காணொளி: ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மறுப்பு - இஸ்ரேல் பிரதமருக்கு இரான் குறி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரானுடன் ஒப்பந்தம் செய்ய தற்போது நான் தயாராக இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். மறுபுறம், பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்வோம் என இஸ்லாமிய புரட்கர காவல்படை உறுதி எடுத்துள்ளதாக இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி முகமை கூறுகிறது.
அதேபோல, ஹோர்மூஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய சில நாடுகள் போர்க்கப்பலை அனுப்பும் என தான் நம்புவதாக டிரம்ப் கூறி இருந்த நிலையில், அந்த நாடுகள் அது தொடர்பாக பதிலளித்து வருகின்றன. என்ன நடந்தது? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
சனிக்கிழமை அமெரிக்க ஊடகமான NBC News-க்கு அளித்த பேட்டியில் இரான் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக டிரம்ப் கூறினார். ஆனால், ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் போதுமான அளவு சிறப்பாக இல்லை என்பதால், தற்போது ஒப்பந்தம் செய்துகொள்ள நான் தயாராக இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.
அந்த நிபந்தனைகள் என்ன என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை. அதே நேரம், அணுசக்தி தொடர்பான லட்சியங்களை கைவிடுவதாக இரான் அளிக்கும் உறுதிமொழி, எதிர்கால ஒப்பந்தத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என டிரம்ப் கூறினார்.
அதே பேட்டியில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவுவதாக பல நாடுகள் உறுதியளித்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். எனினும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.
முன்னதாக ட்ரூத் சோசியல் தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் இப்பகுதிக்கு அமெரிக்காவுடன் இணைந்து தங்கள் போர்க் கப்பல்களை அனுப்பும் என நம்புகிறோம் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த அழைப்பு தொடர்பாக அந்த நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன், பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு வழிகளை எங்கள் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் விவாதித்து வருகிறோம் என கூறி உள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் CNN ஊடகத்திடம் பேசுகையில், சீனா உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார். டிரம்பின் கோரிக்கையை சீனா ஏற்குமா என்பது குறித்து அவர் எதும் கூறவில்லை. ஆனால் நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உள்ளது என்றும், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் சீனா தொடர்ந்து தொடர்புகளை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஜப்பான் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், வரும் புதன்கிழமை தொடங்க உள்ள ஜப்பான் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது இப்பிரச்சினை விவாதப் பொருளாக இடம்பெறக்கூடும் என ஜப்பானிய ஊடகமான NHK-விடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரம்ப் கேட்டுக்கொண்டார் என்பதற்காக மட்டுமே, ஜப்பான் உடனடியாக தனது கப்பல்களை அனுப்பாது என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார். ஜப்பான் தனது பதிலைத் தானே தீர்மானிக்கும். சுதந்திரமாக முடிவெடுத்தலே எங்கள் அடிப்படை என அந்த அதிகாரி கூறினார்.
தென் கொரியா உடனடியாக எந்த பதிலும் வெளியாகவில்லை.
இதற்கிடையே மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்வோம் என இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உறுதி எடுத்துள்ளதாக இரான் அரசுடன் தொடர்புடைய மியர் செய்தி முகமை கூறுகிறது.
மேற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது, இஸ்ரேல் மேலும் ஒரு பரந்த அளவிலான தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் கூறி உள்ளது. அதே போல, இரானும் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்கிறது.
நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் டெல் அவிவில் ஏற்பட்ட சேதத்தின் காட்சிகள் வெளியாகியுளள்ன.
இரான் நடத்திய சமீபத்திய தாக்குதல் அலையில் எந்த உயிரிழப்பும் இல்லை என இஸ்ரேல் கூறி உள்ளது. அதே போல, மத்திய கிழக்கு நாடுகள் மீது நடக்கும் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது.
இரவு முழுவதும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான்பரப்பில் குறிப்பாக தலைநகர் ரியாத் மற்றும் நாட்டின் கிழக்குப்பகுதிகளில் 26 இரானிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 5 இரானிய டிரோன்களை தனது தேசிய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக குவைத் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு