You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ் பிச்சை எடுக்க உதவாது' - கமல்ஹாசன் உரைக்கு நிர்மலா சீதாராமன் தரப்பு பதில் என்ன?
மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் புதன்கிழமை மாநிலங்களவையில் தனது முதல் உரையை வழங்கினார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு 'தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்' எனப் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் அலுவலகமும் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கமல் பேசியது என்ன?
மாநிலங்களவையில் முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன், தனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை என்று குறிப்பிட்டார்.
"எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் (அண்ணா) எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்" எனக் கூறினார்.
அதன் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு தமிழில் பேசத் தொடங்கினார்.
"பிரியசகோதரி பவதிபிச்சாந்தேகி என்று தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர், இசைமேதை தியாகராஜன். அவர் பிக்ஷா பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதன் பிறகு உங்கள் பிச்சைப்பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்." என்று கூறினார்.
நிர்மலா சீதாராமன் தமிழ் குறித்து கூறியது என்ன?
கடந்தாண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் கூறியதாகக் குறிப்பிட்டு, "'தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற அனுபவ புலவர் ஒருவர் பாடியுள்ளார்' என பெரியார் கூறியுள்ளார்" என்று தெரிவித்தார்.
பெரியாரின் இந்தக் கருத்து 27 நவம்பர், 1943இல் வெளியான விடுதலை இதழில் வெளியானதாக அப்போது குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.
இதைக் குறிப்பிட்டு, தனது முதல் மாநிலங்களவை உரையில் கமல்ஹாசன் பேசியிருந்த நிலையில், இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் அலுவலகம் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே நிதி அமைச்சர் தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பதிவில் கடந்தாண்டு நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு