி.மு.க கூட்டணியை அவர்கள் விரும்பினர்" எனக் கூறினார்.
"தொண்டர்களின் முடிவையே என்னுடைய முடிவாக ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம்" என்கிறார் பிரேமலதா.
கருணாநிதி - விஜயகாந்த் நட்பு
அப்போது, கருணாநிதிக்கும் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்து பிரேமலதா விவரித்தார். "இருவரும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தனர். எங்கள் திருமணத்தைக் கருணாநிதி தான் நடத்தி வைத்தார்" எனக் கூறினார்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க உடன் கூட்டணி வைப்பதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பெரிதும் ஆர்வம் கட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "பழம் நழுவி பாலில் விழப் போகிறது" எனப் பேசினார்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா, "எத்தனையோ முறை பேசப்பட்டாலும் கூட்டணி என வரும்போது நிறைவேறாமல் இருந்தது. பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் இது விழுந்துள்ளது" என்கிறார்.
அ.தி.மு.க கூட்டணியை தவிர்த்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்தமுறை ஒட்டுமொத்த கட்சியின் விருப்பமாக தி.மு.க கூட்டணி இருந்தது" எனத் தெரிவித்தார்.
'ராஜ்யசபாதான் இலக்கு'
"மார்ச் 16-ஆம் தேதியன்று நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் கிடைக்க உள்ளன. அதில், ஓரிடத்தை தே.மு.தி.கவுக்கு கொடுப்பதற்கான வாக்குறுதியை வழங்கியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.
அ.தி.மு.க கூட்டணியில் நீண்டகாலமாக மாநிலங்களவை இடத்தை தே.மு.தி.க கேட்டு வருவதையும் அவர் பிபிசி தமிழிடம் மேற்கோள் காட்டினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, மாநிலங்களவை இடம் தொடர்பாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது பிரேமலதா தெரிவித்தார்.
ஆனால், "அவ்வாறு எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை" என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.
மேலும் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு மாநிலங்களவை இடங்களை அ.தி.மு.க தலைமை ஒதுக்கியது.
இதனை எதிர்பார்க்காத பிரேமலதா, கடந்த ஆண்டு மே மாதம் செய்தியாளர் சந்திப்பில், "தி.மு.க கூறியபடி கமலுக்கு மாநிலங்களவை இடம் கொடுத்துள்ளனர். அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். அப்போது தான் மக்கள் அவர்களை நம்புவார்கள்" என அவர் கூறினார்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "மாநிலங்களவை இடத்தைக் கொடுக்க அ.தி.மு.க மறுத்துவிட்டது. இந்தமுறை சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றை இலக்கத்தில் கொடுத்தாலும் தே.மு.தி.க பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு மாநிலங்களவை இடம் முக்கியமானதாக உள்ளது" என்கிறார்.
இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மாநிலங்களவை இடத்தை வைத்தே தே.மு.தி.க இந்த முடிவை எடுத்துள்ளது. அ.தி.மு.கவில் ஜெயக்குமார் உள்பட பல்வேறு மூத்த நிர்வாகிகள் மாநிலங்களவை இடத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்" என்கிறார்.
ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் கூட்டணி முடிவாகியுள்ளதே? என செய்தியாளர்கள் பிரேமலதாவிடம் கேட்டபோது,'' ஒரு கட்சிக்கு என்ன தேவை உள்ளதோ அதையெல்லாம் பேசுவோம். கூட்டணிக்கு தலைமையில் உள்ள ஸ்டாலின் அறிவித்தால்தான் சரியாக இருக்கும்.'' என்றார்.
'இப்படியொரு நகர்வை எதிர்பார்க்கவில்லை'
"தி.மு.க வசம் நான்கு மாநிலங்களவை இடங்கள் உள்ளதால் அவர்களால் ஓரிடத்தைக் கொடுக்க முடியும். அ.தி.மு.க நிர்வாகிகளைத் தாண்டி வேறு கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பை கொடுத்தால் கட்சிக்குள் பிரச்னை ஏற்படும்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், "சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி தே.மு.தி.க நகரலாம் என எதிர்பார்த்த சூழலில் இப்படியொரு நகர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.
தே.மு.தி.க எடுத்த முடிவு சரியானதா?
"தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வரும் தே.மு.தி.கவுக்கு இந்தக் கூட்டணி மிக முக்கியமானது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை தனது கூட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் முன்னிலைப்படுத்திப் பேசி வந்தார்.
"விஜயுடன் கூட்டணி சேருவதற்கும் தே.மு.தி.க தயாராக இல்லை என்பதையே பிரேமலதாவின் முடிவு காட்டுகிறது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.
"விஜயகாந்த்தின் ஒரு மகன் (விஜய பிரபாகரன்) விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இன்னொரு மகன் (சண்முக பாண்டியன்) சினிமாவில் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இன்னொரு திரை நட்சத்திரம் பின்னால் அவர்கள் செல்வதற்கு வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு என்ன பாதிப்பு?
"தற்போது கூட்டணியில் தே.மு.தி.க வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
"தே.மு.தி.கவை ஒரு காரணமாக தி.மு.க முன்வைக்கக் கூடும். அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் குறையலாம்" என அவர் தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. "இந்த முறை 25 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க கொடுப்பதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
"சுமார் 170 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடுவது என தி.மு.க முடிவெடுத்தால் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் வரலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
'உரிய முடிவை முதலமைச்சர் எடுப்பார்'
ஆனால், இந்தக் கூற்றை மறுத்துப் பேசுகிறார் தி.மு.க தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன்.
தேமுதிக வருகையை "காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கலாம் என்ற ரீதியில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை." எனக் கூறுகிறார்.
"இதுபோன்ற அனுமானங்களை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "அனைவரின் சுயமரியாதையும் அங்கீகாரத்தையும் காக்கும் வகையில் முதலமைச்சர் முடிவை எடுப்பார்" என்கிறார்.
"எங்களுக்கான இடங்கள் குறையாது"
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
"கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்ததை வரவேற்கிறோம். இந்தநேரத்தில் தே.மு.தி.க இணைவதன் மூலம் தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறையும் எனக் கூறுவது தேவையற்ற அனுமானம் எனக் கூறும் கோபண்ணா, "அவர்கள் வருவதன் மூலம் எங்களுக்கான இடங்கள் குறையாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் சரியான புரிதல் உள்ளது. அவை பேசி தீர்க்கப்படும்" எனத் தெரிவித்தார்
கூட்டணிகளை மாற்றுவதால் பாதிப்பா?
"கூட்டணிகளை மாற்றுவது குறித்து தே.மு.தி.க கவலைப்படுவதில்லை. விஜயகாந்த் சந்தித்த கடைசி தேர்தலிலும் அக்கட்சி சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்கிறார் மாலன்.
"விஜயகாந்த் மறைந்த பிறகு தே.மு.தி.கவுக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க இல்லாதது பாதிப்பாக பார்க்கப்படலாம்" எனக் கூறுகிறார் ஷ்யாம். "இதனால் ஏற்படும் நஷ்டம் குறித்து கட்சிகள் ஆலோசிக்கும். அதற்கான மாற்று வழிகளை அவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு