கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஏப்ரல் 1 முதல் மாற உள்ள முக்கிய 5 விதிகள் எவை?

கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஏப்ரல் 1 முதல் மாற உள்ள முக்கிய 5 விதிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நாட்டில் சில விதிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இந்த ஆண்டும் அவ்வாறே நடக்கும்.

நாளை, அதாவது 2026 ஏப்ரல் 1 முதல், வருமான வரி, கைக்கு வரும் சம்பளம், ரயில்வே டிக்கெட், ஃபாஸ்டேக் மற்றும் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான சில நடைமுறைகளின் விதிகள் மாறும்.

ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் அந்த எட்டு விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. வருமான வரியின் புதிய விதிகள்

புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

முதலாவதாக வருமான வரி பற்றிப் பார்ப்போம். ஐடிஆர் (ITR)(வருமானவரி கணக்கு) தாக்கல் செய்யும் விதிகளில் மாற்றம் இருக்கும்.

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், 2025 அமலுக்கு வரப்போகிறது, இது 1961 ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.

ஏப்ரல் 1 முதல் தணிக்கை செய்யப்படாத (Non-audit) வரி செலுத்துவோர் ITR 3 மற்றும் ITR 4 தாக்கல் செய்வதற்கான தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை பழைய வரி முறையில் இரண்டு வெவ்வேறு ஆண்டுகள் இருந்தன.

ஒன்று நிதியாண்டு (வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு) மற்றும் மற்றொன்று மதிப்பீட்டு ஆண்டு (வரித் தாக்கல் செய்யப்படும் ஆண்டு), இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இப்போது புதிய வருமான வரிச் சட்டத்தில் இவை இரண்டும் நீக்கப்பட்டு, 'வரி ஆண்டு' (Tax Year) என்று மட்டுமே அழைக்கப்படும்.

அதாவது, 2026 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரையிலான காலம் 'வரி ஆண்டு 2026-27' என்று அழைக்கப்படும்.

2. கைக்கு வரும் சம்பளம் குறையும்

புதிய தொழிலாளர் சட்டத்தால் சிலரின் கைக்கு வரும் சம்பளத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய தொழிலாளர் சட்டத்தால் சிலரின் கைக்கு வரும் சம்பளத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.

ஏப்ரல் 1 முதல் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வரக்கூடும். இப்போது நிறுவனங்கள் மொத்த ஊதியத்தில் குறைந்தது 50 சதவீதத்தை அடிப்படை ஊதியமாக (Basic Pay) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உங்கள் அடிப்படை ஊதியம் மொத்த ஊதியத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், இதன் காரணமாக உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்பு அதிகரிக்கும் மற்றும் ஒவ்வொரு மாதமும் கைக்கு வரும் சம்பளம் குறைந்துவிடும்.

இதுவரை பல நிறுவனங்கள் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது அடிப்படை ஊதியத்தின் பகுதியை குறைவாக வைத்திருந்தன. பொதுவாக இது மொத்த ஊதியத்தில் 20 முதல் 40 சதவீதமாக இருந்தது.

இதன் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகியவற்றில் குறைந்த தொகையே டெபாசிட் செய்யப்பட்டது.

3. பணிக்கொடைத் தொகை அதிகரிக்கும்

புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்படுவதால், ஊழியர்களின் பணிக்கொடை தொகை அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்படுவதால், ஊழியர்களின் பணிக்கொடை தொகை அதிகரிக்கும்.

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வருவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தால், நாட்டில் பணிக்கொடை முறையும் மாறும்.

இப்போது ஊதியக் கட்டமைப்பில் அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ பங்கு அதிகரிக்கும், இதனால் பணிக்கொடை பலன் அதிகரிக்கும்.

ஊழியர்களுக்கு எச்ஆர்ஏ (வீட்டு வாடகை படி) கிடைக்கும், ஆனால் இதற்கு ஊழியர்கள் தங்கள் வீட்டு உரிமையாளரின் பான் கார்டு மற்றும் வாடகை செலுத்தியதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

4. ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலை உயரும்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதுவரை இதன் வருடாந்திர கட்டணம் 3,000 ரூபாயாக இருந்தது, இது ஏப்ரல் 1 முதல் 3,075 ரூபாயாக உயரும்.

இந்த வருடாந்திர பாஸ் வணிகம் அல்லாத வாகனங்களுக்கானது மற்றும் இதை சுமார் 1,150 சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தலாம்.

ஒருமுறை இந்த கட்டணத்தைச் செலுத்திய பிறகு, இதை ஒரு வருடம் வரை அல்லது 200 சுங்கச்சாவடி கடப்புகள் (Crossings) வரை பயன்படுத்த முடியும்.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் மாறும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் மாறும்.

5. ரயில்வே டிக்கெட் ரத்து கட்டணத்தில் மாற்றம்

ஏப்ரல் 1 முதல் ரயில்வே டிக்கெட் ரத்து விதிகள் மாறுகின்றன. இப்போது ரயில் புறப்படுவதற்கு 8 மணிநேரம் முதல் 24 மணிநேரம் முன்னதாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், 50 சதவீத கட்டணம் திரும்ப கிடைக்கும்.

24 முதல் 72 மணிநேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் 25 சதவீத தொகை பிடிக்கப்பட்டு மீதித் தொகை திருப்பித் தரப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட ரயில் புறப்படும் நேரத்திற்கு 72 மணிநேரத்திற்கு முன்பே டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு செலுத்திய தொகை அதிகபட்சமாக திரும்ப கிடைக்கும், ஒரு குறிப்பிட்ட ரத்து கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

8 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணம் எதுவும் திரும்ப கிடைக்காது.

இது தவிர, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் தங்கள் ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ள முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நகரங்களில் பயணிகளுக்கு இது வசதியாகக் கருதப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் வருமான வரி, பணிக்கொடை (கிராஜுவிட்டி), சம்பளம், ரயில்வே டிக்கெட் மற்றும் ஃபாஸ்டேக் தொடர்பான விதிகளில் மாற்றங்கள்.

பட மூலாதாரம், Getty Images

6. பான் கார்டு தொடர்பான புதிய விதிகள்

பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி ஆதார் கார்டை மட்டும் பிறந்த தேதிக்கான சான்றாகக் கருத முடியாது. இதற்காகப் பிறப்புச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் வழங்குவதும் கட்டாயமாகும்.

இது தவிர, இனி ஆதார் கார்டில் உள்ள பெயரின் அடிப்படையிலே பான் கார்டு பெயர் வழங்கப்படும்.

எனவே, ஆதார் தொடர்பான தகவல்கள் சரியாக இருப்பது அவசியம். பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்களும் ஏப்ரல் 1 முதல் புதியதாக இருக்கும்.

பிரச்னைகளை பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

7. கிரெடிட் ஸ்கோர் விதிகள் மாறும்

2026 ஏப்ரல் 1 முதல் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விதிகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.

வங்கிகள் கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு கடன் தொடர்பான தரவுகளை வாராந்திர அடிப்படையில் அறிக்கையாக வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

இதுவரை இந்த அறிக்கை 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கடன் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டும்.

அரசின் தங்கப் பத்திரம்  மீதான வரி விதிகளும் ஏப்ரல் 1 முதல் மாறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசின் தங்கப் பத்திரம் மீதான வரி விதிகளும் ஏப்ரல் 1 முதல் மாறுகின்றன.

8. சாவரின் கோல்டு பாண்ட் மீதான வரி?

ஏப்ரல் 1 முதல் சாவரின் கோல்டு பாண்ட் (SGB) மீதான வரி தொடர்பான விதிகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.

இப்போது ரிசர்வ் வங்கிக்கு பதிலாக இரண்டாம் நிலை சந்தை அதாவது பங்குச் சந்தையிலிருந்து இந்த பாண்டுகளை வாங்கியவர்களுக்கு 12.5 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) விதிக்கப்படும்.

ரிசர்வ் வங்கி மூலம் பாண்டுகளை வாங்கி அதன் முழு காலம் வரை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான வரம்பை நிர்ணயிக்கப் போகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான வரம்பை நிர்ணயிக்கப் போகின்றன.

வேறு என்ன மாறப்போகிறது?

வங்கிகளும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு வரம்புகளை அமல்படுத்தப் போகின்றன.

உதாரணமாக, எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

பந்தன் வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாகச் செய்ய முடியும். அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

போதுமான பணம் இல்லாத காரணத்தால் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி சில டெபிட் கார்டுகளில் பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது, இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

டிஜிட்டல் பேமெண்ட் விதிகளையும் ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.

ஏப்ரல் 1 முதல் யுபிஐ, கார்டு அல்லது வாலட் மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு சோதனை கடுமையாக்கப்படும்.

இனி ஓடிபி (OTP) மட்டும் போதாது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு (Two-factor authentication) கட்டாயமாக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு