You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
15 பந்துகளில் அரைசதம் அடித்த 15 வயது சூர்யவன்ஷி - சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி
ஐபிஎல் 2026 சீசனில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் விளையாடுகிறது. கவுஹாத்தியில் நடக்கும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
ராயல்ஸ் அணி தங்களின் 3 ஹோம் ஆட்டங்களை கவுஹாத்தியிலும் விளையாடுகிறது. அதனால், இது அந்த அணியின் ஹோம் ஆட்டமாகக் கருதப்படும்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 43 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டியது. அந்த அணியின் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அரைசதம் கடந்த ஒரே பேட்டர் இவர்தான்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அதிர்ச்சி தொடக்கம்
புற்களும் ஈரப்பதமும் நிறைந்திருந்த அந்த ஆடுகளத்தில் ஆடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடினமாக இருந்தது. ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாந்த்ரே பர்கர் இருவரும் சிறப்பாக பந்துவீச்சைத் தொடங்கினார்கள்.
இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினார் பர்கர். பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்த சாம்சன் பந்தை விட்டுவிட்டதால் போல்ட் ஆனார். அடுத்த ஓவரின் கடைசிப் பந்தில் ருதுராஜ் கெய்க்வாடை போல்டாக்கினார் ஆர்ச்சர். பெரிய ஷாட் அடிக்கச் சென்று பந்தைத் தவறவிட்டுத்தான் சிஎஸ்கே கேப்டனும் அவுட் ஆனர். அவர்கள் இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நான்காவது ஓவரின் முதல் பந்தில் பர்கர் வீசிய பவுன்சரை சமாளிக்க முடியாமல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஆயுஷ் மாத்ரே. அவர் இன்னிங்ஸ் முதல் பந்திலேயே முடிவுக்கு வந்தது. 3.1 ஓவர்களில் 19/3 என்ற நிலையில் இருந்ததால், அப்போதே சர்ஃபராஸ் கானை இம்பேக்ட் வீரராகக் கொண்டுவரும் நிலைக்குச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
போராடிய ஓவர்டன்
அடுத்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுமே நிலைத்து நின்று விளையாட முடியாமல் தடுமாறினார்கள். சர்ஃபராஸ் கான், கார்த்திக் ஷர்மா போன்றவர்கள் ஒருசில பவுண்டரிகள் அடித்திருந்தாலும் அவர்களால் பெரிய இன்னிங்ஸ் ஆடவோ, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்கவோ முடியவில்லை.
மேத்யூ ஷார்ட் 2, சர்ஃபராஸ் கான் 17, கார்த்திக் ஷர்மா 18, ஷிவம் துபே 6 என விரைந்து வெளியேறினார்கள். அதனால் 57/6 என்ற நிலையில் தத்தளித்தது சிஎஸ்கே.
ஒருபக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தாலும் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் மற்றும் நிலைத்து நின்று விளையாடினார். அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த அவர் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
அதனால், 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் அவுட் ஆனது.
கடைசி விக்கெட்டுக்கு ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் பார்ட்னர்ஷிப் 33 ரன்கள் எடுத்தது. இதுதான் இந்தப் போட்டியில் சிஎஸ்கே-வின் சிறந்த பார்ட்னர்ஷிப்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆர்ச்சர், பர்கர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
15 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யவன்ஷி
128 என்ற இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக தொடக்கம் கொடுத்தார்.
தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் வாய்ப்பு கொடுத்தார் சூர்யவன்ஷி. ஆனால், சற்று கடினமான அந்த வாய்ப்பை கார்த்திக் ஷர்மாவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றது. அவுட் ஆவதில் இருந்து தப்பித்த சூர்யவன்ஷி அடுத்த பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார்.
அதனால முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் ஒட்டுமொத்த இன்னிங்ஸிலும் ஒரு ஓவரில் எடுத்த அதிகபட்ச ரன் 11 தான்.
அடுத்தடுத்த ஓவர்களில் சூர்யவன்ஷியின் அதிரடி வேகம் இன்னும் கூடியது. கம்போஜ் வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அவர் விளாச, அந்த ஓவரின் முடிவிலேயே 50 ரன்களைக் கடந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நூர் அஹமது வீசிய ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் வீசிய சூர்யவன்ஷி, தன்னுடைய அரைசதத்தையும் பதிவு செய்தார். 50 ரன்களைக் கடக்க அவர் எடுத்துக்கொண்டது 15 பந்துகள் தான். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் மூன்றாவது அதிவேக (இணைந்து) அரைசதம்.
ஆறாவது ஓவரில் அரைசதம் கடந்த சூர்யவன்ஷி, ஏழாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் அவர் சர்ஃபராஸ் கான் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தான் சூர்யவன்ஷி தன் 15வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
யார் என்ன சொன்னார்கள்?
ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே கேப்டன்: "தொடக்கத்தில் ஆடுகளம் சவாலாக இருந்ததாக உணர்ந்தேன், குறிப்பாக ஆர்ச்சருக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது. மிதவேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் கடினமாக இருந்தது, அதேசமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் ஒத்துழைத்தது. நாங்கள் இன்னும் விக்கெட்டுகளை இழக்காமல் ஆழமாக பேட்டிங் செய்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் எது சிறந்த ஸ்கோர் என்று சொல்ல முடிவதில்லை. அதனால் தொடர்ந்து ஆட வேண்டியிருந்தது. இதை அப்படியே கடந்து முன்னேற வேண்டியதுதான்.
அடுத்த போட்டி இன்னும் மூன்று நாட்களில் வரவுள்ளது. அணியில் நிறைய இளைஞர்கள் உள்ளனர், ஒரு பதற்றமான தொடக்கம்தான். இருப்பினும் ஒரு போட்டியை விளையாடி முடித்தது நல்லது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்பதில் எனக்குப் பெரிய உடன்பாடில்லை. ஆனால் 'இம்பேக்ட் பிளேயர்' விதியால் எது சரியான ஸ்கோர் என்று தெரியவில்லை; 150-170 ரன்கள் எல்லாம் இப்போது எளிதாகத் சேஸ் செய்யப்படுகிறது."
வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர்: "பவர்பிளேயில் அதிரடியாக ஆட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. ஆரம்பத்தில் ஆடுகளம் பந்து நின்று வருவது போல் இருந்தது, ஆனால் பிறகு விளையாட எளிதானது. நான் நிதானமாக ஆடவே நினைத்தேன். ஆனால் எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதால் பவர்பிளேயிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.
பயிற்சியாளர்கள் எனக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினர். இந்தத் தொடருக்கான தயாரிப்பு நன்றாக இருந்தது. நாங்கள் சீக்கிரமே இங்கு வந்துவிட்டோம். சூழலைப் புரிந்துகொண்டு எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அவர்கள் கூறினர். ஒவ்வொரு பந்திற்குப் பிறகும், ஜெய்ஸ்வால் என்னை சிங்கிள் எடுக்கச் சொல்லவில்லை. மாறாக, 'பந்து பேட்டில் நன்றாகப் படுகிறது, அப்படியே தொடர்ந்து விளையாடு' என்றுதான் கூறினார்."
டாஸில் கேப்டன்கள் சொன்னது என்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிரந்தர கேப்டனாக முதல் முறையாகக் களமிறங்கிய ரியான் பராக், "இது செம்மண் ஆடுகளமாக இருந்தாலும், மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் பந்துவீச்சை தேர்வு செய்தோம். கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, 17 வயதிலிருந்து இப்போது வரை எனது மாற்றத்தைப் பார்க்கும்போது என் சக வீரர்கள் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். சாம்பியன்ஷிப்பை வெல்வதே எங்கள் இலக்கு. ஏலம் மற்றும் டிரேட் மூலம் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்க்க முயற்சித்துள்ளோம்" என்று கூறினார்.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "மழை மற்றும் ஆடுகள சூழல் காரணமாக முதலில் பந்துவீசுவது என்பது தான் சரியான தேர்வு. அதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு எங்களுக்கு எப்படி அமைந்தது என்று பார்த்தோம், அதனால் ஒரு தெளிவான திட்டத்துடன் ஏலத்திற்குச் சென்றோம். அணியின் கலாச்சாரத்திற்கு ஏற்ற வீரர்களை வாங்கியுள்ளோம், அது கை கொடுக்கும் என்று நம்புகிறோம்." என்று கூறினார்.
பிளேயிங் லெவன் & இம்பேக்ட் வீரர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஷ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹிட்மெயர், ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னாய், சந்தீப் ஷர்மா, நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா
இம்பேக்ட் வீரர்கள்: டானவன் ஃபெரீரா, லுவான் ட்ரே-பிரிடோரியஸ், ரவி சிங், சுஷாந்த் மிஷ்ரா, துஷார் தேஷ்பாண்டே
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, மேத்யூ ஷார்ட், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், கலீல் அஹமது, நூர் அஹமது, மேட் ஹென்றி
இம்பேக்ட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், பிரஷாந்த் வீர், ராகுல் சஹர், குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ணா கோஷ்
தோனி & பிரெவிஸ் இல்லை
சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் மஹேந்திர சிங் தோனி மட்டும் டெவால் பிரெவிஸ் ஆகியோர் இல்லை. காலில் ஏற்அட்ட காயம் காரணமாக தோனி 2 வாரங்களுக்கு ஆடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கூறியது. அதேபோல், தென்னாப்பிரிக்க அணியின் பேட்டர் பிரெவிஸும் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடமாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்தார்.
பழைய அணிகளுக்கு எதிராகக் களமிறங்கிய சாம்சன் & ஜடேஜா
இந்தத் தொடருக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டிரேட் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். இந்நிலையில் அவர்கள் தங்கள் புதிய அணிகளுக்கு இன்று முதல் போட்டியை விளையாடப்போகிறார்கள். அந்த முதல் போட்டி அவர்களின் பழைய அணிகளுக்கு எதிராகவே ஆடும் வகையில் அமைந்திருக்கிறது. 2008, 2009 ஐபிஎல் சீசன்களில் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத்தான் விளையாடியிருந்தார்.
இந்தப் போட்டியில் ஜடேஜா 2 விக்கெட்டுகள் எடுத்து சோபித்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.