You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்க திருமாவளவன் எதிர்ப்புக்கு காரணமான அந்த 'உத்தி' என்ன?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தேர்தல் நிலைப்பாட்டை தற்போது வரை அறிவிக்கவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் தனித்துச் சென்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்துவிட்டார்.
இந்தச் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ராமதாஸ் இணைவது தொடர்பான கருத்துக்களும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக ஆட்சியை பாராட்டி கருத்து தெரிவித்ததும் இந்த யூகங்களுக்கு வலு சேர்த்தது.
திருமாவளவனும் நீங்களும் ஒரே கூட்டணியில் பயணிப்பீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்," எனத் தெரிவித்திருந்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அவர் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
கூட்டணி குறித்து வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"2011 இல் அமைந்த திமுக கூட்டணியில் விசிகவும் பாமகவும் இடம் பெற்றிருந்தன. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது," என அதில் தெரிவித்திருந்தார்.
பாமக உடன் கூட்டணியில் இடம்பெறுவதில்லை என்கிற நிலைப்பாட்டை விளக்கிப் பேசுகையில், "அதன்பின்னர், பாமக எடுத்த 'சோசியல் எஞ்சினியரிங்' என்கிற 'சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் தேர்தல் உத்தியைக்' கையில் எடுத்தபோது தமிழக அரசியல் களம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதன்பின்னர் தான் நாம், 'பாஜகவுடன் மட்டுமின்றி பாமகவோடும் இனி தேர்தல் உறவு இல்லை' என்கிற நிலைபாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "அவர்கள் இருவரும் (ராமதாஸ் மற்றும் திருமாவளவன்) நெருக்கமாக இருந்தவர்கள் தான். தேவையென்றால் ஒருவரை ஒருவர் சந்தித்து சரி பண்ணிவிடுவார்கள்," என்று குறிப்பிட்டார்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமகவும் விசிகவும் ஒரே கூட்டணியில் இடம்பெற்றன. ஆனால் 2012-ஆம் ஆண்டிலிருந்து பாமக உடன் கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என விசிக கூறி வருகிறது.
வட மாவட்டங்களில் இந்த இரு கட்சிகளுக்கும் பலம் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன். இவர் விசிக மற்றும் பாமக தொடர்பாக நீண்ட காலம் செய்தி சேகரித்த அனுபவம் பெற்றவர்.
பாமகவை கூட்டணியில் வரவேற்ற திருமாவளவன்
2011 -ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் இணைவது உறுதியானபோது இந்த அறிவிப்பை அப்போது வரவேற்று பேசியதோடு அதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தவர் திருமாவளவன்.
"முதல் முறையாக பாமக-விசிக ஒரே கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கிறது, வட மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லும்," எனத் தெரிவித்திருந்தார்.
அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாத நிலையில் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
பாமக - விசிக இடையிலான அதிராக போட்டி, 2012-ஆம் ஆண்டில் நடந்த தர்மபுரி கலவரம், அதை தொடந்த சமூக பதற்றங்கள் இரண்டு கட்சிகளும் விலகிச் சென்றதற்கான காரணமாக இருந்தன என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.
'தமிழால் இணைந்த கட்சிகள்'
விசிகவும் பாமகவும் முதலில் இணைந்தது திமுக மேடையில் அல்ல என்றும் இளங்கோவன் ராஜசேகரன் குறிப்பிட்டார்
"2011 தேர்தலுக்கு முன்பாகவே இலங்கை தமிழர் விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக செயல்படத் தொடங்கின. அது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்பட்டது. வட தமிழ்நாட்டின் பிரதானமான அதே நேரத்தில் எதிரெதிர் துருவங்களான இரு கட்சிகள் ஒன்றாக வருவது அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் சமூக தளத்திலும் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் களத்தில் இது எதிரொலிக்கவில்லை. அவர்களால் எதிர்பார்த்த தேர்தல் வெற்றியைப் பெற முடியவில்லை." என்றும் தெரிவிக்கிறார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, விசிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
விசிக-பாமக இணைந்து செயல்படுவதை தொடங்கி வைத்தவர் ராமதாஸ்தான் எனக் குறிப்பிடும் இளங்கோவன் அதிலிருந்து முதலில் விலகியதும் அவரே தான் என்று தெரிவிக்கிறார்.
"பாமகவும் விசிகவும் ஒரே பிராந்தியத்தில் இயங்கினாலும் அவர்களின் அரசியல் மற்றும் வாக்கு வங்கி என்பது முற்றிலும் வேறானது. தமிழர் நலன் என்கிற குடையின் கீழ் இரண்டு கட்சிகளும் தங்களின் வேறுபாடுகளைக் கடந்து இணைந்தன. ஆனால் அது தேர்தலில் பலனளிக்காததும், வட மாவட்டங்களில் விசிகவின் வளர்ச்சி குறித்து ராமதாசுக்கு இருந்த பார்வையும் தான் பாமக விலகிச் செல்ல காரணமாக அமைந்தது," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பலனளிக்காத 'சோசியல் எஞ்சினியரிங்' உத்தி
பாமக உடன் மீண்டும் இணையாததற்கு அவர்கள் முன்னெடுத்த 'சோசியல் எஞ்சினியரிங்' உத்தி தான் காரணம் என திருமாவளவன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
''பாமக வன்னியர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்கு வந்தது. விசிகவின் ஆரம்ப காலத்தில் தலித் சமூக வாக்குகளை அதிகமாக கவர்ந்து வந்தது. தர்மபுரி கலவரமும் அதை தொடந்து நடந்த சமூகப் பதற்றங்களும் இவர்கள் மீண்டும் இணைவதை கடினமாக்கின''
"இந்தச் சூழலில் விசிகவை பலவீனப்படுத்த வேண்டுமென்றால் தலித் அல்லாத இதர சமூகங்களின் வாக்குகளைக் கவர்வது பலனளிக்கும் என பாமக கணக்குப் போட்டது. ஆனால் அது அரசியல் களத்திலும் சரி தேர்தல் களத்தில் சரி அவர்களுக்குப் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை," என்றார் இளங்கோவன் ராஜசேகரன்.
2012 -13 வாக்கில் வெவ்வேறு சமூக அமைப்புகளின் (தலித் அமைப்புகளை தவிர்த்து) பிரதிநிதிகளை அழைத்து பாமக கூட்டங்களை நடத்தியது. அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதும் ஒன்று.
இந்தக் கூட்டங்கள் அப்போது பெரிய அளவில் விவாதப் பொருளானது.
அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு நேர்காணல் ஒன்றில் பதிலளித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், "பாமக தலித்துகளுக்கு எதிரான கட்சி எனத் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அது தவறானது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்." எனத் தெரிவித்திருந்தார்.
"இந்த நிகழ்வுகள் பாமக எதிர்பார்த்த பலன்களை தரவில்லை, மாறாக திமுக, விசிக போன்ற கட்சிகளிடமிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தியது," என்கிறார் இளங்கோவன்.
''வட மாவட்டங்களில் இன்னொரு கட்சி (விசிக) வளர்ந்து வருவது பாமகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என அக்கட்சி கருதியது. விசிக உடன் அமைத்த கூட்டணியும் சரி, விசிகவுக்கு எதிராக அமைத்த கூட்டணியும் சரி பாமகவிற்கு பலனளிக்கவில்லை.'' என்கிறார் அவர்
'நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' - திமுக
''கூட்டணி கட்சியினர் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். முதலமைச்சர் தான் இறுதி முடிவு எடுப்பார்." என்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்.
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், "குழு அமைக்கப்பட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிய வரும். இந்தக் கூட்டணி உறுதியாக உள்ளது. எந்த புதிய முடிவென்றாலும் கூட்டணியின் முடிவாகத் தான் இருக்கும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை." என்றும் தெரிவித்தார்.
'எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை' - விசிக
"தேர்தல் சூழல்களைப் பொருத்து ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற நிலைப்பாடுகளை எடுக்கலாம். ஆனால் ராமதாஸ் தரப்பு கூட்டணியில் இணையும் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதை எங்கள் தலைவர்கள் பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தி உள்ளனர்," என்கிறார் விசிகவின் துணைப் பொதுச் செயலாளரான எழில் கரோலின்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு