மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி பாஜகவுக்கு பின்னடைவா அல்லது ராஜதந்திர வெற்றியா?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மசோதாவின் தோல்விக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் தோல்வியடைந்தது.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா ஒன்று, கடந்த 12 ஆண்டுகளில் அவையில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

இரண்டு நாட்கள் விவாதத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் திருத்தவும் மற்றும் தொகுதி மறுவரையறை செய்யவும் கோரும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன.

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுநிர்ணயம் செய்வதற்காக கொண்டு கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவும் இதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு மசோதாக்களுடன் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதாவையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

யூனியன் பிரதேசங்களின் தேர்தல் சட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு முறைகளை புதிய தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை விரிவாக்கக் கட்டமைப்புடன் இணைப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

சபை நடவடிக்கைகளுக்குப் பிறகு பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அரசியலமைப்பு திருத்த மசோதாவுடன் மற்ற இரண்டு மசோதாக்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது இந்த மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று கூறினார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அவையில் தோல்வியடைந்ததை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட கிரண் ரிஜிஜு, ஒரு வாய்ப்பு நழுவிப்போய்விட்டதாகக் கூறினார்.

மசோதா தோல்வியடைந்ததையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் அவைக்கு வெளியே போராட்டம் நடத்தியதுடன், எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

அரசியலமைப்பு திருத்த மசோதா கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அவையில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.

அரசியல் நோக்கங்கள் பற்றிய கேள்விகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த மசோதாக்கள் மூலம் பாஜக தனது அரசியல் நோக்கங்களை அடைய விரும்புவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த மசோதாக்கள் தொடர்பான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பின.

அவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, இந்த மூன்று மசோதாக்களையும் எதிர்த்து பேசுகையில், " தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பிரதமர் உணரும் போதெல்லாம், அவர் விதிகளை மாற்றுகிறார். இந்த மசோதாக்கள் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகின்றன" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அவைக்கு வெளியே பேசுகையில், "பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா 2023-ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது என்பதையும், நாங்கள் அதனை ஆதரித்தோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சதி அவையில் முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஒருமைப்பாடு சார்ந்த விஷயமாகும். பெண்கள் இட ஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த மசோதா நிறைவேற வாய்ப்பே இல்லை" என்றார்.

இதற்கிடையில், அவையில் வாக்கெடுப்பு முடிந்த பிறகு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் வரைந்த அந்த லட்சுமண ரேகையை அரசால் தாண்ட முடியவில்லை" என்றார்.

பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கான ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக பாரதிய ஜனதா கட்சி இந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அவையில் அறிமுகப்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில், "பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்பது வெறும் மசோதா மட்டுமல்ல, இது நாட்டின் திசையையும் நிலையையும் மாற்றக்கூடிய ஒரு மசோதா" என்று கூறினார்.

மேலும், "பெண்களுக்கான இட ஒதுக்கீடு காலத்தின் தேவை, இதனை எதிர்ப்பவர்கள் நீண்ட கால அடிப்படையில் அதற்கான விலையைக் கொடுப்பார்கள்" என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நாட்டின் பெண் சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்" என்றார்.

அவையில் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமித் ஷா, "அதிகார மோகத்தினால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாகக் கூறுபவர்கள், எங்களது பலத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்" என்றார்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்த கேள்விகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தென்னிந்தியாவில் உள்ள பல கட்சிகள் இந்த மசோதாவுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்ட தொகுதி மறுவரையறை மசோதாவையும் அரசாங்கம் கொண்டு வந்திருந்தது.

தென்னிந்திய மாநிலங்கள் இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவைக் வெளிப்படையாக எதிர்த்தன. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவால், நாடாளுமன்றத்தில் தங்களின் பங்களிப்பு குறைந்துவிடுமோ என்று தென்னிந்திய மாநிலங்கள் கவலை கொண்டுள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தையும் குறைக்காது என்று அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளிக்க முயன்றார்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, மக்களவையில் 816 இடங்கள் இருக்கும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் தற்போதுள்ள இடங்கள் ஐம்பது சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், "முடிவெடுக்கும் செயல்முறையானது யாருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டாது என்று நான் பொறுப்புடன் சொல்ல விரும்புகிறேன். எவருக்கும் அநீதி இழைக்கப்படாது" என்றார்.

"இதற்கு முன்னதாகச் செய்யப்பட்ட தொகுதி மறு வரையறையிலோ அல்லது பின்பற்றப்பட்ட விகிதத்திலோ எந்த மாற்றமும் இருக்காது. அதற்கு ஏற்பவே தொகுதி மறுவரையறை செய்யப்படும்."

"உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தேவைப்பட்டால், நான் அந்த உத்தரவாதத்தைத் தருகிறேன்" என்றார்.

இந்தக் கவலைகளைத் தீர்க்க அரசாங்கம் முயன்ற போதிலும், கேள்விகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 14 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா கூறுகையில், "உண்மையான இலக்கு தொகுதி மறுவரையறை மீதுதான் இருந்தது, இதன் மூலம் பாஜக தனது அரசியல் எதிர்காலத்தை மேலும் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறது " என்றார்.

சுமன் குப்தா தொடர்ந்து பேசுகையில், "அரசியலில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. டெல்லிக்கான பாதை உத்தரபிரதேசம் வழியாகச் செல்கிறது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, அவையில் வட இந்தியாவின் அதிகாரம் பலப்படும். தற்போது வட இந்தியாவில் பாஜக மிகவும் வலுவாக உள்ளது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு வட இந்தியாவில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது பாஜகவை மேலும் வலுப்படுத்தும்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறுகையில், "பெண்கள் இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து அரசாங்கம் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்த விதம் 'அரசியல் துணிச்சல்' என அழைக்கப்படும்" என்றார்.

அதே நேரத்தில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகப்படுத்தியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவையில் நடந்த விவாதத்தின்போது, "இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா அல்ல, இது தேர்தல் வரைபடத்தை மாற்றுவதற்கான ஒரு சதி" என்று கூறினார்.

பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஃபைசன் முஸ்தபா, பிபிசி செய்தியாளர் ஷுபாங்கி மிஸ்ராவிடம் கூறுகையில், அனைத்து கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைவது உறுதி எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சுமார் 12 உறுப்பினர்கள் வரவில்லை. இது, சபையின் நிர்வாகம் பொருட்படுத்தப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது" என்றார்.

பெரிய சீர்திருத்தங்களுக்கு முன்னதாக பொது விவாதமும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதும் அவசியம் என்று ஃபைசன் முஸ்தபா கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேர்தலுக்கு மத்தியில் கூட்டப்பட்ட இந்தச் சிறப்பு கூட்டத்தொடர் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலம் இதனைத் தவிர்த்திருக்கலாம். எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழ்நாடு மற்றும் வங்காள வாக்காளர்களிடம் அரசாங்கம் சொல்ல முடியும், அதே வேளையில் தாங்கள் கூட்டாட்சி தத்துவத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றியதாக எதிர்க்கட்சிகள் கூறும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் மேலெழும்" என்றார்.

அதே நேரத்தில், 2023-ஆம் ஆண்டு பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?

விதி சட்டக் கொள்கை மையத்தின் அரசியலமைப்புச் சட்ட மையமான 'சர்க்கா'வின் தலைவர் முனைவர் ஸ்வப்னில் திரிபாதி, பிபிசி செய்தியாளர் ஷுபாங்கி மிஸ்ராவிடம் கூறுகையில், ஒரு தொழில்நுட்ப சிக்கலைத் தீர்ப்பதற்காகவே 2023-ஆம் ஆண்டு சட்டத்தை (நாரி சக்தி வந்தன் சட்டம்) அமல்படுத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது என்றார்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்த ஒரு தனி அறிவிக்கை தேவைப்பட்டது, அது நேற்று வரை வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பாஜகவுக்கு பின்னடைவா அல்லது ராஜதந்திர வெற்றியா?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் பிரிவு வாக்கெடுப்புக்குப் பிறகு 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்தது.

ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

தற்போதைய அவையில் அரசாங்கத்திடம் அந்த எண்ணிக்கை இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இதனை நிறைவேற்ற முடியாது.

இந்த மசோதாவின் தோல்வி அரசாங்கத்துக்கு ஒரு பின்னடைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் சரத் குப்தா கூறுகையில், "இது அரசாங்கத்துக்கு ஒரு பின்னடைவு, ஏனெனில் தங்களிடம் போதுமான பெரும்பான்மை பலம் இல்லை எனத் தெரிந்தும், மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தேர்தலுக்கு மத்தியில் இதனை அவர்கள் கொண்டு வந்தனர். இப்போது, எதிர்க்கட்சிகள் தான் தங்களைப் பெண்களின் உரிமைகளுக்காகப் பணியாற்ற விடாமல் தடுத்தன என்று பாஜக தேர்தலில் தொடர்ச்சியாகக் கூறும் " என்றார்.

இதற்கிடையில், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறுகையில், "மசோதாவின் தோல்வி அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கு ஒரு பின்னடைவாகும். ஆனால் அதன் எண்ணமும், நோக்கமும் தான் பெரிய கேள்வியாக உள்ளது. அரசாங்கம் தனது திட்டங்களில் தோல்வியடைந்துள்ளது," என்றார்.

பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும் ஆய்வாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஹேமந்த் அத்ரி கூறுகையில், "மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசாங்கம் ஏன் ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டியது என்பதே முக்கியமான கேள்வி, அரசாங்கம் கவனத்தை திசை திருப்ப விரும்பியதா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

மூத்த பத்திரிகையாளர் சரத் குப்தாவும் அதே வாதத்தை முன்வைத்து கூறுகையில், "நாங்கள் வங்காளப் பெண்களுக்கு நிறைய செய்ய விரும்பினோம், ஆனால் எதிர்க்கட்சிகள் எங்களைச் செய்ய விடவில்லை என்று தேர்தல்களில் சொல்வதற்காக மட்டுமே அவர்கள் இதனைத் தேர்தலுக்கு மத்தியில் கொண்டு வந்தனர்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா கூறுகையில், "பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம், பெண்களை ஒரு வாக்கு வங்கியாக வளர்த்தெடுக்க பாஜக விரும்புகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய சுமன் குப்தா, "கடந்த சில ஆண்டுகளில், பெண்கள் ஒரு தனி வாக்கு வங்கியாக உருவெடுத்துள்ளனர், பாரதிய ஜனதா கட்சி அவர்களை ஈர்க்க விரும்புகிறது" என்றார்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே 2023-இல் நிறைவேற்றப்பட்டிருக்கும் போது, இப்போது தொகுதி மறுவரையறையுடன் அதனை கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன என்று சரத் குப்தா கேள்வி எழுப்புகிறார்.

மேலும், "அரசாங்கம் பெண்கள் மசோதாவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்தது, தேர்தலின் போது அரசியல் ரீதியாகப் ஆதாயம் தேடும் நோக்கத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது. மசோதாவின் தோல்வி அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்கு ஒரு பின்னடைவாக அமையக்கூடும்" என்றும் சரத் குப்தா குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு