You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
200 யானைகள், 300 சிறுத்தைகள் கொண்ட அனந்த் அம்பானியின் தனியார் உயிரியல் பூங்காவில் என்ன நடக்கிறது?
ரிலையன்ஸ் குழுமம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 'வந்தாரா' என்ற வனம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் யோசனையின் பேரில் இந்த வனம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் இதை 'தனியார் உயிரியல் பூங்கா' என்று அழைக்கிறது. இங்கு யானைகள் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் தொடர்பாக நீதிமன்றங்களில் பல பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில், அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவின் போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு, இந்த உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைக் காட்டுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாம்நகருக்கு விலங்குகள் கொண்டு செல்லப் படுவதற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
'வந்தாரா' உயிரியல் பூங்காவில் என்ன நடக்கிறது?
ஜாம்நகரில் 3,000 ஏக்கரில் வனவிலங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இதில், பெரும்பாலான இடம் யானைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
இந்த யானைகளின் நலனைக் கவனிக்க 500 பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனர். இதில் கால்நடை மருத்துவர்கள், உயிரியலாளர்கள், நோயியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளனர்.
மொத்தமுள்ள 3,000 ஏக்கர் பரப்பளவில் 650 ஏக்கர் சில விலங்குகளைப் பாதுகாக்கவும், மறுவாழ்வு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தவிர, உலகின் பிற பகுதிகளில் இருந்து, அழிந்து வரும் விலங்குகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் 2,100 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வந்தாராவில் 300 சிறுத்தைகள் உள்ளன. இவை தவிர புலிகள், சிங்கங்கள் மற்றும் ஜாகுவார்களும் உள்ளன. மேலும் முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் உட்பட 1,200 ஊர்வன உள்ளன. வந்தாராவுக்குள் 300 மான்கள் உள்ளன.
மொத்தத்தில், 43 இனங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் இங்கு உள்ளன.
இதுதான் இந்தியாவின் முதல் தனியார் உயிரியல் பூங்காவா?
வந்தாராவில் யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் நலனைப் பராமரிக்கவும் 'ராதாகிருஷ்ணா விலங்குகள் நல அறக்கட்டளை' என்ற அமைப்பு உள்ளது.
மீதமுள்ள விலங்குகளை பராமரிக்கவும் அவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ‘கிரீன்ஸ் விலங்கியல் மையம்’ என்ற அமைப்பு வேலை செய்கிறது.
வந்தாரா மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் ‘மினி மிருகக்காட்சி சாலையாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலை 10 மார்ச் 2021 அன்று உருவாக்கப்பட்ட Greens Zoological, Rescue and Rehabilitation Centre (GZRRC) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வந்தாராவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலவையான எதிர்வினைகளை பகிர்ந்து வருகின்றனர். இதை இந்தியாவின் ‘முதல் தனியார் உயிரியல் பூங்கா’ என்று அழைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்திய வன சேவையின் (IFOS) முன்னாள் அதிகாரி பிரஜ்ராஜ் சர்மா, தனியார் உயிரியல் பூங்காக்கள் இந்தியாவுக்கு புதிதல்ல என்றார். “தனியார் உயிரியல் பூங்காக்கள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. உதாரணமாக ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா குழுமம் நடத்தும் மிருகக்காட்சிசாலை. இது தவிர, நாட்டின் பல பகுதிகளில் தனியார் நிர்வாகத்தில் மான் பூங்காக்கள் நடத்தப்படுகின்றன,'' என்றார்.
ஆனால், இந்தியாவில் எப்படி இதுபோன்ற உயிரியல் பூங்கா தொடங்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு, நாட்டில் உள்ள தனியார் உயிரியல் பூங்காக்களுக்கு அனுமதி வழங்கும் 'மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின்' (Central Zoo Authority) உறுப்பினர் செயலர் பிரஜ்ராஜ் சர்மா பதிலளித்தார்.
“இந்தியாவில் எந்த மிருகக்காட்சிசாலையையும் தொடங்க அல்லது நடத்த, முதலில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் 2009-இல் திருத்தப்பட்ட உயிரியல் பூங்கா அங்கீகார விதிகளின்படி அவை நடத்தப்பட வேண்டும்,” என்றார்.
விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்?
தனியார் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்பது ஒரு முக்கிய கேள்வி.
"மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் இந்த மிருகக்காட்சி சாலைகளுக்கு அடிக்கடி சென்று விலங்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சரிபார்க்கிறது," என்று பிரஜ்ராஜ் சர்மா கூறினார்.
மேலும், “விலங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள தரநிலைகளை தனியார் உயிரியல் பூங்கா மேலாளர்கள் பின்பற்றவில்லை என்றால், நாங்கள் கண்டறிந்த பிரச்னைகளை உடனடியாக அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவோம். தனியார் உயிரியல் பூங்காக்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் நிரந்தரமானது அல்ல. எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்,'' என்றார்.
தனியார் உயிரியல் பூங்காக்களில் யானை, புலி இறந்தால் என்ன நடக்கும்?
ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வெளியிட்டுள்ள வீடியோவில், யானைக்கு தந்தங்கள் இருப்பதைக் காணலாம்.
இந்திய வனவிலங்கு சட்டம் 1972-இன் அட்டவணை ஒன்றின்படி, யானைகளைப் பாதுகாப்பதற்கு, புலிகளைப் பாதுகாப்பதில் பின்பற்ற வேண்டிய தரநிலைகளே பின்பற்றப்பட வேண்டும்.
இந்திய வனத்துறையின் முன்னுரிமைகளில் ஒன்று யானை தந்தம் மற்றும் புலி நகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பதாகும்.
"இந்தச் சட்டத்தின் ஒரு அட்டவணையில், விலங்குகள் இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கடுமையான விதிகள் உள்ளன. இறந்த விலங்கினைப் பற்றி அந்த தனியார் உயிரியல் பூங்கா அதிகாரிகள் அல்லது நிர்வாகம் மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளர் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். விலங்கு இறந்த பிறகு, பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். யானை இறந்தால், அதன் தந்தங்களை அதன் உடலில் இருந்து அகற்றக்கூடாது. உடல் முழுவதும் எரிக்கப்பட வேண்டும். விலங்கு ஏதேனும் நோய்த்தொற்றால் இறந்திருந்தால், அதன் உடலை தகனம் செய்ய வேண்டும்,” என்று பிரஜ்ராஜ் சர்மா கூறினார்.
மேலும், தனியார் உயிரியல் பூங்காவில் விதிகளை மீறி செயல்பட்டால், வனத்துறையினர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
''விதிமீறல் நடந்திருப்பது வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தால், விசாரணை நடத்தி, தனியார் உயிரியல் பூங்கா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார்.
தனியார் உயிரியல் பூங்காக்கள் அவசியமா?
உயிரியல் பூங்காக்களை தொடங்கி வன உயிரினங்களை பாதுகாக்க முன்வருவது நல்லதுதான் என வனத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆப்பிரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் தனியார் உரிமையாளர்களின் பெரிய வனவிலங்கு பாதுகாப்பு மையங்களை நடத்தி வருகின்றனர்.
“வனத்துறையிடம் வளங்களும், நிதியும் குறைவாக உள்ளன. அதனால்தான், தனியார் அமைப்புகள் விலங்குகளை பராமரித்து மறுவாழ்வு அளிப்பது நல்ல விஷயம்,” என்று பெயர் வெளியிட விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“ஆனால், இதில் தனியார் உயிரியல் பூங்காக்களுக்கு வனங்களிலிருந்து விலங்குகள் கொண்டு வரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட வன விலங்குகளை கொண்டு வந்தாலும், அவை குணமடைந்தவுடன் காட்டில் விடப்பட வேண்டும்,'' என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)