You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தாலிபன் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள உள்ள 'ஏழு பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் முகாம்களை' குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
நங்கர்ஹர் மற்றும் பக்டிகாவில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பிபிசி பாஷ்டோ மொழி சேவையின்படி, நங்கர்ஹர் மற்றும் பக்டிகா மாகாணங்களில் 'பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில்' பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிப்பதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நங்கர்ஹரில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பக்டிகாவில் ஒரு மதரஸா தாக்குதலுக்கு இலக்கானதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், தனது நாட்டில் சமீபத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
பாகிஸ்தான் கூறுவது என்ன?
உளவுத் தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஏழு 'பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் முகாம்களை குறிவைத்ததாக' பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்படி, பாகிஸ்தான் தாலிபன் மற்றும் அதனுடன் சேர்ந்த ஃபித்னா-அல்-கவார்ஜி மற்றும் கோரசான் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆகியவற்றின் மறைவிடங்கள் மற்றும் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சமீபத்தில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்குப் பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
"இந்த பயங்கரவாத தாக்குதல்கள் கவாரிஜ் குழுவால் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட அவர்களது தலைமை மற்றும் கையாள்பவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் உள்ளன. ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் தாலிபன், ஃபிட்னா அல்-கவாரிஜ் உடன் தொடர்புடைய அவர்களின் துணை அமைப்புகள் மற்றும் கோரசான் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆகியவையும் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளன." என பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரி வந்ததாகக் கூறும் பாகிஸ்தான், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறது.
அதோடு 'கவாரிஜ் மற்றும் பிற பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக' தங்கள் பிரதேசத்தைப் பயன்படுத்துவதை ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
தாலிபன் அரசு எச்சரிக்கை
ஆனால் ஆப்காகிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் அத்துமீறியிருப்பதாக தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் படைகளின் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் நங்கர்ஹர் மற்றும் பக்திகா மாகாணங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரையும் கொன்றுள்ளது," என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் தளபதிகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு பலவீனத்தை இத்தகைய குற்றங்கள் மூலம் ஈடு செய்கின்றனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையின் மீதான கடுமையான அத்துமீறல் மற்றும் குற்றத்தை பாதுகாப்பு அமைச்சகம் வன்மையாக கண்டிக்கிறது. இதை சர்வதேச சட்டம், சிறந்த அண்டைநாட்டு கொள்கைகள் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களின் தெளிவான மீறலாகவும் கருதுகிறது" என்று தாலிபன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயதுல்லா குவாரிஸ்மி அறிக்கையின் மூலமாக தெரிவித்தார்.
"நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களைப் பாதுகாப்பதை தனது கடமையாக பாதுகாப்பு அமைச்சகம் கருதுகிறது, தகுந்த நேரத்தில் திட்டமிட்ட பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு