You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான்: மோதியின் வாழ்த்துக்கு ஷாபாஸ் ஷெரீப் ஒரே வரியில் கூறிய பதில் - புதிதாக வெடித்த விவாதம்
பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இணையம் வழியாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்திக்கு ஷாபாஸ் ஷெரீப் அளித்துள்ள பதில் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த வாரம்தான், பாகிஸ்தானின் பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 7ஆம் தேதி இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஷாபாஸ் ஷெரீப், “எனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி நரேந்திர மோதி” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தச் சிறிய வாழ்த்து செய்திகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. காரணம், பொதுவாகவே ஒரு நாட்டின் தலைவராக ஒருவர் பதவியேற்கும்போது பிற நாட்டு தலைவர்களின் வாழ்த்துச் செய்தியானது கொஞ்சம் நீண்டதாக இருக்கும்.
குறிப்பாக அதில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பான தகவல்களும் அடங்கியிருக்கும். ஆனால், பாகிஸ்தான் மற்றும் இந்தியா பகிர்ந்துள்ள ட்வீட்களில் அப்படியான எந்தத் தகவலுக்கும் இடமில்லை. சொல்லப்போனால் வாழ்த்துச் செய்தியே ஒரு வரியைத் தாண்டவில்லை.
இதுகுறித்து சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் சில ஊடகங்கள் பிரதமர் மோதியின் காஷ்மீர் பயணம் குறித்தும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் உறவை உணர்த்தும் குறுகிய உரையாடல்
பிரதமர் மோதியின் சிறு வாழ்த்து செய்திக்கு எப்படி பதில் தருவது என்று பாகிஸ்தான் அரசில் விவாதங்கள் நடைபெற்றதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த முறை இதே ஷாபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றபோது ‘மாண்புமிகு’ என்று பொருள்படும்படி (His Excellency) என்ற பதத்தைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோதி. ஆனால், இந்த முறை அது போன்ற எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை.
அதைத் தாண்டி, பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்தவொரு விஷயத்தையும் தனது ட்வீட்டில் பிரதமர் மோதி தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னாள் பயன்படுத்திய தீவிரவாதம் போன்ற வார்த்தைகளைக்கூட மோதி இந்த முறை பயன்படுத்தவில்லை.
அந்த செய்தித்தாளில், மோதி தெரிவித்திருக்கும் வாழ்த்தைப் போலவே அவருக்குப் பதில் கொடுக்குமாறு ஷாபாஸ் ஷெரீப்புக்கு ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், “இந்த நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என்பதையும், பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் மோதி மற்றும் ஷெரீப் இடையிலான குறுகிய உரையாடல் நமக்கு உணர்த்துவதாக” தெரிவிக்கிறார்.
ஒருபுறம் ஷாபாஸ் ஷெரீப் இதுபோன்ற பதிலளிக்கும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா, பாகிஸ்தான் எப்போதும் இந்தியா உட்பட தனது அண்டை நாடுகள் அனைத்துடனும் நல்ல உறவையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்தாஜ் சஹ்ரா கூறுகையில், “உறவு என்பது சமத்துவம் மற்றும் மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும். பயங்கரவாதம், அப்பாவிகளைக் கொல்வது, பிற நாடுகளுக்குள் நுழைந்து இந்தியர்களைக் கொல்வது போன்ற பிரச்னைகள்தான் பாகிஸ்தானுக்கு கவலையளிக்கும் விஷயங்கள். அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம், காஷ்மீர் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்,” என்கிறார்.
ஷாபாஸ் ஷெரீப் ஆட்சியின் கீழ் இருநாட்டு உறவுகள் எப்படி இருக்கும்?
வரும் நாட்களில் இந்தியாவுடனான உறவுகள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும்கூட விவாதித்துள்ளது.
இதுகுறித்துப் பேசுகையில், “இன்னும் அமைச்சரவை உருவாக்கப்படவில்லை என்று உங்களுக்கே தெரியும். அமைச்சரவை உருவாக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை குறித்த விதிகள் உருவாக்கப்படும். அதற்குப் பிறகு எப்படி வரும் நாட்களில் இந்தியாவுடன் பாகிஸ்தான் உறவு அமையும் என்பது குறித்து எங்களால் எளிதில் பதிலளிக்க முடியும்,” என்று கூறுகிறார் மும்தாஜ் சஹ்ரா.
பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவரான இஷாக் தர்ருக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
இஷாக் தர் பிரதமர் மோதியின் காஷ்மீர் பயணம் குறித்தும், அங்கு நிலைமை சுமூகமாக இருப்பதைப் போல் காட்டுவதற்கான முயற்சியே இது என்றும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
“அங்கு இயல்பு நிலையே நிலவுவதாகக் காட்ட முயற்சி செய்வது உண்மையில்லை என்று நாங்கள் நம்புகிறோம். உள்ளூர் மக்களுக்கு உரிமையும், சுதந்திரமும் இல்லாத ஒரு பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
கடந்த 7ஆம் தேதி காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோதி. 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370வை நீக்கிய பிறகு முதல்முறையாக காஷ்மீருக்கு பயணம் சென்றுள்ளார் அவர்.
வேறு எந்த நாடுகளுக்கெல்லாம் ஷெரீப் நன்றி கூறினார்?
ஜியோ டிவி இணையதளத்தின்படி, இந்திய பிரதமர் மோதி, ஷாபாஸ் ஷெரீப் இருவரும் பொதுவெளியில் பேசிகொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான இது போன்ற பொதுவெளி உரையாடல்கள் அரிதாகவே காணப்படுபவை.
பிரதமர் மோதியை தாண்டி, ஷாபாஸ் ஷெரீப் மேலும் நான்கு தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்கள் அனைத்திலும், அந்நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவு குறித்து விரிவாக எழுதியுள்ளார் அவர்.
அப்படி சௌதி அரேபியாவின் வாழ்த்துக்குப் பதில் எழுதுகையில், சௌதியின் பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசரும், எனது சகோதரருமான முகமது பின் சல்மானுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். எனது புதிய பொறுப்பிற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு வரலாற்றுப்பூர்வமானது மற்றும் ஆழமானது. இந்த உறவு மதம் மற்றும் கலாசார ஒற்றுமைகள் அடிப்படையில் உருவானது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியா மட்டுமின்றி, இரான், கத்தார் மற்றும் கென்ய நாட்டு தலைவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் ஷெரீப்.
பிரதமர் மோதியின் காஷ்மீர் பயணம் குறித்த விவாதம்
டான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, வியாழக்கிழமை காஷ்மீரில் பேசிய பிரதமர் மோதி காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல தான் முயன்று வருவதாகப் பேசியுள்ளார்.
அவரது காஷ்மீர் பயணத்தின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் இருந்து நேரடியாக காஷ்மீரை ஆட்சி செய்வதன் மூலம், இப்பகுதியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக மோதி அரசு கூறி வருகிறது.
இருப்பினும், காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் முடிவுக்கு வந்துவிட்டதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோதி காஷ்மீர் வந்தபோது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் அவரது பேரணிக்கு வர உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவில் இடைவெளி அதிகரித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)