'3 பேரும் 3 தேவைகளும்' - இரான் போரில் தற்போது சிக்கலான கட்டத்தில் இருப்பது யார்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் யார் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
அமெரிக்கா
அதிபர் டிரம்பின் போர் நோக்கங்கள் ஓரளவு தெளிவற்றவையாகவே உள்ளன. இரானின் அணுசக்தித் திட்டத்தை மட்டுப்படுத்துவது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கோரிக்கைகளுக்கு அடிபணிவது, இஸ்லாமியக் குடியரசு ஆட்சி முழுமையாக வீழ்வது என அவர் நோக்கம் மாறிக்கொண்டே இருப்பது போல தெரிகிறது.
இதுவரை, இரான் அடிபணியவும் இல்லை, முழுமையாக வீழ்ச்சியடையவும் இல்லை. ஆனால், இடைவிடாத துல்லியமான குண்டுவீச்சால் அதன் ராணுவம் கடுமையாக பலவீனமடைந்துள்ளது.
ஓமனின் மத்தியஸ்தத்தில், பிப்ரவரியில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஜெனீவாவில் நடந்த மறைமுக பேச்சுவார்த்தைகள், அணுசக்தி விவகாரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தன.
அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்ற கணிசமான உறுதியை அளிக்கும் வகையில், இரான் பெரிய சமரசம் செய்ய தயாராக இருந்ததாக ஓமன் தரப்பு கூறுகிறது.
ஆனால், இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் குறைப்பது அல்லது கைவிடுவது குறித்தோ, ஏமனில் உள்ள ஹூத்திகள், லெபனானில் உள்ள ஹெஸ்பொலா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவை நிறுத்துவது குறித்தோ விவாதிக்கத் தயாராக இல்லை.
அமெரிக்கா மற்றும் அதன் பல கூட்டாளிகள் விரும்புவது என்னவென்றால், ஆயதுல்லாக்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்து, சொந்த மக்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தல் இல்லாத ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் விரைவாக பதவியேற்பதுடன் இந்தப் போர் முடிவடைய வேண்டும். ஆனால், இன்றைய நிலவரப்படி, அது நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அதே போல, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய குடியரசு இனி தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, தன் மக்களை தவறாக நடத்துவதையும் நிறுத்தி, பிராந்தியத்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கான ஆதரவையும் நிறுத்தினால் அது அமெரிக்காவுக்கு சிறந்த முடிவாக இருக்கும். ஆனால், அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயியை அடுத்த அதி உயர் தலைவராக இரான் தேர்ந்தெடுத்ததில் இருந்தே அதற்கும் வாய்ப்பில்லை என தெரிகிறது.
உயர்ந்துவரும் உலகளாவிய எண்ணெய் விலை, ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, அமெரிக்கா பெரும் செலவுமிக்க மற்றொரு மத்திய கிழக்கு மோதலில் சிக்கிக்கொள்கிறதோ என உள்நாட்டில் அதிகரித்து வரும் கவலை ஆகியவை, இந்தப் போரை கைவிடுமாறு டிரம்ப்புக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால், இரானில் உள்ள ஆட்சி தாக்குப்பிடித்து, தனது போக்கை மாற்றாமல் இருந்தால் இந்தப் போரை தோல்வி என்பதை தவிர வேறு வகையில் சித்தரிப்பது டிரம்புக்கு கடினமாக இருக்கும்.
இரான்:
போர் விரைவில் முடிவடைய வேண்டும் என இரான் விரும்புகிறது, ஆனால் எதையும் தியாகம் செய்து அல்ல. அதாவது அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளுக்கும் அடிபணிவதாக அது அமையக் கூடாது என நினைக்கிறது.
இந்தப் போரில் டிரம்பை விட நீண்ட காலம் தாக்குப்பிடிக்க தேவையான ராஜ்ஜீய ரீதியான பொறுமை தன்னிடம் உள்ளது என்பதை இரான் அறிந்திருக்கிறது. அதே போல புவியியல் அமைப்பும் அதற்கு சாதகமாக உள்ளது.
வளைகுடா நாடுகளிலேயே இரான் மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியாக உலகின் 20% எண்ணெய் விநியோகத்தைக் கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்துக்கு காலவரையின்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறனும் இரானிடம் உள்ளது.
பிற நாடுகள் உதவ முன்வர வேண்டும் என டிரம்ப் விடுத்த அழைப்புக்கு சம்மந்தப்பட்ட நாடுகள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் தொடக்கத்திலிருந்தே இந்தப் போரை ஆதரிக்காத நிலையில் தங்கள் கடற்படைகளை ஆபத்தில் ஆழ்த்தி ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்க தயங்குகின்றன.
போரை முடிவுக்கு கொண்டுவர தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உத்தரவாதத்தை இரான் கேட்கிறது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சேதங்களுக்கான இழப்பீட்டையும் இரான் கேட்கிறது. இவை இரண்டும் கிடைக்காது என்பது இரானுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், இரானைப் பொருத்தவரை இந்தப் போரை வெற்றியாக சித்தரிக்க அதன் தலைமையும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையும் இந்த மோதலில் தாக்குப்பிடித்தாலே போதும்.
இஸ்ரேல்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவதில் இஸ்ரேல் மட்டுமே அவசரம் காட்டவில்லை எனத் தெரிகிறது. இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைக் கையிருப்புகள், சேமிப்புக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளங்கள் ஆகியவை முடிந்தவரை அழிக்கப்படுவதைப் பார்க்க இஸ்ரேல் விரும்புகிறது.
இவை அனைத்தையும் போர் நின்றவுடன் நிச்சயமாக மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் இஸ்ரேலிய விமானப்படை இன்னும் சில மாதங்களில் மீண்டும் வந்து அதைத் தாக்கும் திறன் கொண்டது என்பதை இஸ்ரேல் உணர்த்த விரும்புகிறது.
இரானிடம் மிக மேம்பட்ட உள்நாட்டு ஏவுகணை மற்றும் டிரோன் தொழில்துறை உள்ளது. யுரேனியத்தை 60 சதவீதம் வரை இரான் செறிவூட்டி உள்ளது. இது மின்சாரம் தயாரிப்பது உட்பட அமைதி நோக்களுக்கு தேவையான அளவை விட அதிகம்.
நெதன்யாகு அரசு இந்த இரட்டை அச்சுறுத்தல்களை தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாக கருதுகிறது.
வளைகுடா நாடுகள்
சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா அரபு நாடுகள் இஸ்லாமிய குடியரசுடன் இணக்கமாக வாழ முடியும் என இதுவரை நினைத்திருந்தன.
இந்தப் போரை ஆதரிக்க மறுத்த போதிலும், இரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தங்கள் மீது கிட்டத்தட்ட தினசரி தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்கள் கோபமடைந்துள்ளனர்.
"அவர்கள் சிவப்புக்கோட்டை தாண்டிவிட்டார்கள். எங்களுக்கும் இரானுக்கும் இடையே பூஜ்ஜிய அளவிலான பரஸ்பர நம்பிக்கையே உள்ளது. இனி அவர்களுடன் எங்களால் இயல்பான உறவை வைத்துக்கொள்ள இயலாது," என ஒரு வளைகுடா அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு