தயக்கம் மிகுந்த நாயகன் முதல் 'மௌன' அரசியல் வரை: புதிய பாணியை கையாளும் விஜய்

(தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அதிக கவனம் பெறும் தலைவர்களின் வாழ்க்கைப் பயணத்தை ஒரு தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. அந்த வரிசையில் முதல் கட்டுரை இது. )

தயக்கம் மிகுந்த நாயகனாக 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், இப்போது அரசியலில் தனது முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார். இந்த நீண்ட காலகட்டத்தில் அவரது தனி வாழ்வும் திரைவாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், அரசியலில் விஜய் ஒரு புதிய பாணியை கையாளுகிறார்.

விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன?

விஜயை நேரில் சந்திக்கும் யாரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அம்சம் உண்டு. அதாவது, திரையில் துறுதுறுப்பாகத் தென்படும் விஜய், நேரில் பார்க்கும்போது முற்றிலும் மாறானவராக நடந்துகொள்வார். திரையில் பார்த்த ஒரு கலகலப்பான மனிதரை எதிர்பார்த்துச் சென்றால், பேசவே தயங்கக்கூடிய, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் ஒரு நபராக இருப்பார் விஜய்.

"பத்து வயதிலேயே தங்கையை இழந்துவிட்டு, பெற்றோரின் ஒரே குழந்தையாக வளர்ந்ததும் தன் வயதுக்கேற்ற ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் இல்லாததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்," என ஒரு முறை தெரிவித்தார் விஜய்.

அப்படிப்பட்ட ஒரு நபர், தனது புதிய கட்சியின் அரசியல் மேடைகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முழங்குகிறார். புதியவர்களிடம் பேசத் தயங்கும் இளைஞராகத் துவங்கி, ஒரு கட்சியின் தலைவராகப் பரிணாமம் எடுத்திருக்கும் விஜயின் பயணம் சாதாரணமானதல்ல.

எட்டாம் வகுப்பில் தொடங்கிய நடிப்பு

விஜய் சிறுவனாக இருக்கும்போதே நிகழ்ந்த தங்கை வித்யாவின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. அவரே சொன்னபடி, மேலும் அமைதியானவராக மாறினார் விஜய்.

எஸ்.ஏ. சந்திரசேகர் படங்களை இயக்க ஆரம்பித்தபோது விஜய்க்கு வேடிக்கை பார்க்கக்கூடிய வயது வந்திருந்தது. அந்த சமயத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும்பாலும் விஜயகாந்தை வைத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். முதல் படத்தில் நடிக்கும்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தார் விஜய்.

"10ஆம் வகுப்பில் நான் சராசரிக்கும் சற்று மேலான மாணவனாகத்தான் இருந்தேன். அதன் பிறகு படிப்பில் ஆர்வம் குறைய சினிமா ஆசை வந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் நிறைய சினிமா பார்த்தேன். சிறிது காலம் கழித்து சினிமாவில் வரவேண்டும், நடிக்க வேண்டும் என்று சொல்ல வீட்டில் கடுமையான எதிர்ப்பு. எங்களுக்காக ஒரு டிகிரி படி, பிறகு நானே உனக்காக ஒரு படத்தைத் தயாரிக்கிறேன் என்றார் அப்பா."

"அதன் பிறகு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்ந்தேன். ஒரு வருடம்தான் படித்தேன். அப்போது அப்பா நாளைய தீர்ப்பு படத்தைத் தயாரித்தார். அதில் என்னை ஹீரோவாக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. 6- 7 மாத இடைவெளி. திரும்பவும் கல்லூரிக்குப் போனேன்," என தன் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையைப் பற்றி 2009-இல் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் சுருக்கமாகத் தெரிவித்தார் விஜய்.

நாளைய தீர்ப்பு திரைப்படம் சரியாகப் போகாத நிலையில், விஜயகாந்த் நாயகனாக நடித்த செந்தூரபாண்டி படத்தில் இரண்டாவது கதாநாயகனைப் போல நடித்தார் விஜய். விஜயகாந்த் ஏற்கெனவே பிரபல நட்சத்திரம் என்பதால், அந்தப் படத்தில் நடித்தது, அவரை பரவலாக அறிமுகப்படுத்தியதோடு, ஒரு நடிகராக ஏற்கப்படுவதன் ஆரம்பமாகவும் அமைந்தது.

"ஆனால், தந்தை அப்படி அறிமுகப்படுத்தாவிட்டாலும், இரண்டு மூன்றாண்டுகள் தாமதமாகவாவது சினிமாவுக்கு வந்திருப்பேன்," என்பதையும் சில முறை சுட்டிக்காட்டியிருக்கிறார் விஜய்.

இளைய தளபதி

1994-இல் வெளிவந்த ரசிகன் திரைப்படத்தில், இளைய தளபதி என்ற பட்டத்தை தனது மகனுக்குச் சூட்டினார் எஸ்.ஏ. சந்திரசேகர். 2017-இல் வெளிவந்த பைரவா திரைப்படம் வரை இந்தப் பட்டமே விஜயின் டைட்டில் கார்ட்களில் பயன்படுத்தப்பட்டது.

லயோலா கல்லூரியில் படிக்கும்போது ஸ்ரீநாத், சஞ்சீவ், ராம்குமார், மனோஜ், சுஜய், விஜய் என ஒரு கூட்டணி உருவானது. இந்த நட்பு வட்டாரத்தை பல காலத்திற்கு உயிர்ப்போடு வைத்திருந்தார் விஜய். ஆனால், அடுத்தடுத்து தந்தையின் தயாரிப்பில் படங்கள் வெளியாக ஆரம்பிக்க கல்லூரிப் படிப்பிற்கு நேரமில்லாமல் போனது.

ஒரே ஆண்டில் பல படங்கள் வெளியாக ஆரம்பித்தன. 1995 முதல் 1997வரை ஒரே ஆண்டில் நான்கைந்து படங்கள் வெளியாக ஆரம்பித்தன. அதற்குப் பிறகு 2005-ஆம் ஆண்டுவரை விஜய் நடித்து வருடத்திற்கு குறைந்தது 3 திரைப்படங்களாகவது வெளிவந்தன. இந்த காலகட்டத்திற்குப் பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என திரைப்படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டார் விஜய்.

திருப்புமுனையாக அமைந்த 'பூவே உனக்காக'

பூவே உனக்காக திரைப்படம், விஜயின் திரைப் பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்கள் உருவாக்கிய பிம்பத்திலிருந்து விடுபட இந்தப் படம் விஜய்க்கு வெகுவாக உதவியது.

அதுவரை விஜய் நடித்திருந்த படங்களிலேயே ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியையும் இந்தப் படம் அளித்தது. பிறகு, தனது படங்களைக் கவனமாகத் தேர்வுசெய்ய ஆரம்பித்த விஜய், லவ் டுடே, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடித்தார். காதலுக்கு மரியாதை விஜயின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்.

90களின் பிற்பகுதியில் விஜய் நடித்துக் குவித்த திரைப்படங்கள், அவரை தமிழ் குடும்பங்களுக்கு மிக நெருக்கமானவராக்கியது. இந்தக் காலகட்டத்தில் ரஜினியும் கமலும் நடித்து வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருந்த நிலையில், விஜய்யும் அஜீத்தும் புதிய இருதுருவங்களாக உருவாக ஆரம்பித்தனர்.

தமிழ் சினிமாவின் எல்லைகள் விரிந்துகொண்டே போனபோது, விஜயின் பிரபலமும் அதிகரித்துக் கொண்டே போனது. சர்வதேச பிராண்டான கோகோ - கோலாவின் விளம்பரங்களில் நடித்தார் விஜய். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் கோகோ - கோலாவின் 'பிராணட் - அம்பாசிடர்' ஆகவும் அவர் ஆனார். குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் இமேஜ், பிரபலம் ஆகியவற்றை இது சுட்டிக்காட்டியது.

"விஜயின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் கதை, திரைக்கதை, நடிப்பு அல்லாத வேறு காரணங்களுக்காக கவனிக்கப்பட்ட படங்களாகவே இருந்தன. இப்படியே தொடர்ந்தால், நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்பது எஸ்.ஏ. சந்திரசேகருக்குப் புரிந்தது. அதனால், வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க அனுப்பினார். வேறு இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிக்கச் சென்ற விஜய், இயக்குநர்களின் நடிகராகவே இருந்தார்.

இயக்குநர்கள் என்ன சொல்வார்களோ, அதை மட்டுமே செய்பவராக இருந்தார். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தன. இதற்குப் பிறகு, வர்த்தக ரீதியாக வெற்றிகரமான இயக்குநர்களைத் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார் அவர். இதில் விஜயகாந்த்தை தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார் அவர்.

இதற்குப் பிறகு, பிரபுதேவா, சித்திக், தரணி, ஷங்கர், பேரரசு என பலதரப்பட்ட இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். இது ரஜினிகாந்தின் பாணி. கில்லி அவரை எல்லா தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்றது. இந்தக் காலகட்டத்தில், வீட்டிலிருப்பவர்களிடம் (தங்கை, அம்மா போன்றவர்களிடம்) பிரியமாக இருப்பது போன்ற பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய்," என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் அ. ராமசாமி.

2004--இல் வெளியான கில்லி, 2005-இல் வெளியான திருப்பாச்சி, சிவகாசி ஆகிய திரைப்படங்கள் அவரை குடும்பத்தின் எல்லாத் தரப்பினரிடமும் கொண்டு சேர்த்தன. இதற்குப் பிறகு அவரது சில படங்கள் தோல்வியைத் தழுவ, 2012--இல் வெளியான துப்பாக்கி, அவருக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது.

"அதுவரை இருந்ததுபோல் தனிநபராகப் பணியாற்றாமல், முக்கிய இடங்களில் தன்னுடைய குழுவைப் பயன்படுத்துவதாகவும் அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பில் விஜய் இருப்பதாகவும் சித்தரிப்புகள் மாறத் தொடங்கின. தலைவா படத்தில் அவரது தலைமையில் ஒரு மாஃபியா கும்பல், கத்தி படத்தில் முதியவர்களின் குழுவுக்கு அவர் தலைமை தாங்குவது போன்றவற்றின் வழியாக விஜய் ஒரு நல்ல தலைவர் என்ற புதிய பிம்பத்தின் அடித்தளம் போடப்பட்டது."

"2017க்குப் பிறகு விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, தி கோட் ஆகிய படங்களில் லியோ படம் தவிர, பிற படங்கள் அனைத்துமே அவருக்கு தலைவர் என்ற பிம்பத்தைக் கட்டமைத்தன," என தன்னுடைய "ஜனநாயகன்" நூலில் குறிப்பிடுகிறார் ஆய்வாளரான முகமது இல்யாஸ்.

அரசியல் ஆர்வம்

இந்தக் காலகட்டத்தில் விஜய் தனது இளைய தளபதி என்ற பட்டத்தை மாற்றி தளபதி என முன்னிறுத்தினார். "2017க்குப் பிறகான விஜயின் திரைப்படங்களில் பெரும்பாலானவை அவரைப் புதிய எம்.ஜி.ஆராக முன்னிறுத்தின. பொதுவெளியில் தலைகாட்டுவதை அவர் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல் உலகின் சூழலில் வெகுமக்கள் தம் முகத்தைப் பிரபலமாக மாற்றிக் கொள்ளக் கூடிய வேளையில் தன்னுடைய முகத்தை இத்தகைய டிஜிட்டல் வெளியில் இருந்து விலக்கிக்கொண்டார் விஜய். அவரைப் பார்க்க வேண்டுமென்றால், அவரது திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது," என்கிறார் முகமது இல்யாஸ்.

விஜயின் அரசியல் ஆர்வம் எப்போது துவங்கியது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், அவர் புதிதாக கட்சி துவங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்போ, சில வருடங்களுக்கு முன்போ ஏற்பட்ட ஆர்வமில்லை அது. 16 ஆண்டுகளுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு கட்டத்தைத் தாண்டி உதவி செய்ய கையில் பவர் இருக்க வேண்டும். ஒரு கட்டம் வரைதான் ரசிகர் மன்றமாக, இயக்கமாக இருக்க முடியும். அதைத் தாண்டிவந்துவிட்டால் பவர் தேவைப்படுகிறது" என்றார் அவர். அந்தத் தருணத்தில் அவர் காங்கிரசில் சேரப்போவதாகவும் செய்திகள் அடிபட்டன.

இதற்கிடையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விஜய் திடீரென உண்ணாவிரதத்தை அறிவித்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கை இனப் படுகொலையை நிறுத்தக் கோரியும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார் விஜய். அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மிகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திக் காட்டினார். இதில் அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து தமிழக வெற்றிக் கழகம் வரை

மக்களிடையே பணியாற்றுவதற்காக 2009-ஆம் ஆண்டு ஜூலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய் விருதுகளை வழங்கினார்.

மக்களுக்கு நடுவில் பணியாற்றும் எண்ணம் இருப்பதை உணர்த்துவதைப் போல இந்தச் செயல்கள் இருந்தன. தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புக்கு வலுசேர்த்த நிகழ்வான, 2017-ஆம் ஆண்டு அனிதா என்ற மாணவி மரணம் நிகழ்ந்த போது அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய்.

2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்த விஜய், அதே ஆண்டில் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு விஜய், அரசியல் கட்சி துவங்கப் போகிறார் என்ற பேச்சுகள் மெல்லமெல்லத் தீவிரமடைய ஆரம்பித்தன. ஆனால், இந்த முடிவை அவர் அறிவிக்க சில ஆண்டுகள் ஆயின. இதற்கு நடுவில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த வேட்பாளர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றனர். முடிவில் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார் விஜய்.

கரூர் துயரம்

இருந்தபோதும், 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடாது என அறிவித்தார். இதற்குப் பிறகு அதே ஆண்டு அக்டோபரில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை கூட்டினார் விஜய். இந்த மாநாட்டிற்கு வந்த கூட்டம், தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த அவரது கூட்டத்தில் 41 பேர் பலியாயினர்.

"இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்தவுடன், அவர் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். திருச்சியை அவர் சென்றடைந்த தருணத்தில், அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும். அப்போதாவது அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். எல்லாமே மாறிப் போயிருக்கும். இப்போதுவரை அவர் கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து மற்றவர்கள் மீது பழியைப் போடுகிறார். மக்கள் அதனை நம்புவார்கள் எனக் கருதுகிறார்," என்கிறார் அ. ராமசாமி.

விஜய் குறித்துப் பேசுபவர்கள் எல்லோருமே ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்வார்கள். அது அவரது நேரம் தவறாமை குறித்த செய்தி. "படப்பிடிப்பிற்கு 8 மணிக்கு வர வேண்டும் எனச் சொன்னால் 7.50க்கு தயாராக இருப்பார். நாம் சற்று நேரம் தள்ளிச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றும் அளவுக்கு நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பார் விஜய்." என பிபிசியிடம் தெரிவித்தார் இயக்குநர் சிம்புதேவன். விஜய் பற்றிய ஒரு பேட்டியில், அவருடன் படங்களில் நடித்த நடிகை த்ரிஷாவும் இதே தகவலை பகிர்ந்துகொண்டார்.

ஆனால், கரூர் பொதுக்கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த நேரத்திலிருந்து பல மணி நேரம் தாமதமாக விஜய் வந்து சேர்ந்தது முரணாக இருந்தது. அதேபோல, ஒரு கட்டம்வரை ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க அவர் தயங்கியதில்லை. அந்தப் பேட்டிகளில் அவர் தன் இயல்புடன் வெளிப்படுவார். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு ஊடகங்களைச் சந்திக்காமலேயே இருப்பது இன்னொரு முரண்.

"த.வெ.க. தலைவர் விஜயின் முதன்மை உத்தியாக இருப்பது அவரது மௌனம். ஒரு தலைவர் மௌனமாக இருப்பது பல சாதக - பாதகங்களைக் கொண்டிருக்கிறது. விஜயின் மௌனம் ஒருவிதமான தெளிவின்மையை பொதுவெளியில் உருவாக்குகிறது. இதனால், அதன் பொருளை பல தரப்பினரும் விவாதிக்கும் நிலை வருகிறது."

"கரூர் துயரத்தின் போது அதனோடு நேரடியாகத் தொடர்பிருந்த நிலையில் விஜய் வெளிப்படுத்திய மௌனமும் அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட காணொளியும் அவரது ஆதரவாளர்களால் விஜயின் மென்மையான குணம் என வர்ணிக்கப்பட்டது. இது பொறுப்பின்மை என எதிர்த் தரப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது தலைமைப் பண்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது," என்கிறார் முகமது இல்யாஸ்.

அரசியல் எதிர்காலம்

2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய அரசியல் வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலை அவர் எப்படிச் சந்திக்கப் போகிறார் என்பதில்தான் அவருடைய அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

"வெற்றிகரமான சினிமா நடிகர்கள், அரசியலுக்கு வர நினைக்கும்போது எம்.ஜி.ஆரை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். இருந்த சூழலை மறந்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆரைச் சுற்றி அரசியல் தெரிந்தவர்கள், தி.மு.கவிலிருந்து அவருடன் வந்தவர்கள் மட்டுமல்லாமல், இடதுசாரிகளில் சிலரும் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், விஜயைச் சுற்றி இருப்பவர்களை அப்படிச் சொல்ல முடியாது," என்கிறார் அ. ராமசாமி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு