You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நீட்' தகராறில் தந்தையை கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டியதாக மகன் கைது - என்ன நடந்தது?
- எழுதியவர், சையத் மோசிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(குறிப்பு: இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.)
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஆடம்பரமான பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் உடல் பாகங்கள் அவரது வீட்டிலிருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜாலவுன் பகுதியைச் சேர்ந்த 49 வயதான மானவேந்திர பிரதாப் சிங், லக்னோவில் தொழில் செய்து வந்தார்.
பிப்ரவரி 20-ம் தேதி காணமல் போனதாக அவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு சில பாகங்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக அவரது மகன், 21 வயதான அக்ஷத் பிரதாப் சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய துணை போலீஸ் ஆணையர் விக்ராந்த் வீர், "அக்ஷத் பிரதாப் சிங் தனது தந்தையை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், பிப்ரவரி 20 அன்று அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், அவர் தனது தந்தையைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்" என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்களை காவல்துறை பகிரவில்லை. இருப்பினும், "குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் காவலில் எடுத்து, தேவையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் மானவேந்திர சிங்கின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் புகார் அளித்ததையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கண்டெடுத்தனர்.
49 வயதான மானவேந்திர பிரதாப் சிங்கின் கொலை, லக்னோ விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆஷியானா பகுதியில் இருக்கும் அவரது மூன்று மாடி வீட்டில் நடந்துள்ளது.
'தந்தையை சுட்டுக்கொன்று, உடலைத் துண்டுதுண்டாக வெட்டிய மகன்'
ஆஷியானா காவல் நிலைய அதிகாரி சத்ரபால் சிங் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டுள்ளார். அந்தத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," என்றார்.
காவல்துறையின் கூற்றுப்படி, மானவேந்திர பிரதாப் சிங்கிற்கும் அவரது மகனுக்கும் இடையே படிப்பு தொடர்பாகத் தகராறு இருந்து வந்துள்ளது. அக்ஷத் தற்போது பி.காம் படித்து வருகிறார்.
மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் விக்ராந்த் வீர் கூறுகையில், "விசாரணையில், மானவேந்திர சிங் தனது மகனை நீட் தேர்வுக்குத் தயாராகும்படியும், மருத்துவத் துறையில் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும்படியும் கட்டாயப்படுத்திவந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மனக்கசப்பு இருந்துள்ளது, இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது" என்றார்.
ஆஷியானா காவல்துறையினரின் தகவல்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. "வாக்குவாதத்தின் போது, அக்ஷத் தனது தந்தையைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, உடலை மூன்றாவது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு எடுத்து வந்து, அங்குள்ள காலியான அறையில் வைத்து உடலைப் பல துண்டுகளாக வெட்டியுள்ளார்."
"குற்றம் சாட்டப்பட்டவர் உடல் பாகங்களைத் துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்துள்ளார். சில பாகங்களை சத்ரௌனா பகுதிக்கு அருகில் வீசியுள்ளார், மீதமுள்ள பாகங்களை வீட்டில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் வைத்துள்ளார்" என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய ஆஷியானா காவல் நிலைய அதிகாரி சத்ரபால் சிங், "உடலின் அனைத்து பாகங்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். விசாரணையின்படி, படிப்பு தொடர்பாகத் தந்தையுடன் அவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது என்பது முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது," என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட அக்ஷத், லக்னோவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது அவர் பி.காம் படித்து வருகிறார்.
காணாமல் போனது முதல் கொலை வரை
"அக்ஷத் பிப்ரவரி 20-ம் தேதி தனது தந்தை மானவேந்திர பிரதாப் சிங்கைக் காணவில்லை என்று ஆஷியானா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்" என லக்னோ மத்திய மண்டல டிசிபி விக்ராந்த் வீர் தெரிவித்தார்.
அதன்பிறகு, காவல்துறையினர் மானவேந்திராவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அவர்களது வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 23-ம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வீட்டைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையின் போது, தரைத்தளத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பேரலில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மானவேந்திர சிங்கிற்கு, அக்ஷத்தைத் தவிர மகள் ஒருவரும் உண்டு. மகள் உள்ளூர் பள்ளியில் படித்து வருகிறார்.
தங்கள் பெயரை வெளியிட விரும்பாத மானவேந்திர பிரதாப் சிங்கின் உறவினர்கள் கூறுகையில், "அக்ஷத் முன்பு நீட் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கான பயிற்சிகளையும் பெற்றுவந்தார். ஆனால் இரண்டு முறை தேர்வு எழுதியும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை" என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கு குறித்து பேசிய லக்னோவின் யூனிட்டி கல்லூரியின் உளவியல் உதவிப் பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "வீட்டில் தொடர்ச்சியாக நடக்கும் சண்டைகள், குடும்பத்தின் அழுத்தம், கோபம் அல்லது நீண்ட கால மன அழுத்தம் ஆகியவை சில நேரங்களில் வன்முறைச் செயல்களுக்கு வழிவகுக்கும்," என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், "படிப்பு தொடர்பான அழுத்தம் அல்லது கட்டாயப்படுத்துதல் ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இது மட்டுமே ஒருவருக்குத் தீவிரமான மனநலப் பாதிப்பு இருப்பதற்கான ஆதாரமாகிவிடாது."
உளவியலில் இத்தகைய சம்பவங்கள் பல சாத்தியமான காரணங்களின் அடிப்படையில் ஆராயப்படுகின்றன என்றும், மருத்துவர்கள் அல்லது மருத்துவ உளவியலாளர்களின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகே இத்தகைய வழக்குகளில் ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு