You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய மக்களை வகைப்படுத்த பிரிட்டிஷாருக்கு புகைப்படங்கள் உதவியது எப்படி?
- எழுதியவர், சுதா ஜி திலக்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியாவை அறிந்துகொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் பேரரசின் மிகவும் செல்வாக்கு மிக்க கருவிகளில் ஒன்றாகப் புகைப்படக்கலை மாறியது.
'டைப்காஸ்டிங்: புகைப்படங்களில் இந்திய மக்கள், 1855-1920' என்று அழைக்கப்படும் ஒரு புதிய கண்காட்சி - டெல்லியைத் தளமாகக் கொண்ட கலைக்கூடமான டிஏஜி-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. சமூகங்களை வகைப்படுத்தவும், அடையாளங்களை நிலைநிறுத்தவும் மற்றும் இந்தியாவின் சிக்கலான சமூக வேறுபாடுகளை காலனித்துவ அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் மாற்றவும் கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 அரிய புகைப்படங்களை இந்த கண்காட்சி ஒன்றிணைக்கிறது.
65 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் வடகிழக்கில் உள்ள லெப்சா மற்றும் பூட்டியா சமூகங்கள் முதல் வடமேற்கில் உள்ள அப்ரிடி வரை; நீலகிரியில் உள்ள தோடாக்கள் முதல் மேற்கு இந்தியாவில் உள்ள பார்சி மற்றும் குஜராத்தி மேல்தட்டு மக்கள் வரை ஒரு விரிவான மனித புவியியலை வரைபடமாக்குகிறது.
நடனப் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் என சமூக வரிசையின் கீழ்மட்டத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் மீதும் இது தனது பார்வையைத் திருப்புகிறது.
இந்த படங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; அவை பன்முகத்தன்மையைச் செதுக்கின, ஓடிக்கொண்டிருக்கிற, வாழ்ந்த உண்மைகளைத் தெளிவான மற்றும் அறியக்கூடிய "வகைகளாக" மாற்றின.
வரலாற்று ஆய்வாளர் சுதேஷ்ணா குஹாவால் தொகுக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, 1868 மற்றும் 1875-க்கு இடையில் வெளியிடப்பட்ட செல்வாக்கு மிக்க எட்டு தொகுதிகள் கொண்ட புகைப்பட ஆய்வான 'தி பீப்பிள் ஆஃப் இந்தியா' வின் படங்களை மையமாகக் கொண்டுள்ளது.
இந்த மையத்திலிருந்து தொடங்கி, அந்த காலத்தின் காட்சி மொழியை வரையறுக்க உதவிய சாமுவேல் பார்ன், லாலா தீன் தயாள், ஜான் பர்க் மற்றும் ஷெப்பர்ட் & ராபர்ட்சன் ஸ்டுடியோ போன்ற புகைப்படக் கலைஞர்களின் அல்புமென் மற்றும் சில்வர்-ஜெலட்டின் அச்சுப்படங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.
"ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தத் தொகுப்புகள் மானுடவியல் புகைப்படத்தின் வரலாற்றையும், பிரிட்டிஷ் நிர்வாகம் மற்றும் இந்திய மக்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் கூறுகின்றன. இது போன்ற அளவு மற்றும் ஆழம் கொண்ட ஒரு திட்டம் இதற்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதில்லை," என்கிறார் டிஏஜி-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஆனந்த்.
கண்காட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு