'கோலி விக்கெட்டை சொல்லி எடுத்தேன்' - எல்எஸ்ஜி வீரர் எம்.சித்தார்த்தின் இலக்கு என்ன?

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசன் நடந்துகொண்டிருக்கிறது. லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தங்களின் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

இந்த சீசனுக்காக கடுமையாகப் பயிற்சி செய்து தயாராகியிருக்கிறார் மணிமாறன் சித்தார்த். 27 வயதான இந்த இடது கை ஸ்பின்னர், 2024 முதல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்காக விளையாடிக் கொண்டிருக்கும் சித்தார்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிகளிலும் இருந்திருக்கிறார்.

இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இவர், இந்த ஆண்டு எல்எஸ்ஜி அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது பௌலிங் வேரியேஷன்கள், பேட்டிங் அனைத்தையும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை, வர்ணனையாளரும் கிரிக்கெட் வல்லுநருமான பகவதி பிரசாத் பிபிசி தமிழுக்காக நேர்காணல் செய்தார்.

தனது ஐபிஎல் பயணம் பற்றி, அதில் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி, இந்தப் புதிய ஐபிஎல் சீசனுக்கு தான் தயாராவது பற்றி சித்தார்த் பேசியிருக்கிறார்.

கேள்வி: "நீங்கள் முன்பு இந்தோனீசியாவில் இருந்தீர்கள். அங்கே இருந்தபோது கிரிக்கெட் மீது எப்படி ஆர்வம் வந்தது?"

பதில்: "நாங்கள் இருந்தது இந்தியர்கள் அதிகம் இருந்த பகுதி. அதனால் அங்கு கிரிக்கெட் விளையாடுவதும், பார்ப்பதும் அதிகமாகவே இருக்கும். அப்போது என் அப்பா கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார். நானும் என் அண்ணனும் சேர்ந்து அவர் விளையாடுவதைப் பார்க்கச் செல்வோம்.

வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவோம். எனக்கும் என் அண்ணனுக்குமே கூட நல்ல போட்டி இருக்கும். அவனுக்கு எல்.பாலாஜியை மிகவும் பிடிக்கும். நான் இடது கை வீரர் என்பதால் எனக்கு இர்ஃபான் பதான் பிடிக்கும். அவனுக்கு சச்சின் பிடிக்கும், அதனால் எம்.ஆர்.எஃப் பேட் வாங்குவான். எனக்கு கங்குலி பிடிக்கும். அதனால், நான் ஹீரோ ஹோண்டா பேட் வாங்குவேன். இப்படி ஜாலியாக ஆரம்பித்ததுதான்.

பின்னர் தொழிலுக்காக அப்பா இந்தியா வந்தார். அப்போது ஒரு பயிற்சி முகாமில் என்னைச் சேர்த்துவிட்டார். அப்போது நான் இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருந்தேன். ஆனால், என் பந்துவீச்சில் சுத்தமாக வேகம் இருக்காது. அதனால் ஸ்பின்னர் ஆகச் சொன்னார்கள். ஸ்பின் வீசி நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், வேகப்பந்துவீச்சாளர் ஆக வேண்டும் என்பது உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படியாக ஆரம்பித்தது, இப்போது இந்த நிலையில் வந்து நிற்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை."

கேள்வி: "2020இல் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டீர்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த பிறகு அந்த முதல் ஐபிஎல் அனுபவம் எப்படி இருந்தது?"

பதில்: "நான் அந்த வாய்ப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் என்னை ஒரு 3-4 போட்டிகள்தான் அவர்கள் பார்த்திருப்பார்கள். அதை வைத்தே எடுப்பார்களா என்றால்... சொல்ல முடியவில்லை. சிலர் எடுப்பார்கள். சிலர் எடுக்க மாட்டார்கள். என்னை அவர்கள் தேர்வு செய்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஒரு விஷயத்தை டிவியில் பார்த்திருக்கிறோம். நாமும் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையிலேயே நடக்கும்போது... அந்த உணர்வைப் போன்ற வேறெதுவுமே வாழ்க்கையில் கிடையாது.

அந்த டிரஸ்ஸிங் ரூம் அனுபவம் பயங்கரமாக இருந்தது. அங்கு இருந்தவர்கள் அனைவரும் சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள். அவர்களோடு இருக்கும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று தோன்றியது. ஆடுவோமா இல்லையா என்பது தெரியாது. ஆனால், அவர்கள் எப்படி தங்களைச் செதுக்கிக் கொள்கிறார்கள், எப்படி யோசிக்கிறார்கள், பந்துவீச்சாளர்கள் பேட்டர்களுக்கு எந்த மாதிரியான லென்த் வீசுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களைக் கவனிக்க முடியும்.

கேகேஆர் அணிக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தேன். அங்கும் அதேதான். ஆடுவோமா இல்லையா என்று தெரியாது. ஆனால், முடிந்தவரை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்கு பிரதான தேவையாக இருந்தது."

கேள்வி: "டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் உடன் நீங்கள் இடம்பெற்றிருந்தீர்கள். அந்தக் காலகட்டத்தில் அவரிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது?"

பதில்: "அங்கு டெல்லி அணியில் ஆஷ் (ஆர்.அஷ்வின்) அண்ணா மட்டும்தான் தமிழ் வீரர். அவரிடம் நிறைய பேசுவேன். கேள்விகள் கேட்பேன். உதாரணமாக 'ஓவர்ஸ்பின்' எப்படிப் போடவேண்டும் என்று கேட்டால் அவர் சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமல்ல, அவர் பந்துவீசும்போது, பேட்டர் என்ன மாதிரியான ஷாட் ஆடுவார் என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிட்டு வீசுவார். அதுபோலவே நடக்கும். அவர் எல்லோருக்கும் ஒரு படி முன்னே இருப்பார்.

அவரால் அது எப்படி முடிகிறது என்றால், அவர் நிறைய வீடியோக்கள் பார்க்கிறார். பேட்டர்களைப் பற்றி நன்கு கவனிக்கிறார். நாமும் அதேபோல வீடியோக்கள் பார்க்கும்போது நம்மாலும் நன்றாகச் செயல்பட முடியும் என்று கற்றுக்கொண்டேன்.

இப்போது நான் வீடியோக்கள், வேகன் வீல் (Wagon Wheel) போன்றவற்றைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பந்துவீசும்போது, என் பந்துவீச்சு இன்னும் கொஞ்சம் தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அது நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம்."

கேள்வி: "கொல்கத்தா, டெல்லி, லக்னௌ என நீங்கள் ஆடிய அணிகளில் முறையே பிரெண்டன் மெக்கல்லம், ரிக்கி பான்டிங், ஜஸ்டின் லேங்கர் என வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களோடு வேலை செய்யும்போது எப்படி இருந்தது? அவர்களுடைய தேவைக்கும், சிந்தனைக்கும் ஏற்றபடி நீங்கள் எப்படி உங்களைத் தகவமைத்துக்கொண்டீர்கள்?"

பதில்: "ஒரு சில தருணங்களை நான் ஒரு ரசிக மனப்பான்மையோடுதான் அணுகினேன். பான்டிங் நடத்தும் டீம் மீட்டிங் பயங்கரமாக இருக்கும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதை நான் மிகவும் எதிர்பார்த்து அப்படியொரு ரசிகனாகவே சென்றேன்.

லேங்கர் போன்ற ஒரு இனிமையான மனிதரைப் பார்த்திடவே முடியாது. பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் மிகவும் அக்ரஸிவானவர்கள் என்று சொல்லிவிடுவோம். ஆனால், அவர்களோ, நியூசிலாந்துகாரர்களோ மிகவும் இனிமையானவர்கள். அவர்களை நம்மால் எளிதாக அனுக முடியும்.

அவர்களின் ஆட்ட அணுகுமுறை, வீரர்களுடனான அணுகுமுறை போன்றவை எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தன. ஓர் அணியாக எப்படி ஒன்றிணைவது என்பதில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துவார்கள். அந்த டீம் கலாசாரத்தை டிஎன்பிஎல் தொடரில் ஆடும்போது லைகா கோவை கிங்ஸ் அணியில் செயல்படுத்த முடியுமா என்று முயற்சி செய்தோம். இப்படி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்."

கேள்வி: "ரிஷப் பன்ட் கடந்த ஆண்டு லக்னௌ அணியின் கேப்டனாக வந்திருக்கிறார். ஒரு பெரிய விபத்துக்குப் பிறகு மறுபடியும் கம்பேக் கொடுத்து வந்திருக்கிறார். கடந்த சீசன் (2025) ஆரம்பத்தில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரால் அதற்கு ஏற்ப செயல்பட முடியவில்லை. ஆனால், அப்போதும் சீசன் முடிவில் கம்பேக் கொடுத்து ஒரு சதம் அடித்தார். அவர் எப்படி அந்த சூழ்நிலைகளை அணுகினார்? அவரோடு அந்த டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொண்டது எப்படி இருந்தது? அவரிடம் நீங்கள் பார்த்த குணங்கள் என்ன?"

பதில்: "ரிஷப் பன்ட் போலப் பயிற்சி செய்யும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. பயிற்சி செய்துகொண்டே இருப்பார். இரண்டு மணிநேரம் கொடுத்தாலும் முழுமையாகப் பயிற்சி செய்வார். அவருக்கு அது ரொம்பவுமே பிடித்திருக்கிறது. அதனால், செய்துகொண்டே இருக்கிறார்.

அவர் ரன் அடிக்காதபோது அது அவரைப் பெரிதாக பாதித்திருக்கவில்லை. ஏனெனில், அணி வெற்றி பெற என்ன தேவையோ அதில்தான் அவரது கவனம் இருந்தது. அது மிகவும் அருமையான விஷயம். கேப்டனாக இருக்கும்போது நீங்கள் சரியாக ரன் அடிக்கவில்லையென்றால் நிச்சயம் அது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால், அவர் களத்துக்குள் அது எதையுமே கொண்டு வரவில்லை. இதுபோன்ற ஒரு குணத்தை அனைவரிடமும் பார்த்துவிட முடியாது. இதுபோல பேட்டிங் செய்ய வரும்போது ஒரு மனநிலை, ஃபீல்டிங் செய்ய வரும்போது வேறொரு மனநிலை என்பதெல்லாம் சிறப்பான விஷயம்."

கேள்வி: "ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் கேகேஆர் அணியில் இருந்தபோது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். 'ஐபிஎல் தொடரில் முதலில் யாருடைய விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறீர்கள்' என்று. அதற்கு விராட் கோலி என்று சொல்லியிருந்தீர்கள். 2024-இல்... சொன்னது போலவே உங்கள் முதல் ஐபிஎல் விக்கெட் விராட் கோலி. நினைத்துக்கொண்டே இருக்கும் விஷயம் நடக்கும் என்பதுபோல் அந்த விக்கெட் உங்களுக்குக் கிடைத்தது. கோலியின் விக்கெட்டுக்காக என்ன மாதிரி திட்டம் தீட்டியிருந்தீர்கள்?''

பதில்: "உங்களிடம் சொல்லும்போது அதை என் கனவு என்று சொல்லியிருந்தேன். ஆனால், நான் லக்னௌ அணிக்குச் சென்றபோது லேங்கர் என்னை அழைத்து 'நீ எனக்கு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திக் கொடுக்க வேண்டும்' என்று கூறினார். என்னடா எடுத்ததும் இப்படிக் கேட்கிறாரே என்று தோன்றியது. அதேநேரம், என்னை நம்பி அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய 2 ஆண்டுகள் நான் ஐபிஎல் ஆடவில்லை. அப்படியிருக்கும்போது நம்மை நம்பி ஒரு பொறுப்பைக் கொடுக்கிறார்கள். அதை நாம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் நான் விளையாடப் போகிறேன் என்று தெரிந்துவிட்டது. பார்ப்பவர்களிடமெல்லாம் 'நான் கோலி விக்கெட்டை எடுப்பேன்' என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். நாம் ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டே இருந்தால் நடக்கும் என்பார்களே... அதுதான் நடந்தது.

அந்தப் போட்டியில்கூட முதல் இரு ஓவர்களில் நான் விக்கெட் எடுக்கவில்லை. ஃபீல்டிங் செய்தபோதுகூட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று நினைத்து வருந்தினேன். ஆனால், கே.எல்.ராகுல் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கோலியின் விக்கெட்டை எடுத்தேன். நாம் நினைத்துக் கொண்டே இருக்கும் ஒரு விஷயம் நடக்கும் என்பது புரிந்தது."

கேள்வி: "அன்று கோலியை சொன்னதுபோல், இந்த 2026 ஐபிஎல் தொடரில் நீங்கள் விக்கெட் வீழ்த்த விரும்பும் 5 பேட்டர்கள் யார்?"

பதில்: "ரோஹித் ஷர்மா விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. அவரது விக்கெட்டை எடுப்பது ஆட்டத்தின் போக்கையே மாற்றும். அது ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கோலியின் விக்கெட்டை இன்னொரு முறை எடுக்க வேண்டும். ஏனெனில், முதல் முறை வீழ்த்தியது எதேச்சையானது என்று சொல்லி விடுவார்கள்.

அடுத்ததாக, கே.எல்.ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட். இவர்களை அவர்களின் அணிகள் பெரிதும் நம்பியிருக்கின்றன. எனக்கு அப்படிப்பட்ட வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்கப் பிடிக்கும். வீழ்த்துவது ஒரு விக்கெட்டாக இருந்தாலும், அது ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைப்பேன்.

கடைசியாக, அபிஷேக் ஷர்மா அல்லது டிராவிஸ் ஹெட் யாராவது ஒருவரின் விக்கெட்டை எடுத்தாலும் ஆட்டத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்."

கேள்வி: "சமீபத்தில் நடந்த லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் பயிற்சி முகாம் எப்படிப் போனது?''

பதில்: "நான் அவ்வப்போது இங்கு பரத் அருண் (லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளர்) சாருடன் பயிற்சி செய்துகொண்டே இருந்தேன். பின்னர் எல்எஸ்ஜி அணியின் பயிற்சி முகாம் 5 நாள்கள் இங்கு சென்னையிலேயே நடந்தது. அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களுமே இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட 'ரோல்' கொடுத்தார்கள். அதில் அதிகம் வேலை செய்தோம். அந்தப் பயிற்சி முகாம் நன்றாகவே சென்றது.

மேலும், எங்கள் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகர் கார்ல் குரோவ் வந்திருந்தார். அவருடன் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்தேன். ஒரு மாதம் முன்பே அவரோடு பயிற்சி செய்திருந்தேன். அதைத் தற்போது தொடர்ந்தோம். கேரம் பால், பேக் ஸ்பின் போன்ற புதிய வேரியேஷன்களை உருவாக்க முடியுமா என்பது போன்ற விஷயங்களை விவாதித்தோம்."

கேள்வி: "இந்த ஐபிஎல் சீசனில் உங்கள் இலக்குகள் என்ன?"

பதில்: "நிச்சயம் நாங்கள் கோப்பை வெல்ல வேண்டும் என்று விளையாடுவோம். எங்கள் அணியின் உரிமையாளருக்காக, லக்னௌ ரசிகர்களுக்காக நிச்சயம் கோப்பையை வெல்ல நினைக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் எந்த இலக்குகளும் வைத்துக் கொள்வதில்லை. அணியின் வெற்றியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். அவ்வளவுதான்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு