You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மந்திரி பதவியை மறுத்த நம்பியார்' - மகன் பகிரும் சுவாரசிய தகவல்கள்
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
'சினிமாவில் வில்லன், நிஜ வாழ்க்கையில் ஹீரோ' என்றால் பலருக்கு உடனே நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார்தான்.
மஞ்சேரி நாராயணன் என்பது அவரின் இயற்பெயர். கேரளாவில் வாழும் நாயர் சமூகத்தின் உட்பிரிவுதான் நம்பியார். பிற்காலத்தில் அவரின் நாராயணன் என்ற பெயர் மறைந்து நம்பியாரே நிலைத்துவிட்டது.
இன்று நடிகர் எம்.என் நம்பியாரின் 107வது பிறந்தநாள். அவரது மகன் மோகன் நம்பியாரிடம், அவருடைய தந்தையை பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்ள முடியுமா என்று பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
''அப்பா நம்பியார் ஊட்டியில் அத்தை வீட்டில் வளரும்போது நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியின் செயல்பாடுகள், அவர்கள் காலையில் ஒன்றாக உடற்பயிற்சி செய்வது, நாடக ஒத்திகை, நடிப்பு ஆகியவற்றை பார்த்து வியந்து அதில் சேர்ந்தார்.'' என்கிறார்
அவரின் நடிப்பு ஆர்வமும், தீவிர முயற்சியும் அவரை பெரிய நடிகர் ஆக்கியது என்று கூறிய மோகன் நம்பியார், தனது தந்தையின் தனிப்பட்ட பல விஷயங்களை பற்றி விரிவாக கூறினார்.
அம்மாவின் சமையல்
''அப்பா உணவு விஷயத்தில் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பார். அவர் ஓட்டல்களில், படப்பிடிப்புதளத்தில் கொடுக்கப்படும் உணவுகளை தொட கூட மாட்டார். எங்கே படப்பிடிப்பு என்றாலும் அம்மா ருக்மணியை உடன் அழைத்து செல்வார். அங்கே அவர் சமைக்கும் சைவ உணவுகளைதான் சாப்பிடுவார்.
அவர் வெளிநாடுகளுக்கு சென்றாலும் அம்மாவின் கைபக்குவத்தில் தயாராகும் உணவுகளைத்தான் உண்பார். அதிலும் அம்மா செய்யும் உருளைக்கிழங்கு பொரியலுக்கு அவர் ரசிகர் என்றே சொல்லலாம்.
உணவு உண்பதில் அப்பாவிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. சாப்பிடும் முன்பு முதல் பிடி உணவை அம்மாவுக்கு கொடுப்பார், அம்மா அங்கு இல்லாவிட்டாலும் ஒரு தட்டில் அதை எடுத்துவைத்துவிட்டுதான் சாப்பிட ஆரம்பிப்பார், அம்மா மீது அப்பாவுக்கு அப்படிப்பட்ட பாசம் இருந்தது.'' என்கிறார் மோகன் நம்பியார்
குடும்பத்துடன் ஊட்டியில்
''நடிப்பு தொழிலுக்கு அவர் கொடுத்த மதிப்பையும் நேரத்தையும் குடும்பத்துக்கும் கொடுப்பார். ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி முதல் கடைசி தேதிவரை ஒரு மாதம் எங்களை குடும்பத்துடன் ஊட்டி அழைத்து செல்வார். அவர் கால்ஷீட் தேவைப்படுபவர்கள் ஊட்டிக்கு வந்து படப்பிடிப்பை நடத்துவார்கள்.
அப்பா சைவ உணவுதான் சாப்பிடுவார் என்றாலும், அவர் தன்னுடைய உணவு பழக்கத்தை எங்கள் மீது திணிக்கவில்லை. எங்களை அசைவம் சாப்பிட அனுமதித்தார். எம்ஜிஆர் கூட தன்னுடைய வீட்டிலிருந்து அசைவ உணவுகளை அனுப்பி வைப்பார்.'' என்கிறார் மோகன் நம்பியார்
சபரிமலை யாத்திரை
''உடல்நலத்துக்கும், உடற்பயிற்சிக்கும் அப்பா அதிக முக்கியத்துவம் கொடுப்பார். வீட்டிலேயே ஜிம் இருந்தது. தவறாமல் தினமும் அதிகாலை உடற்பயிற்சி செய்வார். தீவிர கடவுள் பக்தர் என்பதால் தினசரி வழிபாடு செய்யும் வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார். தான் இருக்கும் இடத்திலேயே சாமி கும்பிடுவார். எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது அவர் கொள்கை.
சபரிமலைக்கு 67 ஆண்டுகளாக சென்றார். சில முறை, ஆண்டுக்கு 2-3 முறை கூட சென்று இருக்கிறார். 1936 முதல் அவரின் சபரிமலை பயணம் தொடர்ந்தது. அந்த காலத்தில் இவ்வளவு வசதிகள் கிடையாது. அதனால் அவரே பக்தர்கள் தங்க 4 அறைகளை தேவசம்போர்டுக்கு கட்டி கொடுத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளை அப்பா பேசுவார். கஷ்டப்பட்டு வளர்ந்தவர் என்பதால் பண விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துவிடுவார், பார்ட்டிக்கு போகமாட்டார். அதனால்தான் அவர் 89 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்.'' என கூறுகிறார் மோகன் நம்பியார்
'பொல்லாத மாமா எம்ஜிஆர்'
''அப்பாவுடன் நாங்கள் பல படப்பிடிப்புகளுக்கு சென்றிருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு சென்ற நினைவுகள் பசுமையாக இருக்கிறது. என் அண்ணன் மறைந்த சுகுமாரன் நம்பியார் சிறுவனாக இருந்தபோது எம்ஜிஆர் அவ்வப்போது அறிவுரைகள் சொல்வார் . அதனால் அண்ணன் அவரை 'பொல்லாத மாமா' என செல்லமாக அழைப்பார்.
நாங்கள் வீட்டில் அவரை பற்றி பேசும்போது 'பொல்லாத மாமா' என்று தான் குறிப்பிடுவோம். எங்கள் மீது மாமாவுக்கு அதிக பாசம் உண்டு. நிறைய பரிசு பொருட்கள், சாப்பாடு என அள்ளி கொடுப்பார். தேன்நிலவு படத்துக்காக காஷ்மீர் சென்றது இன்னமும் மனதில் நிற்கிறது. காஷ்மீரில் ஒரு வீட்டில் எங்கள் குடும்பம், ஜெமினி குடும்பம், ஸ்ரீதர் குடும்பம், கதாநாயகியாக நடித்த வைஜெயந்தி மாலா குடும்பம் ஒரு பங்களாவில் தங்கியிருந்தோம். சிவாஜி சாரும் பாசமாக பழகுவார். அவரின் பல படப்பிடிப்புக்கும் சென்று இருக்கிறோம்''
உலகம் சுற்றும் வாலிபன் சண்டைக்காட்சி
''அப்பா நடித்ததில் நெஞ்சம் மறப்பதில்லை மறக்க முடியாத படம். அதேபோல் ராஜபார்ட் ரங்கதுரை, அரசிளங்குமரி, துாறல் நின்னு போச்சு படங்கள் மிகவும் பிடிக்கும். அப்பா வில்லனாக நடித்ததில் எங்க வீட்டுப்பிள்ளை, திருடாதே படமும் எனக்கு மிகவும் பிடித்தமானது. திருடாதே படத்தில் ஒருவகை மாஸ்க் போட்டு நடித்தார். அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது 'நம்பியார் கீழே இருக்கிறான், வராதீங்க'' என்று ரசிகர்கள் கத்துவார்களாம்.
உலகம் சுற்றும் வாலிபன் குறித்தும் அப்பா நிறைய பேசியிருக்கிறார். அந்த படத்துக்காக நிறைய உடற்பயிற்சி செய்தார். 11 மணிக்கு மேல் நடிக்கமாட்டாராம். அந்த பிட்னஸ் கிடைக்காது என்பதால் மறுநாள் மீண்டும் கடும் உடற்பயிற்சி செய்து நடித்து இருக்கிறார். அவரை மிக அழகாக காண்பித்த இன்னொரு படம் ஆயிரத்தில் ஒருவன்.'' என்கிறார் மோகன் நம்பியார்.
'மந்திரி பதவியை மறுத்தவர்'
''இன்னமும் அப்பாவை பற்றி, படங்களை பற்றி, அவர் வில்லத்தனம் பற்றி மக்கள் பேசுவது பெருமை. அவர் நடிகர்களின் தனித்துவமானவர், மனிதர்களில் கூட. உங்களுக்கு மந்திரி பதவி தருகிறேன் எனக்கூறி அவரை அரசியலுக்கு வரச் சொல்லி எம்ஜிஆர் அன்புடன் அழைத்தும் அப்பா மறுத்துவிட்டார்.
உங்களுக்கு விருதுகள் அதிகம் கொடுக்கப்படவில்லையே என சிலர் கேட்க, அந்த விருதை விற்றால் எவ்வளவு தேறும், எனக்கு அடுத்த தலைமுறைக்கு விருது கொடுத்து உற்சாகம் கொடுங்க என நகைச்சுவையாகவே பதில் சொல்லியிருக்கிறார்.''
நம்பியாரின் நகைச்சுவை உணர்வு
நம்பியாரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரன் பிபிசியிடம், ''என் குருநாதர் இயக்கிய பூவே உனக்காக படத்தில் எம்.என் நம்பியார் ஐயாவுடன் பணியாற்றியிருக்கிறேன். அதில் அவருக்கு முக்கியமான கேரக்டர். நாகர்கோவிலில் அந்த படப்பிடிப்பு நடந்தது. முன்னணி நடிகர்கள், டெக்னீஷியன்கள் என அனைவரும் படப்பிடிப்புதளத்தில் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை பார்த்து பிரமித்து இருக்கிறேன். வேறு யாருக்கும் கிடையாத பேறு அது.''
''அவரின் நகைச்சுவை உணர்வை ரசித்து இருக்கிறேன். ஒருமுறை எம்ஜிஆரை பற்றி பேசுகையில் 'அவர் எவ்வளவு பெரிய ஆள்' என்று பெருமையாகச் சொன்னேன். அவர் தனக்கே உரிய பாணியில், 'அவர் அவ்வளவு பெரிய ஆளு இல்லை. என் உயரத்தை விட இரண்டு இன்ச் குறைந்தவர்' எனச் சொல்லி குழந்தையாக சிரித்தார். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கியபோது ஒருநாள் கால்ஷீட் என்றேன். இரண்டுநாள் வாங்கிக்கோங்க என்று சிரித்தார்.
டப்பிங் பேச வருகையில் எனக்கு ஒரு சூப் கொடுத்தார். அதில் ருசியே இல்லை. இதைதான் பல ஆண்டுகளாக குடிக்கிறேன், என் ஆரோக்கிய ரகசியம் இதுதான் என்று சொன்னார்.'' என கூறுகிறார் ராஜகுமாரன்
ஆயிரத்தில் ஒருவன், ஜீசஸ் படத்தில் யூதாஸ்
இப்போது கோலிவுட்டின் முன்னணி வில்லன் நடிகரான ஜான் விஜயிடம் பிபிசி சார்பில் பேசியபோது, ''நான் பள்ளி படிக்கிற காலத்தில் எம்.என் நம்பியாரை தி.நகரில் ஒரு விழாவில் சந்தித்து போட்டோ எடுத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. அவர் வில்லனாக நடித்ததில் எங்க வீட்டுப்பிள்ளை ரொம்ப பிடிக்கும். அதில் அவர் கெட்அப், காஸ்ட்யூம், சாட்டையால் அடிக்கிற அந்த ஸ்டைல் அபாரம். அதேபோல், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவரே ஹீரோ மாதிரி அவ்வளவு அழகாக இருப்பார். எம்ஜிஆருடனான சண்டைக்காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.
தில்லாமோகனாம்பாள் ஜமீன்தாரை மறக்க முடியுமா? அன்பே வா திரைப்படத்திலும் அட்டகாசமாக நடித்து இருப்பார். நாளை நமதே படத்திலும் நம்பியாரின் வில்லத்தனம், அந்த டயலாக், பாடி-லாங்குவேஜை ரொம்பவே ரசிப்பேன். தாய்வீடு படத்தில் அந்த தொப்பி வைத்த கெட்அப், ஸ்டைலான காஸ்ட்யூம், அவருக்கே உரிய தனித்துவம் சூப்பராக இருக்கும். இது போக, மலையாளத்தில் ஜீசஸ் படத்தில் யூதாஸ் ஆக வருவார். நிஜமான கேரக்டரை பார்த்த மாதிரி இருக்கும். வில்லன் நடிகர்களின் அவர் ஒரு ஹீரோ'' என்று சொன்னார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு