நம் வீடுகளில் பல்லிகளே இல்லாமல் போனால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வட சென்னையில் ஓர் ஈரப்பதமான இரவு வேளையில், 34 வயதான கவிதா தனது ஆறு வயது மகனைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தார். ஒரு சிறிய மின் தடைக்குப் பிறகு அப்போதுதான் திரும்பியிருந்த மின் இணைப்பு, மின் விசிறி உரத்த சத்தத்துடன் சுழலத் தொடங்க வித்திட்டது. வழக்கம் போல டியூப்லைட்டை சுற்றி பூச்சிகளின் கூட்டம் மொய்த்தது.

"அப்போது என் மகன் திடீரென 'அம்மா!' என்று பயத்தில் கத்தியபடி அவனுக்கு நேராக மேலே சுவற்றில் ஒட்டியிருந்த பல்லியைக் காட்டினான்," என்று விவரித்தார் கவிதா.

கூரையின் மூலைக்கு அருகில் இருந்த அந்தப் பள்ளி, வெளிறிய நிறத்தில், சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது. "அதை அடித்து வெளியே போடுவதற்காக நான் துடைப்பத்தை எடுத்தேன். ஆனால், அது தனக்கு சுவரில் அமர்ந்திருந்த ஒரு கொசுவைப் பிடித்துச் சாப்பிட்டது."

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

"அன்று காலையில்தான் எங்கள் பகுதியில் டெங்கு பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருவதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பல்லி கொசுவைப் பிடித்துச் சாப்பிட்டதைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கினேன்."

இதேபோன்ற ஓர் அனுபவத்தைப் பகிர்கிறார் மதுரையைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் சாம்சன் கிருபாகரன்.

"ஒரு நாள் அசைவேதுமின்றி ஆழ்ந்த சிந்தனையில் அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த பல்லி ஒன்று, மெல்ல என் கால் மீது ஏறி, என்னைக் கடித்துக் கொண்டிருந்த சில கொசுக்களை ஒவ்வொன்றாகப் பிடித்துச் சாப்பிட்டது. பின்னர், கால் மீது சில விநாடிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்துவிட்டு மீண்டும் கீழிறங்கி அதன் போக்கில் சென்றுவிட்டது," என்று விவரித்தார் சாம்சன்.

பட மூலாதாரம், Getty Images

ஆபத்தான எதிரியைத் தடுக்கவல்ல உயிரினம்

2025ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் இந்திய அளவில் கணிசமான அளவில் அதிகரித்து இருந்தது.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் 20,866க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகளும் 12 இறப்புகளும் பதிவாயின.

குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. தேங்கி நிற்கும் நீரை அகற்றுவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது என பொது சுகாதார விழிப்புணர்வு முயற்சிகளில் இடைவிடாமல் அறிவுறுத்தப்படுகின்றன.

இதற்கிடையே கொசுக்களுக்கு எதிராக மற்றுமொரு பாதுகாப்பு அரண் ஓசையேதுமின்றி நம் வீடுகளில் இயங்கி வருவதாகக் கூறுகிறார் காட்டுயிர் ஆர்வலர் சாம்சன் கிருபாகரன்.

அவரது கூற்றுப்படி, கொசுக்கள், கரப்பான்கள் போன்ற மனிதர்கள் மத்தியில் நோய்களைப் பரப்பும் சிற்றுயிர்களை வேட்டையாடி, எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் பல்லிகளின் பங்கு அதிகம். அவை இல்லாமல் போவதும் நகரங்களில் கொசுக்கள் பெருகி வருவதற்கு ஒரு காரணம் என்கிறார் அவர்.

படக்குறிப்பு, காட்டுயிர் ஆர்வலர் சாம்சன் கிருபாகரன்

'மனிதர்களைத் தவிர்க்கும்; பூச்சிகளை வேட்டையாடும்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பொதுவாக வெளிறிய நிறத்தில் காணப்படும் வீட்டுப் பல்லிகள், மனித சூழல்களுக்கு மிகவும் நன்கு தகவமைத்துக்கொண்ட ஒரு பல்லி வகை என்று கூறுகிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் அ.தணிகைவேல்.

பல்லிகள் ஆக்ரோஷமான குணம் படைத்தவை அல்ல என்று கூறிய தணிகைவேல், "அவை மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதால் எப்போதும் மனிதர்களைத் தவிர்க்கவே விரும்புகின்றன. ஆனால், வீட்டைச் சுற்றியுள்ள பூச்சியினங்களை வேட்டையாடும் திறமையான வேட்டையாடிகளில் இவை முதன்மையானவை," என்று விளக்கினார்.

முனைவர் தணிகைவேலின் கூற்றுப்படி, கொசுக்கள், ஈக்கள், எறும்புகள், கரப்பான்கள் என மின் விளக்கின் ஒளியால் ஈர்க்கப்படும் பூச்சியினங்கள் எதுவாக இருந்தாலும் பல்லிகள் அவற்றைத் தமது இரையாக்கிக் கொள்கின்றன.

இருப்பினும், "நகர்ப்புறங்களில் மாறி வரக்கூடிய வாழ்வியல் முறையின் விளைவாக, பல்லிகள் வாழ ஏதுவான சூழல் மிகவும் குறைந்து வருகிறது. ஆகவே, மனித குடியிருப்புகளுக்கு மத்தியில் சமீப காலங்களில் அவற்றைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. பொதுவாக மின் விளக்கின் ஒளியால் ஈர்க்கப்படும் சிற்றுயிர்களை உண்பதற்காக பல்லிகள் வருகின்றன. ஆனால், அவை வாழத் தகுதியான மறைவிடங்கள் முன்பைப் போல பெருமளவில் இருப்பதில்லை என்பதும் ஒரு சிக்கலாக உள்ளது," என்று விளக்கினார்.

பூச்சிகள் மட்டுமின்றி, பல்லிகளின் எண்ணிக்கையே பெருகினால், அவற்றின் அளவைக் கட்டுப்படுத்த அளவில் சிறியனவற்றை பெரிய பல்லிகள் பிடித்துச் சாப்பிட்டுத் தனது இனத்தின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் பணியையும் அவையே செய்வதாகக் கூறுகிறார் முனைவர் தணிகைவேல்.

நகர்ப்புறங்களில் வீட்டுப் பல்லிகளுக்கான வாழிட சூழல் பெருமளவில் குறைந்து வருவதால் அவற்றின் இருப்பும் அருகி வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இயற்கைச் சமநிலையில் பல்லிகளின் பங்கு

பொதுவாக, வீடுகளில் பல்லிகள் இருப்பது, அவற்றின் தோற்றம், எச்சம், அவை எழுப்பும் ஒலிகள் ஆகியவற்றின் காரணமாக, சிலர் அவற்றை ஒரு தொல்லையாகவே கருதுகின்றனர். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, அவை இயற்கையான பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களாகச் செயல்படுகின்றன.

கடந்த ஆண்டு, இந்தோனீசியாவின் ஐபிபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் அச்மத் ஃபராஜல்லா மேற்கொண்ட ஆய்வின்படி, பல்லிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்பட்சத்தில், அவை உண்மையில் இயற்கையான பூச்சிக் கட்டுப்பாட்டாளராக சூழலியல் சமநிலையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன.

அதேவேளையில், முனைவர் அச்மத்தின் கூற்றுப்படி, பல்லிகள் நோய்களைப் பரப்புகின்றன என்ற அனுமானம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மலாயா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், 20 முதல் 60% வரையிலான பல்லிகளின் குடலில் 'சால்மோனெல்லா' என்ற பாக்டீரியா இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனாலும், அந்த பாக்டீரியாவின் விளைவுகள் ஒருவருக்கு உடனடியாகத் தெரிய வராது எனவும், பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும் சாம்சன் கிருபாகரன் கூறுகிறார்.

அதேபோல, உணவு மாசுபடுதலுக்கான முக்கிய அபாயம் பல்லிகளிடம் இருந்து வருவதில்லை என்றும், மாறாக பெரும்பாலும் சரியாகச் சமைக்கப்படாத மூலப்பொருட்களில் இருந்தே வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

நகரங்களின் சூழலியல் அமைப்பு

தமிழ்நாட்டில் கொசுப் பிரச்னையால், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற கடுமையான நோய்கள் பரவுகின்றன.

இப்படிப்பட்ட அபாயகரமான கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தவளைகள், தட்டான்கள், பல்லிகள் போன்ற உயிரினங்களின் இருப்பு நகர்ப்புறங்களில் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம் என்கிறார் சாம்சன் கிருபாகரன்.

"குறிப்பாக, வீடுகளைச் சுற்றி கொசுக்கள் மட்டுமின்றி, கரப்பான்கள் உள்படப் பல பூச்சியினங்களைக் கட்டுக்குள் வைப்பதில் பல்லிகளே முதன்மைப் பங்காற்றுகின்றன. அவற்றின் இருப்பு இயற்கையான சுகாதாரப் பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாதது" என்று கூறுகிறார் அவர்.

பல்லிகள் கொசுக்களை முற்றிலுமாக ஒழிப்பதில்லை என்றாலும், லட்சக்கணக்கான வீடுகளில் அவற்றால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவை சீராகக் குறைப்பதில் பல்லிகளுக்கும் பங்குண்டு என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"இது ஒரு வீட்டில் இருக்கும் ஒரு பல்லி பற்றிய விஷயமல்ல. ஒரு நகரம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பல்லிகள் அனுதினமும் ஆற்றும் சூழலியல் சேவையைப் பற்றியது," என்று விவரித்தார் சாம்சன்.

நகரங்களில் கான்கிரீட், ஒளி மற்றும் மனித செயல்பாடுகளுக்குத் தகவமைத்து கொண்ட பல்வகை உயிரினங்களின் கூட்டு வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்ட நவீன சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக, ஆண்டின் பெரும்பாலான நாட்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சென்னை போன்ற நகரங்களில், இத்தகைய சூழல் மண்டலங்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

கட்டுமானத் தளங்களில் தேங்கும் நீர், திறந்த வடிகால்கள், தேங்கி நிற்கும் குளங்கள், குப்பைகள் குவியும் இடங்கள் ஆகிய இடங்களில் பூச்சிகள் செழித்து வளர்கின்றன. இதனால், அவற்றை வேட்டையாடி உண்ணக்கூடிய பல்லி போன்ற உயிரினங்களின் இருப்பும் அத்தியாவசியமாகிறது.

பட மூலாதாரம், Getty Images

வீட்டில் பல்லிகளே இல்லாமல் போனால் என்ன ஆகும்?

ஒரு வீட்டில் பல்லிகளே இல்லாமல் போனால், சிற்றுயிர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வேட்டையாடி உயிரினம் இல்லாததன் விளைவாக அவை கட்டுப்பாடின்றிப் பெருகிவிடக்கூடும்.

பல்லிகளே இல்லாமல் போவதால் ஏற்படும் நெருக்கடி ஒரே இரவில் தெரிந்துவிடாது. ஆனால், பூச்சிகளின் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் பல்வேறு நோய்களைத் தடுப்பதில் அவற்றின் பங்கு அளப்பரியது எனக் கூறும் சாம்சன், அந்தச் செயல்பாடு அற்றுப்போகும்போது அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இன்னமும் தனக்கு பல்லிகள் மீதுள்ள பயமோ அல்லது அருவருப்புணர்வோ சிறிதும் மாறவில்லை என்றாலும், "நான் அவற்றைக் கண்டால் அப்புறப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன்," என்கிறார் கவிதா.

"என் மகனுக்கு இப்போது அவற்றின் மீதான பயம் குறைந்துவிட்டது. அவை வேட்டையாடுவதைக் கண்டு வியக்கிறான். அதன் சூழலியல் அவசியத்தை இப்போது அவனே எனக்குக் கற்பிக்கிறான். மனிதர்களும் பிற உயிரினங்களும் இயைந்து வாழ்வதற்கு என்னைப் போன்றவர்களின் பயமோ, அருவருப்போ நீங்கித்தான் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குத் தேவைப்படுவதெல்லாம் சிறிதளவு புரிதல் மட்டுமே. பல்லிகளின் இருப்பு நம்மைச் சுற்றியுள்ள சூழலியலை சமநிலையில் பேணுவதற்கு மிகவும் அவசியமானது என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டுவிட்டது," என்கிறார் கவிதா.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

ரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்ற நவீன நுட்பங்களின் மூலமாக கொசு உள்பட சிற்றுயிர்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. ஆனால், அவற்றால் பல்வேறு பக்கவிளைவுகள் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் தணிகைவேல்.

"ரசாயனங்களுக்கு பூச்சிகள் தாங்குதிறனை வளர்த்துக்கொண்டு எதிர்செயலாற்றும் நிலை உருவாகக்கூடும். அதேவேளையில், இத்தகைய பூச்சிக்கொல்லிகளை உட்கொண்ட சிற்றுயிர்களைச் சாப்பிடும் உயிரினங்களுக்கும் அவற்றை வேட்டையாடும் உயிர்களுக்கும்கூட அந்த ராசயனங்களின் பாதிப்புகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட விளைவுகள் ஏதுமற்ற, இயற்கையான, சமநிலை மிக்க ஒரு தீர்வாகவே தவளைகள், பல்லிகள் போன்ற உயிரினங்களின் வாழ்வியல் முறை இருக்கிறது," என்று விவரித்தார் தணிகைவேல்.

தமிழகத்தின் வீடுகளில், அது பரபரப்பான சென்னை போன்ற நகரங்களிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும், வயல்வெளிகளால் சூழப்பட்ட கிராம வீடுகளாக இருந்தாலும், பல்லிகளைப் போன்ற சில உயிரினங்கள் மனித வாழ்விடத்திற்குத் தம்மைத் தகவமைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றன. நமது அன்றாட வாழ்வில் இருந்து அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு