சம பலத்துடன் மோதிய 'த்ரில்' போட்டியில் குஜராத் சவாலை கடைசி நேரத்தில் பஞ்சாப் முறியடித்தது எப்படி?

PBKSvsGT

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், என்.எஸ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒருபக்கம் 200க்கும் அதிகமான ரன்கள் இலக்கு என்றாலும் தளராமல் 15 ஓவர்களில் விரட்டி ஜெயித்த அணிகள், மறுபக்கம் அதிக எதிர்பார்ப்புகளோடு களமிறங்கி கோட்டைவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் என இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் சில ஆட்டங்கள் ரசிகர்களை பெரிதும் ஏமாற்ற, இரு சமபலம் பொருந்திய அணிகள் மோதும் போட்டிக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

அது ஒருவழியாக நேற்று (மார்ச் 31) நிகழ்ந்தது. குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ். இந்த இரு அணிகளுமே கடந்த முறை ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்றிருந்தவை. இந்த தொடருக்கு முந்தைய ஏலத்திலும் இந்த இரண்டு அணிகளுக்கும் வீரர்களை வாங்க பெரிதாக எந்த தேவையும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட போன சீசனில் ஆடிய அதே டீமோடு தான் இந்த முறையும் களமிறங்கி இருக்கிறார்கள். சமபலம் எனச் சொல்லப்படுவது இதனால்தான்.

ஆட்டம் நடப்பது பஞ்சாப் அணியின் ஹோம் கிரவுண்டான முல்லன்பூரில். ஐ.பி.எல் நடக்கும் பிற மைதானங்களை ஒப்பிடுகையில் இந்த மைதானம் மிகவும் புதிது. இதுவரை இங்கு ஆடப்பட்டிருக்கும் 11 டி20 போட்டிகளில் ஆறில் முதலில் பேட் செய்த அணிகளும் ஐந்தில் இரண்டாவது பேட் செய்த அணிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த தரவுகள் எல்லாம் மழை மைதானத்தை தொடும்வரையில்தான். கருமேகம் தென்பட்டாலே இரண்டாவது பேட்டிங் தேர்ந்தெடுப்பது கேப்டன்களின் வழக்கம். முல்லன்பூரிலும் மழை எதிர்பார்ப்புகளால் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நினைத்தது போலவே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில், ரிக்கி பான்டிங்கின் நம்பிக்கைக்கு உரிய ஆல்ரவுண்டர் கூப்பர் கானலிக்கு வாய்ப்பு தரப்பட்டிருந்தது. கூடவே மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜேவியர் பார்ட்லெட்டுக்கும். குஜராத் அணியில் பலகோடி ரூபாய் கொட்டி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜேசன் ஹோல்டருக்கு இடமில்லை. அவருக்கு பதில் அனுபவம் வாய்ந்த ரபாடாவே களமிறக்கப்பட்டார்.

குஜராத் அணியை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த முடிவு பெரிய ஆச்சர்யம் எல்லாம் இல்லை. அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, 'பேட்ஸ்மேன்களால் அந்தந்த போட்டிகளை மட்டும்தான் வெல்ல முடியும். ஆனால் பவுலர்களால் தான் ஒட்டுமொத்தத் தொடரையும் வெல்ல முடியும்' என்கிற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் ரபாடா, சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ரஷித் கான் என சர்வதேச பவுலர்கள் அத்தனை பேர் இருந்தாலும் கூடவே ராஜஸ்தானை சேர்ந்த இளம் பவுலரான அசோக் ஷர்மாவுக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கொடுத்திருந்தார்.

குஜராத் அணிக்கு ஓப்பனிங் இறங்கியது சுப்மன் கில்லும் சாய் சுதர்ஷனும். 'ஒன் டவுன்' கடந்த முறை போலவே பட்லர். குஜராத் அணி கடந்த சீசனில் மொத்தம் எடுத்த ரன்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் ரன்கள் இவர்கள் மூவரும் அடித்தவையே. இந்த முறையும் இவர்கள் மூவரின் பேட்டிங்கைத்தான் மலை போல நம்பியிருக்கிறது இந்த அணி.

அணியின் வெற்றியை தாண்டி இந்த மூவருக்கும் தனிப்பட்ட முறையிலும் இந்த சீசனில் பெருவெற்றி தேவையாய் இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான கில்லுக்கு இந்திய டி20 அணியில் இடமில்லை. காயமடைந்து ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார் சாய் சுதர்ஷன். பட்லரோ சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் மிக மோசமாக ஆடியிருந்தார். எனவே, இந்த தொடரில் இவர்கள் மூவருக்குமே ஏதோவொரு வகையில் தங்களை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் ஐயர் (கோப்புப்படம்)

முதல் ஓவர் தொடங்கும்போதே மழை தூறத் தொடங்கியிருந்தது. கூடவே தீவிரக் காற்றும். எனவே, மிக நிதானமாகவே ஆடத் தொடங்கினார்கள் குஜராத் பேட்ஸ்மேன்கள். முடிந்த அளவுக்கு சிங்கிள் தட்டுவது, வசதியான பந்துகளை மட்டும் கவனமாய் பவுண்டரிக்கு அனுப்புவது என்கிற அவர்களின் திட்டத்திற்கு ஓரளவு பயனும் கிடைத்தது. முதல் மூன்று ஓவர்களில் 35 ரன்கள்.

யான்சன் வீசிய நான்காவது ஓவரில் பந்தை தவறாக கணித்து ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சாய் சுதர்ஷன். இப்போது ஜாஸ் பட்லரின் முறை. யானை, ரயில், குழந்தையின் சிரிப்பு என பார்க்கச் சலிக்காதவை பட்டியலில் கவர் ட்ரைவ் ஆடும் பேட்ஸ்மேன்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியொரு அழகான கவர் ட்ரைவ் ஆடி தன் கணக்கைத் தொடங்கினார் பட்லர். ஆறு ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 54/1. பவர்ப்ளேயில் குஜராத் பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதே அவர்கள் எவ்வளவு கவனமாக ஆடினார்கள் என்பதற்கான சான்று.

ஏழாவது ஓவரில் விஜயகுமார் வைஷாக் வீசிய ஃபுல் லென்த் பாலில் சிக்ஸர் அடித்து அந்தக் குறையையும் போக்கினார் பட்லர். எட்டாவது ஓவருக்கு சஹல் வந்ததும், தூறல் காரணமாக பிட்ச் ஸ்லோவாகவும் சரியாக இருந்தது. அதைப் பயன்படுத்தி முடிந்தவரை ரன்களை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார் சஹல். விளைவு, தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார் கில்.

அடுத்ததாக களமிறங்கிய க்ளென் ஃ ப்லிப்ஸும், கில் ஆடிய அதே முறையில் நிதானமாக ஆடினார். அவரும் ஒரு கட்டத்தில் வெளியேற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். ஆனால் அவராலும் விரைவாக ரன் குவிக்கமுடியவில்லை. ஸ்லோ பிட்ச் என தெரிந்தபின் ஸ்லோ பவுன்சர்களாக போட்டு குஜராத் பேட்ஸ்மேன்களை தடுமாறவிட்டார்கள் பஞ்சாப் பவுலர்கள். இதனால் அழுத்தம் அதிகமாகி ஒவ்வொருவராக தங்கள் விக்கெட்டை சீரான இடைவெளியில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பத் தொடங்கினார்கள்.

கடைசி ஐந்து ஓவர்களில் குஜராத் அணியால் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 162/6. பஞ்சாப் சார்பில் விஜயகுமார் வைஷாக் மூன்று விக்கெட்களும் சஹல் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார்கள்.

சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாய் சுதர்ஷன் (கோப்புப்படம்)

ஐ.பி.எல் தொடரை அணி நிர்வாகங்கள் மிகத் தீவிரமாக அணுகத் தொடங்கியபின் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்கள் இரண்டு. ஒன்று தேசிய அணியில் இடம்பெற ஒரு நுழைவுத் தேர்வு போல மாறியது இந்தத் தொடர். இரண்டாவது 'டேலன்ட் ஸ்கெளட்டிங்'. இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அணி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பயணித்து தகுதியான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி கடந்த ஆண்டு பஞ்சாப் நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் பந்தை நாலாபுறமும் சிதறடித்து சதம் போட்டவர். அதனால் இந்தமுறை அவர் எப்படி ஆடுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு இருந்தது. முதல் ஓவரிலேயே சீனியரான சிராஜ் பந்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை கூட்டினார். ஆனால் அடுத்த ஓவரே ரபாடா வீசிய ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மூன்றாவதாக ஷ்ரேயாஸ் களமிறங்குவாரா இல்லையா என்பதுதான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்புவரை விவாதப்பொருளாக இருந்தது. ஐ.பி.எல்லில் மூன்றாவது இடத்தில்தான் பெரும்பாலும் ஆடியிருக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் வழக்கமாக நான்காவது வீரராக களமிறங்குபவர். இப்போது இந்திய டி20 அணியில் நான்காவது இடத்தில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் ஓய்வு பெற்றால் அவரின் இடத்தில் தேசிய அணிக்கு ஆடலாம். அதுமட்டும்தான் இந்திய டி20 அணியில் இடம்பெற ஒரே வழி என அவர் யோசிப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அதை மெய்யாக்குவது போலவே கூப்பர் கானலியை களமிறங்கினார் பாண்டிங். மறுபக்கம் பிரப்சிம்ரன் சிங். இருவரும் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல் ரபாடா, ரஷித் கான், அசோக் ஷர்மா என எல்லாரையும் பந்தாடினார்கள். 9 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 81/1. ஒருவழியாக பத்தாவது ஓவரில் ப்ரப்சிம்ரனை வெளியேற்றினார் ரஷித் கான்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

மழை இப்போது கொஞ்சம் தீவிரமடைந்திருந்தது. அதனால் ஆட்டத்தை சீக்கிரம் முடித்துவிடவேண்டும் என அவசரம் காட்டினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். இதனால் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஸ்ரேயாஸ். ஆனால் அடுத்த ஓவரில் கானலி ஓங்கி அடித்த பந்து ஸ்ரேயாஸ் கையில் சீறிவந்து பட, தடுமாறிப் போனார் ஷ்ரேயாஸ். அந்த தாக்கத்தில் அவரால் பிரஷித் கிருஷ்ணாவின் பந்தை சரியாக அடிக்கமுடியாமல் போனது. டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின் வந்த நேஹால் வதேரா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என அனைவரும் அதே அவசரகதியில் ஆடி அவுட்டாக, முதல்முறையாக ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற ஒரு வாய்ப்பு தூரத்தில் தெரிந்தது. ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 121/6.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இனிமேல் விக்கெட்கள் விழுந்தால் மீள்வது கஷ்டம் என உணர்ந்த கானலியும் யான்சனும் கவனமாக அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்கள். 34 பந்துகளில் அரைசதம் கடந்தார் கானலி. ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியிலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த 25வது வீரர் இவர். இறுதியாக 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியையும் அவரே உறுதி செய்தார். ஆட்ட நாயகனும் அவரே.

பலவீனங்களே இல்லை என மெச்சப்பட்ட பஞ்சாப் அணி ஹோம் கிரவுண்டிலேயே தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபக்கம் கடந்த சீசனில் சொல்லப்பட்ட 'பலவீனமான மிடில் ஆர்டர்' எனும் குறைபாடு இந்த சீசனிலும் குஜராத் அணியை துரத்துகிறது. இது முதல் வாரம்தான். தவறுகளை சரிசெய்துகொள்ளவும் சரியான பிளேயிங் லெவனை தீர்மானிக்கவும் இந்த தடுமாற்றங்கள் நிச்சயம் உதவியாய் இருக்கும்.

பிரச்னைகளை பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு