அமெரிக்கா - இரான் போரில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்தது எப்படி?

    • எழுதியவர், கரோலின் டேவிஸ்
    • பதவி, பாகிஸ்தான் செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் - அமெரிக்கா மோதலில் ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் வகிக்கும் பாத்திரம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், அது வியப்பிற்குரியதாக இருக்க வேண்டியதில்லை.

பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்றவர்.

அவரை அடிக்கடி தனக்கு "பிடித்தமான" ஃபீல்ட் மார்ஷல் என்று டிரம்ப் குறிப்பிடுகிறார். முனீர் இரானை "மற்றவர்களை விட நன்றாக" அறிந்தவர் என்றும் அவர் ஏற்கனவே பேசியுள்ளார்.

இரான், பாகிஸ்தானுடன் சுமார் 900 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அண்டை நாடு மட்டுமல்ல, ஆழமான கலாசார மற்றும் மதப் பிணைப்புகளுடன் "சகோதரத்துவ" உறவையும் கொண்டுள்ள நாடு என்கிறது பாகிஸ்தான்.

அங்கு அமெரிக்க விமானப்படை தளங்கள் எதுவும் இல்லை.

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள வழக்கமான பல மத்தியஸ்தர்களைப் போலன்றி, பாகிஸ்தான் இன்னும் இந்த மோதலுக்குள் இழுக்கப்படவில்லை.

முக்கியமாக, இதில் தலையிட அது தயாராக உள்ளது. பலரின் கருத்துப்படி அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான அமைதி பாகிஸ்தானின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய தனது இரண்டு அண்டை நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஒரு நாடு, தன்னை எவ்வாறு அமைதியைக் கொண்டுவரும் நாடாக நிலைநிறுத்திக் கொண்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் தற்போது ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசி வருகிறது, இந்தியாவுடனான பதற்றம் கடந்த ஆண்டுதான் அணுசக்தி தொடர்பான அச்சத்திற்கு வழிவகுத்தது.

பாகிஸ்தான் இதுவரை இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது, சம்பந்தப்பட்ட பிற இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை வரவேற்பது மற்றும் தூதரகத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது என, இவ்விரு தரப்பினருக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த சமநிலைப்படுத்தும் முயற்சியில் ஆபத்து இல்லாமல் இல்லை.

'இழப்பதற்கு நிறைய இருக்கிறது'

பாகிஸ்தான் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை பெரிதும் சார்ந்துள்ளது, அதில் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது.

"மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே உள்ள மற்ற நாடுகளை விட, பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் அதிக அக்கறையுடன் உள்ளது" என்று பிபிசியிடம் கூறுகிறார் அட்லாண்டிக் கவுன்சிலின் தெற்காசியப் பிரிவு மூத்த ஆய்வாளர் மைக்கேல் குகெல்மேன்.

"பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளில் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வதற்கு பாகிஸ்தானுக்கு மிகவும் வலுவான ஆர்வம் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அரசு மார்ச் தொடக்கத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சுமார் 20% உயர்த்தியது. எரிபொருளைச் சேமிக்கும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை போன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

"போர் தொடர்ந்தால், பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி பெருமளவில் அதிகரிக்கும்" என்று கராச்சியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஃபர்ஹான் சித்திகி கூறுகிறார்.

பதற்றம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் சௌதி அரேபியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதில் "எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்." என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

சௌதி அரேபியா போரில் இணைந்து இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தினால் பாகிஸ்தான் என்ன செய்யும் என்பது குறித்த கேள்விகளுக்கு இது வழிவகுத்துள்ளது.

"எங்களது பிரச்னை என்னவென்றால், சௌதி தரப்பில் போரில் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டால், எங்களது முழு மேற்கு எல்லையும் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகிவிடும்," என்கிறார் சித்திகி.

பாகிஸ்தான் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானுடன் "முழுமையான போரில்" ஈடுபட்டுள்ளது. ஆப்கான் தாலிபன்கள் தங்கள் எல்லைக்குள் பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக அது குற்றம் சாட்டுகிறது, ஆனால் தாலிபன் அரசு அதை மறுக்கிறது.

தனது சொந்த மோதல்களில் ராஜ்ஜிய ரீதியான வழிமுறையை கையாளாமல் முரணான நிலையில் இருப்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் போருக்குள் இழுக்கப்பட்டால் மற்றொரு மோதலில் இறங்குவது மட்டுமே கவலைக்குரிய விஷயம் அல்ல என்றும், "உள்நாட்டில் நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்பும்" உள்ளது என்றும் சித்திகி சுட்டிக்காட்டுகிறார்.

இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களில், பாகிஸ்தான் முழுவதும் இரான் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கராச்சியில் அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

"பாகிஸ்தானில் பொதுமக்களின் உணர்வு பெருமளவில் இரானுக்கு ஆதரவாக உள்ளது," என்கிறார் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐநாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி.

"பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்திருப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்," என்று லோதி கூறினார்.

'பெறுவதற்கு ஏதேனும் ஒன்று'

பாகிஸ்தானின் உலகளாவிய அந்தஸ்து குறித்த பிரச்னையும் இருக்கிறது.

"உலக அரங்கில் தனக்குச் செல்வாக்கு இல்லை என்ற விமர்சனங்கள் குறித்து பாகிஸ்தான் மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது" என்று கூறிய குகெல்மேன், "அது தன்னை இவ்வாறு நிலைநிறுத்திக் கொள்வதற்கு இதுதான் முக்கியக் காரணம் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இதற்கும் அதில் ஒரு பங்கு உண்டு," என்றார்.

"இது மிகுந்த சவால்கள் நிறைந்த ராஜ்ஜீய முயற்சி என்பதில் சந்தேகமில்லை," என்கிறார் லோதி.

"இதில் அதிக ஆபத்தும் உண்டு, அதேசமயம் அதிகப் பலனும் உண்டு. இது வெற்றி பெற்றால், நிச்சயமாக பாகிஸ்தானை உலகளாவிய ராஜ்ஜீய போட்டியில் முதலிடத்திற்குக் கொண்டு செல்லும்."

ஒருவேளை அது வெற்றி பெறவில்லை என்றால்?

இதனால் ஏற்படும் சேதம் பெரிதாக இருக்காது என்று லோதி கருதுகிறார்.

"பாகிஸ்தான் ஒரு நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டதாகவே பார்க்கப்படும். அது பலிக்கவில்லை என்றால், அதற்கு பாகிஸ்தானின் திறமைக் குறைபாடு காரணமல்ல, மாறாக மிகவும் விசித்திரமான மற்றும் முற்றிலும் நம்பிக்கையற்ற ஒரு மனிதர் (டிரம்ப்) அங்கு இருப்பதே காரணமாக இருக்கும்."

இருப்பினும், பேச்சுவார்த்தை குறித்த இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, இரு தரப்பும் மீண்டும் அதிக வீரியத்துடன் மோதத் தொடங்கினால், அது பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக குகெல்மேன் கருதுகிறார்.

அத்தகையச் சூழலில், "பாகிஸ்தான் மிகவும் வெகுளியாக இருந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும், இரு தரப்பும் தங்களின் அடுத்தகட்டத் தாக்குதல்கள் குறித்துச் சிந்திப்பதற்கான கால அவகாசத்தை உருவாக்க முயன்றபோது, பாகிஸ்தான் அந்தப் பேச்சுவார்த்தை முயற்சிக்குள் கொண்டு வரப்பட்டது என்ற விமர்சனங்கள் எழலாம்." என்றும் அவர் கூறுகிறார்.

'மரபுசாரா ராஜ்ஜீய விளையாட்டுகள்'

விஷயங்கள் எப்படி முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பாகிஸ்தான் டிரம்புடனான தனது உறவை மிக விரைவாகப் பயன்படுத்திக் கொண்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

2025-ஆம் ஆண்டு பாகிஸ்தான்-இந்தியா நெருக்கடியின் போது அவரது "தீர்க்கமான ராஜ்ஜீய தலையீட்டை அங்கீகரிக்கும் வகையில்" டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரை செய்ததையும், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய போது காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவியதையும் லோதி சுட்டிக்காட்டுகிறார்.

"பாகிஸ்தான் டிரம்புக்கு இரண்டு ஆரம்பக்கால வெற்றிகளை வழங்கியது, அவை அவருக்கு மிகவும் முக்கியமானவை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி, ஒரு புதிய நெருக்கத்தைக் கொண்டு வந்தது," என்று லோதி கூறினார்.

"இந்தியாவைப் போலல்லாமல், வழக்கத்திற்கு மாறான ராஜ்ஜீய விளையாட்டுகளில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது," என்று குகெல்மேன் கூறுகிறார்.

"பாகிஸ்தானின் மூத்த தலைவர்கள் டிரம்பை புகழ்ந்து பேசுவதற்காகத் தங்கள் வழக்கமான பாதையிலிருந்து விலகிச் சென்றனர், இது அமெரிக்காவில் அவர்களது நோக்கத்திற்குப் பெரிதும் உதவியது. இது அமெரிக்க நிர்வாகத்தின் பார்வையில் பாகிஸ்தானை ஒரு கவர்ச்சிகரமான மத்தியஸ்தராக மாற்றியுள்ளது."

ஆனால் அமெரிக்காவுடனான உறவு என்பது பாகிஸ்தானின் ஒரே துருப்புச் சீட்டு அல்ல.

"பிராந்திய ராஜ்ஜீயத்தில் ஒரு பக்கம் மட்டும் சாயாமல் சமநிலையைப் பேணுவதே சிறந்த வழி என்பதை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது," என்று கூறும் சித்திகி, "நாம் இப்போது எதிர்கொள்ளும் உலகம், நாடுகள், குறிப்பாக நடுத்தர வலிமையுடைய நாடுகள், பன்முக உறவுகளை பராமரிக்கும் கொள்கையில் ஈடுபடுவதையே வசதியாகக் கருதுகின்றன," என்பதையும் குறிப்பிட்டார்.

"பாகிஸ்தான் இரானுடன் பேசுவதற்குச் சிறந்த நிலையில் இருப்பதற்கு, அது இஸ்ரேல் ஆதரவு நாடாகவோ அல்லது தீவிர அமெரிக்க ஆதரவு நாடாகவோ பார்க்கப்படாததே காரணம் என்று நான் நினைக்கிறேன்."

இதற்கிடையில், ராஜ்ஜீய சந்திப்புகள் தொடர்கின்றன. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், தனது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இருப்பினும் பாகிஸ்தானுக்கு முன்னால் இன்னும் பெரிய கேள்விகள் உள்ளன. அமைதி ஒப்பந்தத்தை உறுதி செய்வது என்பது ஒரு கடினமான இலக்காகும்.

"அமெரிக்கர்களுக்கும் இரானியர்களுக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை மற்றும் அமெரிக்க மற்றும் இரானியத் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால், ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்," என்று குகெல்மேன் கூறினார்.

"பாகிஸ்தானின் தற்போதைய திட்டங்கள் செயல்படவில்லை என்றால், அதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டிய மிகக் கடினமான சமன்பாடு இதுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் குகெல்மென் விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு