You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய், சசிகலாவை விடுத்து திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்ததன் பலன் யாருக்கு?
அ.தி.மு.கவில் இருந்து மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது தி.மு.கவில் இணைந்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை நடக்காத இந்த நிகழ்வு யாருக்கு சாதகம்?
2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நண்பகல். ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா சுமார் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த தருணம்.
அடுத்த சில நிமிடங்களில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெயலலிதா, "சகோதரர் பன்னீர்செல்வத்தை தொண்டராகப் பெற்றது நான் செய்த பாக்கியம்" என்றார்.
இப்போது சுமார் ஒரு கால் நூற்றாண்டு கழிந்திருக்கும் நிலையில், அ.தி.மு.கவின் நேரெதிர் கட்சியான தி.மு.கவின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், "திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்" என்று கூறி ஓ. பன்னீர்செல்வத்தைப் பாராட்டியிருக்கிறார்.
மூன்று முறை முதல்வர்
கடந்து சென்ற சுமார் கால் நூற்றாண்டில் தமிழக அரசியலில் எவ்வளவோ நடந்துவிட்டது. ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்விலும் பல ஏற்றத்தாழ்வுகள்.
அதன் உச்சகட்டமாகவே அ.தி.மு.கவின் சார்பில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த அவர், வெள்ளிக்கிழமையன்று (27 பிப்ரவரி ) காலையில் தி.மு.கவில் இணைந்திருக்கிறார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து கட்சியில் இணைத்துவரும் தி.மு.கவைப் பொருத்தவரை, ஒரு முக்கியத் தலைவர் அக்கட்சிக்கு வந்திருக்கிறார் என்பதை ஒரு சாதகமான அம்சமாக அக்கட்சி பார்க்கலாம்.
ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் இது மிகப் பெரிய திருப்பம்.
சில நாட்களுக்கு முன்னதாக, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறி வாழ்த்து தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு நடந்ததாக விளக்கமளித்தார்.
இந்தச் சந்திப்பும் இதற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்தும் பின்னால் வரப்போகும் காட்சிகளுக்குக் கட்டியம் கூறுவதைப் போலவே இருந்தன.
இந்த நிலையில்தான் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகனும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து தி.மு.கவில் இணைந்திருக்கின்றனர்.
ஓ. பன்னீர்செல்வத்தைப் பொருத்தவரை, அவரது அரசியல் வாழ்வில் பல ஆச்சரியங்களை அளித்தவர். 2001-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெ. ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக்கப்பட்டார்.
இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் உப்பிலியாபுரம் சரோஜா, விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் உள்ளிட்ட வேறு சிலரின் பெயர்கள்தான் முதலமைச்சர் பதவிக்கு அடிபட்டன.
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட்டதும் அவரது தலைமையிலான அமைச்சரவையிலேயே மீண்டும் பங்கேற்றார் ஓ. பன்னீர்செல்வம்.
இதற்குப் பிறகு, 2014 ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, முதலமைச்சர் வாய்ப்பு மீண்டும் அவரது கதவைத் தட்டியது. முன்பு நடந்ததைப் போலவே இந்த முறையும் நடந்தது.
இதற்குப் பிறகு, 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், முந்தைய முறைகளைப்போல இந்த முறை எதுவும் சுமூகமாக நடக்கவில்லை.
செல்வாக்கு உள்ளதா?
ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவுக்கு வழிவிடும் வகையில் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஓ. பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தாலும் அதில் அவருக்கு விருப்பம் இல்லையென்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
இதற்குப் பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்தார். இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் வி.கே. சசிகலா மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். பிறகு, அ.தி.மு.கவின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு, வி.கே. சசிகலாவும் அவரைச் சார்ந்தவர்களும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம். இந்த முறை, துணை முதலமைச்சராகப் பதவியேற்றார் அவர்.
இதற்குப் பிறகு கட்சிக்குள் எல்லாம் சுமுகமாக இருப்பதாகத் தெரிந்தாலும் அப்படியில்லை என்பது பல விவகாரங்களில் தொடர்ந்து வெளிப்பட்டுவந்தது.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி அடைந்த தோல்விக்குப் பிறகு கூடிய அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கியது.
இதற்குப் பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை நடத்திவந்த ஓ. பன்னீர்செல்வம், தன்னை மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்க வேண்டுமென தொடர்ந்து கோரிவந்தார். ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லாத நிலையில், தற்போது தி.மு.கவில் இணைந்திருக்கிறார்.
இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
"பதவியே வேண்டாம், என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என ஓ. பன்னீர்செல்வம் சொன்னபோதே, எடப்பாடி கருணை காட்டியிருக்காலம். அப்படி நடக்காத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் கௌரவமாக அரசியலில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால், தி.மு.கவில் போய் சேர்ந்தது காலத்தின் கொடுமைதான். இதற்கு காரணம் எடப்பாடி கே. பழனிசாமிதான். இதனை தி.மு.க பயன்படுத்திக்கொண்டது. இதை உண்மையான அ.தி.மு.க. தொண்டன் ஒருபோதும் ஏற்க மாட்டான்" என்கிறார் குபேந்திரன்.
ஆனால், இதனை வைத்துக்கொண்டு அ.தி.மு.கவின் முன்னாள் முதல்வரே தங்கள் கட்சியில் இணைந்துவிட்டதாக தி.மு.க. கூறுவது சற்று அதிகமாக இருக்கும் என்கிறார் அவர்.
"காரணம், அவர் ஒருபோதும் அ.தி.மு.கவின் சார்பில் மக்களால் முதல்வர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டவர் அல்ல. கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டவர். இவருக்கென பெரிய தொண்டர் செல்வாக்குக் கிடையாது. அப்படியிருந்தால், தனியாகக் கட்சி ஆரம்பித்து, தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கலாம். இவர் இணைந்திருப்பதால் தி.மு.கவுக்கு தேர்தல் களத்தில் பெரிய லாபம் இல்லை. மாறாக, நாடு தழுவிய அளவில் மு.க. ஸ்டாலினின் இமேஜை வளர்த்தெடுக்க இது உதவும், அவ்வளவுதான்" என்கிறார் குபேந்திரன்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி
குபேந்திரன் சொல்வதைப்போல, ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் களத்தில் தனது செல்வாக்கை தனித்து நிரூபித்தவர் அல்ல.
அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து சுயேச்சை சின்னத்தில் தேர்தலைச் சந்தித்தார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் கே. நவாஸ் கனியிடம் சுமார் ஒரு லட்சத்து 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதற்கிடையில், எடப்பாடி கே. பழனிசாமியை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் பக்கமாக இருந்துவந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் உள்ளிட்டோர் தி.மு.கவுக்கே சென்றுவிட்டனர். இதனால் தனித்துவிடப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் முன்பாக இரு வாய்ப்புகளே இருந்தன என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"ஓ. பன்னீர்செல்வத்தைப் பொருத்தவரை அவருக்கு முன்பாக த.வெ.க. - தி.மு.க. என இரு வாய்ப்புகள் இருந்தன. அவர் தென்மாவட்டங்களில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறார். அதற்கு த.வெ.கவைவிட, தி.மு.க. சாதகமாக இருக்கும். வி.கே. சசிகலாவுடன் இணைந்துகூட அவர் செயல்பட்டிருக்கலாம். ஆனால், அதன் பலன் தி.மு.கவுக்குத்தான் செல்லுமே தவிர, இவருக்கு ஏதும் கிடைக்காது. இந்த கணக்குகளையெல்லாம் வைத்துத்தான் தி.மு.கவில் இணைந்திருக்கிறார்" என்கிறார் ப்ரியன்.
ஓ. பன்னீர்செல்வத்திற்கு என்ன கிடைக்கும்?
"அவருக்கு ஒரு எம்.எல்.ஏ. சீட் தருவதாக உறுதிப்படுத்தியிருப்பார்கள். மற்றபடி வேறு வாக்குறுதிகள் குறித்து இப்போது தெரியவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன்.
குபேந்திரனைப் பொருத்தவரை, வரும் தேர்தலில் தி.மு.கவும் வென்று, ஓ. பன்னீர்செல்வமும் வெற்றிபெற்றால் அவருக்கு சபாநாயகர் பதவி தரப்படலாம் என்கிறார்.
"அப்படி நடந்தால் உண்மையான தி.மு.க. தொண்டருக்கு வருத்தம்தான் ஏற்படும். பெரியகுளம் தொகுதியும் கையைவிட்டுப் போய், சபாநாயகர் பதவியும் புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்குச் செல்வதை யார்தான் மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள்?" என்கிறார் குபேந்திரன்.
ஆனால், எடப்பாடி கே. பழனிசாமிக்கு இது சாதகமான அம்சம்தான் என்கிறார் ப்ரியன்.
"நீண்ட கால நோக்கில் பார்த்தால் இது எடப்பாடி கே. பழனிசாமிக்கு சாதகம்தான். இனி அ.தி.மு.க. மீது ஓ. பன்னீர்செல்வத்தால் உரிமைகோர முடியாது என்பதால் கட்சிக்குள் அவருக்கு தலைமை குறித்த சவால் இருக்காது" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு