இரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றினால் என்ன நடக்கும்?

    • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
    • பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தான் படைகளை அனுப்பக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை காட்டியுள்ளார்.

இதன் பின்னணி என்ன, இது எப்படிச் செயல்படும், இதில் உள்ள ஆபத்துகள் என்ன?

கார்க் தீவு நீண்டகாலமாக இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முதன்மை வழியாக இருந்து வருகிறது.

சுமார் இரண்டு மில்லியன் பேரல்கள் கொள்ளளவு கொண்ட 'மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்களில்' (விஎல்சிசி) சரக்குகளை ஏற்றும் அளவுக்கு ஆழமான கடற்பரப்பில் இந்தத் தீவு அமைந்துள்ளது.

இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது.

1980-களில் நடந்த இரான் - இராக் போரின் போது, இராக் விமானப்படையால் இது அடிக்கடி குண்டுவீசித் தாக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் 13 அன்று, அந்தத் தீவில் உள்ள 90 ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்கா கூறியது. இருப்பினும், எண்ணெய் உள்கட்டமைப்புகளை அது சேதப்படுத்தவில்லை.

அமெரிக்கா கார்க் தீவை கைப்பற்ற முடிவு செய்தால், அது ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கக்கூடும்.

உலகின் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையின் மீதான பிடியை இரான் விடுவிக்கும் வரையிலும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணியும் வரையிலும், அதன் எரிபொருள் ஏற்றுமதியைத் துண்டித்து அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.

இரானிய ஆட்சியின் மீண்டு வரும் தன்மை மற்றும் அதன் எதிர்ப்பு போக்கைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தத் திட்டம் பலனளிக்குமா என்பது பெரும் கேள்விக்குறியே.

இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது நாட்டின் படைகள், அத்துமீறி நுழையும் எந்தவொரு அமெரிக்கப் படைகள் மீதும் "நெருப்பு மழையை பொழியும்" என்று எச்சரித்துள்ளார்.

நிலத்தில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் உட்பட, அந்தத் தீவில் இரான் தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

எப்படி தாக்கப்படும்?

ஒரே நேரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதுடன், மறுபுறம் இப்பகுதிக்கு படைகளை அனுப்பி அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப் படைகளில் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்களும் , 82-வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த சுமார் 2,000 பாராட்ரூப்பர் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றித் தங்கள் வசம் வைத்துக்கொள்ள இந்த இரு படைகளில் ஒன்று அல்லது இரண்டுமே பயன்படுத்தப்படலாம் என்று பரவலான ஊகங்கள் எழுந்துள்ளன.

கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், பாராட்ரூப்பர் வீரர்கள் வான்வழியாக, அநேகமாக இரவு நேரத்தில், வெறும் 20 சதுர கி.மீ (7.7 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்தச் சிறிய தீவின் முக்கிய இடங்களைக் கைப்பற்றத் தாக்குதல் நடத்தக்கூடும்.

அமெரிக்கக் கடற்படை வீரர்கள், ஆஸ்ப்ரே ரக விமானங்கள் மற்றும் கடலில் இருந்து தீவில் தரையிறங்கக்கூடிய எல்.சி.ஏ.சி வாகனங்களை கொண்ட கப்பல்கள் மூலம் களமிறக்கப்படுவார்கள்.

ஆபத்து என்ன?

ஆனால், முதலில் அந்தப் போர்க்கப்பல்கள் இரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து, இரானின் மறைமுக டிரோன் மற்றும் ஏவுகணைத் தளங்களைத் தாண்டி செல்ல வேண்டும்.

வான்வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ தரையிறங்கும் எந்தவொரு முயற்சியும், கண்ணிவெடிகள் மற்றும் டிரோன் கூட்டங்களால் எதிர்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் இந்த கடற்படை விரைவுப் படைகள் வலிமையான போர் ஆற்றலைக் கொண்டிருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் என்றாலும், அது பெரும் எண்ணிக்கையிலான காயம்/உயிரிழப்புகளுக்குப் பிறகே சாத்தியமாகும்.

அதன்பிறகு, இரானின் நிலப்பகுதியிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மத்தியில், காலவரையற்ற காலகட்டத்திற்கு அந்தத் தீவைத் தக்கவைத்துக்கொள்வது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக இருக்கும்.

பிப்ரவரி 2022-இல் யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய கருங்கடலில் உள்ள ஸ்நேக் ஐலேண்ட் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

யுக்ரேன் நிலப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களால் ரஷ்யா அந்தத் தீவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இரானிய பிரதேசத்தை அமெரிக்கா நீண்ட காலம் கைப்பற்றி வைத்திருப்பது அந்நாட்டிலும் அதிருப்தியை ஏற்படுத்தும். குறிப்பாக, இது போன்ற மோதல்களில் மீண்டும் ஈடுபட மாட்டோம் என்ற வாக்குறுதிக்காக டிரம்புக்கு வாக்களித்த அவரது ஆதரவாளர்களிடையேயும் இது பாதிப்பை உண்டாக்கும்.

திசை திருப்பும் திட்டமா?

இறுதியாக, கார்க் தீவு மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது குறித்துப் பரவலாகப் பேசப்படுவதால், இது ஒருவேளை திசைதிருப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது இரானுக்கும் அதன் புரட்சிகர காவல் படைக்கும் மிகவும் முக்கியமானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், அமெரிக்காவின் பார்வையில் வளைகுடாவில் உள்ள மற்ற தீவுகளும் இருக்கலாம். முக்கியமான பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகிலும், ஹோர்முஸ் நீரிணையின் நேர் எதிரேயும் அமைந்துள்ள லாரக் தீவு இதில் ஒன்றாகும்.

இரான் தற்போது அனைத்து எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தையும் சோதனைக்காக இந்தத் தீவின் வழியாகச் செல்ல வைக்கிறது. மேலும், கப்பல்கள் கடந்து செல்ல 2 மில்லியன் டாலர் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்ததாக, வளைகுடாவின் மிகப்பெரிய தீவான கெஷ்ம் உள்ளது.

இது கார்க் தீவை விட 75 மடங்கு பெரியது. இங்கு இரான் தனது ஏவுகணைகள் மற்றும் டிரோன் தளங்களை நிலத்தடியில் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அபு மூசா, பெரிய மற்றும் சிறிய துன்பஸ் தீவுகள் என மூன்று தீவுகள் உள்ளன.

அந்தத் தீவுகளின் உரிமையைப் பொறுத்தவரை இரானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே சர்ச்சை நிலவினாலும், இவை அனைத்தும் இரானின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளன.

மற்ற இரானிய தீவுகளுடன் சேர்ந்து, இந்த வளைகுடா தீவுகள் இரானுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகச் செயல்படுகின்றன. இவை கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தவும், அமெரிக்காவின் ராணுவ பலத்தைச் சமன் செய்யும் வகையிலான நிலவியல் நன்மையையும் இரானுக்கு வழங்குகின்றன.

அதே சமயம், மேற்கூறிய எதுவுமே நடக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

இப்பகுதிக்குக் கூடுதல் படைகளை அனுப்பி, தரைவழித் தாக்குதலுக்கான சாத்தியக்கூறையும் தெரிவித்த அதே வேளையில், இரானுடன் அமெரிக்கா "தீவிரமான பேச்சுவார்த்தையில்" இருப்பதாகவும், அது "ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும்" என்றும் திங்கள்கிழமை டிரம்ப் மீண்டும் கூறினார்.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

போரின் ஐந்தாவது வாரத்திற்குள் நாம் நுழையும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் அவரது அடுத்த பெரிய நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான குறிப்புகள் எதையும் வழங்கவில்லை.

ஆனால் இரானியர்களை விட டிரம்ப் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகப் பலரும் கருதும் ஒரு "ஒப்பந்தம்" ஏற்பட வேண்டுமானால், அமெரிக்கா மற்றும் இரானின் நிலைப்பாடுகளுக்கு இடையே தற்போது நிலவும் மிகப்பெரிய இடைவெளியைக் குறைக்க வேண்டியது அவசியமாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு