'அம்மா கனவில் வந்து சொன்னதால் புற்றுநோயை கண்டறிந்து மீண்டேன்' - கனவுகள் எதிர்காலத்தை முன்னறிவிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கேட் போய்
- பதவி, உலக சுகாதாரம், பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அடெலின் கடந்த 2011-ஆம் ஆண்டு தன் வாழ்க்கையையே மாற்றும் ஒரு கனவு கண்டார்.
அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அவருடைய தாயார் இறந்திருந்தார், அதனால் அவர் மிகுந்த துயரில் இருந்தார்.
ஹாங் காங்கை சேர்ந்த அடெலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தாயார் கனவில் வந்துள்ளார்.
"'அம்மா உன்னை பார்த்துவிட்டேன், எப்படி இருக்கிறீர்கள்?' என கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு என் அம்மா, 'நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். கூடுமானவரை சீக்கிரமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்.' என்றார்" என்கிறார் அடெலின்.
தன் தாயார் கனவில் கூறியதை தீவிரமாக எடுத்துக்கொண்டு அடெலின் மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அவருக்கு ஆரம்பநிலை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருந்தது.
"நான் மிகவும் நன்றியுள்ளவள்,", "இல்லையெனில், நானே (பரிசோதனைக்கு) சென்றிருக்க மாட்டேன்."
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாசாரங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வரும் கனவுகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். பண்டைய எகிப்து, கிரேக்கம் மற்றும் பாபிலோனிய நாகரிகங்களில் கனவுகள் ஒன்றை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனம் கொண்டவை என நம்பப்படுகின்றன.
ஆபிரகாமிய மதங்களில் கனவுகள் கடவுளால் அனுப்பப்பட்ட "தரிசனங்கள்" என கருதப்படுகின்றன. சில பூர்வகுடி குழுக்களில் கனவுகள் 'ஆன்மாக்களிலிருந்து' கிடைக்கும் ஒருவகை உதவிகளாக கருதப்படுகின்றன.
கனவுகள் மூலம் முன்னோர் தங்களின் செய்திகளை அனுப்புவார்கள் என்ற பாரம்பரிய சீன நம்பிக்கை குறித்து தனக்கு தெரியும் என்றும், ஆனால் அது தனக்கே நடக்கும் என்று கற்பனைகூட செய்ததில்லை என்றும் அடெலின் கூறுகிறார்.
தற்போது, கனவுகள் மீதான இத்தகைய ஈர்ப்பு இணையத்திலும் பரவிவருகிறது. ஹாங் காங்கின் டிஸ்கஸ் (Disqus) எனும் இணைய கருத்துக்களம் வாயிலாக பயனர்கள் தங்கள் கனவுகளை பகிர்ந்துகொள்கின்றனர், அதே சமயம் நூற்றுக்கணக்கான ரெட்டிட் (Reddit) பயனர்கள் தங்கள் கனவுகளை ஆராய சாட்ஜிபிடியை பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
ஆனால், அடெலினின் கனவு நமக்கு சொல்வது என்ன? அக்கனவை நாம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்? இதுகுறித்து விஞ்ஞானிகளும் மனநல நிபுணர்களும் கூறுவது என்ன?
நாம் ஏன் கனவு காண்கிறோம்?
பட மூலாதாரம், Getty Images
நம் மூளைகள் கனவு காண்பதை விரும்பும். பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனின் நரம்பியல் விஞ்ஞானி அபிடெமி ஒடாய்கு-வின் கூற்றுப்படி, நாம் விரைவான கண் அசைவு (REM - rapid eye movement) உறக்கத்தில் இருக்கும்போது, நிச்சயமாகக் கனவு காண்கிறோம்
அதாவது, நாம் உறங்கும் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் கனவு காண்பதில் செலவிடுகிறோம்.
ஆழமான தூக்கம் இல்லாமல் நம்மால் கனவு காண முடியவில்லையென்றால், அடுத்த முறை நம்முடைய மூளை, நமக்கு வாழ்க்கை சார்ந்த அதிகப்படியான கனவுகளைக் காட்டுகிறது. இந்த நடைமுறை கனவு மீட்பு செயல்முறை (IM rebound) என அழைக்கப்படுகிறது.
"உடல் உண்மையில் கனவு காண விரும்புகிறது, அதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதை ஈடுசெய்கிறது." என விளக்குகிறார் அபிடெமி ஒடாய்கு.
நாம் ஏன் தூங்குகிறோம் என்பது இன்றளவும் அறிவியலுக்கு ஒரு புதிராகவே உள்ளது.
பொதுவாக, தூக்கம் மூளையை ஓய்வெடுக்கச் செய்து, அன்றைய நினைவுகளை ஒழுங்கமைக்க நேரம் அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
ஸ்கேன்கள் (மூளையை ஆய்வு செய்யும் மருத்துவ நுட்பங்கள்) நாம் உறங்கும்போது நமது மூளை செயல்படும் விதத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டுகின்றன, இதன் காரணமாக அந்த நேரத்தில் நாம் கனவுகளை வித்தியாசமாக அனுபவிக்கிறோம்.
நாம் கனவு காணும்போது, பகுத்தறிவுடன் சிந்திக்க உதவும் நமது முன் மூளைப் பகுதிகள் (frontal lobes) செயல்படுவதை நிறுத்திவிடுகின்றன.
அதே நேரத்தில், உணர்வுகளுடன் தொடர்புடைய லிம்பிக் மண்டலம் (மூளையின் ஆழமான பகுதியில் அமைந்துள்ள, உணர்ச்சிகள், நினைவாற்றல், நடத்தை மற்றும் உந்துதல் ஆகியவற்றை நிர்வகிக்கும் கட்டமைப்புகளின் தொகுப்பாகும்) மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குகிறது.
"நம் கனவுகள் பெரும்பாலும் மிகவும் விசித்திரமாகவும், பெரிதும் அர்த்தமில்லாதவையாகவும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்." என்கிறார் அபிடெமி ஒடாய்கு.
கனவு அடிப்படையில் முடிவு எடுக்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
நாம் கனவுகளில் காண்பவை, விழித்திருக்கும்போது சிறந்த முடிவுகளை எடுக்க நம்மைத் தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டு, தாங்கள் புகைப்பிடிப்பது போல் கனவு கண்டவர்கள், மீண்டும் அப்பழக்கத்துக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.
விவாகரத்து பெற்றவர்களிடமும் இதே விளைவு காணப்பட்டது. தங்கள் முன்னாள் துணைவரைப் பற்றிக் கனவு கண்டவர்கள், ஓராண்டு கழித்து அதிக மன ஆரோக்கியத்துடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
உண்மையில், நேர்மறைக் கனவுகளைக் காட்டிலும் எதிர்மறைக் கனவுகள் சில சமயங்களில் மக்கள் தங்கள் பிரச்னைகளை மிகவும் திறம்பட சமாளிக்க உதவக்கூடும் என்று அந்த இரண்டு ஆய்வுகளும் கண்டறிந்துள்ளன.
"நீங்கள் அந்த அனுபவத்தைப் புரிந்துகொண்டு, அதை ஆக்கப்பூர்வமான முறையில் கையாளுகிறீர்கள்," என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கனவு ஆய்வாளரும் மனநல நிபுணருமான டிலன் செல்டர்மேன்.
சிக்கல்களைத் தீர்க்கவும் கனவுகள் நமக்கு உதவக்கூடும். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில், பங்கேற்பாளர்களிடம் ஒரு புதிரைத் தீர்க்கச் சொன்னபோது, அதைப் பற்றிக் கனவு கண்டவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று கண்டறியப்பட்டது.
டிலன் செல்டர்மேனின் கூற்றுப்படி, ஒரு சிக்கலை ஆராய்வதற்கு மூளைக்கு அதிக நேரம் கிடைப்பதாலும், கனவுகள் அதனை மேலும் படைப்பாற்றலுடன் அணுக நமக்கு உதவுவதாலும் இது நிகழலாம்.
"கனவு, அந்தத் திசையில் ஒரு சிறிய தொடக்கத்தை மேற்கொள்ள அவர்களைத் தூண்டுகிறது," என்கிறார் செல்டர்மேன்.
கனவுகள் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா?
பட மூலாதாரம், Getty Images
கனவுகள் நமது மறைக்கப்பட்ட அல்லது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன என்பதல்ல இதன் பொருள். மாறாக, நாம் விழித்திருக்கும்போது அக்கறைகொள்ளும் அதே விஷயங்களில்தான், உறக்கத்திலும் நமது மனம் ஆர்வம் காட்டுகிறது என்பதே ஆகும்.
கனவுகள் காரணமாக தங்கள் துணையிடமிருந்து சிலர் பிரிவதை தான் பார்த்திருப்பதாகவும், ஆனால் அந்த நபர்கள் ஏற்கெனவே தங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்ததாகவும் செல்டர்மேன் கூறுகிறார்.
"அந்தக் கனவுகள் அவர்களுக்கு ஒரு சிறிய உந்துதலை அளித்தன. தங்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டதாக அவர்கள் உணர்ந்தார்கள், ஆனால் அது அவர்கள் ஏற்கெனவே நினைத்திருந்தவற்றுடன் ஒத்துப்போனது," என்று அவர் விளக்குகிறார்.
அப்படியானால், நாம் நினைத்துக்கூடப் பார்க்காத ஒருவரைப் பற்றிக் கனவு கண்டால் கவலைப்பட வேண்டுமா?
"நீங்கள் ஒரு மகிழ்ச்சியான மற்றும் அன்பான உறவில் இருக்கும்போது, ஒருநாள் இரவு வேறு ஒருவருடன் இருப்பது போல் கனவு கண்டால், அது பரவாயில்லை, அது இயல்பானதுதான்." என்கிறார் செல்ட்மேன்.
மேலும் அவர் கூறுகையில், "அதுகுறித்து நீங்கள் குற்ற உணர்வு கொள்ள தேவையில்லை. அதற்கு ஒன்றும் விசேஷமான அர்த்தம் இருக்க வேண்டியதில்லை." என்றார்.
எதிர்காலம் அறியும் மூளை கனவு மூலம் சேதி தருகிறதா?
பட மூலாதாரம், Dr. Abidemi Otaiku
நம் கனவுகள் தீர்க்கதரிசனமானவையாகத் தோன்றும்போதும், அவை நிஜ வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒத்துப்போகும் போதும், நாம் அவற்றுக்குக் கவனம் செலுத்தி அவற்றை நினைவில் கொள்கிறோம்.
"உங்களின் கனவுகள் நிஜ உலகத்துடன் பொருந்தாத பட்சத்தில், நீங்கள் அவற்றை மறந்துவிடுகிறீர்கள்," என்கிறார் அபிடெமி ஒடாய்கு.
"ஆனால், தீர்க்கதரிசனக் கனவுகளுக்கு 'உள்ளுணர்வு' (Interoception) எனப்படும் மற்றொரு காரணமும் இருக்கலாம்."
"சிலர் இதை நமது ஆறாம் அறிவு என்று அழைக்கிறார்கள்," என ஒடாய்கு விளக்குகிறார். "அடிப்படையில், இது உடலின் உள்நிலையை உணர்ந்து கொள்ளும் மூளையின் திறன் ஆகும்."
உள்ளுணர்வுத் தொடர்பில் ஈடுபடும் மூளையின் பகுதிகள், பெரும்பாலும் கனவு காணும்போது செயல்படும் பகுதிகளுடன் ஒத்திருக்கின்றன.
சில சமயங்களில் நமது கனவுகள் நோய்களைக் குறிப்பது போல் தோன்றுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
"இந்த விஷயங்களை விளக்கக்கூடிய ஒரு சாத்தியமான வழிமுறையாக இது தோன்றுகிறது," என்று ஒடாய்கு மேலும் கூறுகிறார்.
கெட்ட கனவு பற்றி நாம் எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
டாக்டர் ஒடாய்கு போன்ற நரம்பியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள், நமது கனவுகள் சில மூளை தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறிக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன.
"உங்களுக்கு எவ்வளவு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு மறதி நோய் மற்றும் பர்கின்சன் நோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும்," என்கிறார் அவர்.
இது குறித்து அவரிடம் மூன்று கோட்பாடுகள் உள்ளன. முதலாவதாக, கெட்ட கனவுகள் இந்த நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
இரண்டாவதாக, கெட்ட கனவுகளே உடல்நலக் குறைவுக்கு வழிவகுக்கலாம். மூன்றாவதாக, கெட்ட கனவுகள் மற்றும் இந்த நோய்கள் ஆகிய இரண்டுமே நமது மரபணுக்கள் போன்ற ஒரு பொதுவான காரணத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இவற்றில் எது உண்மை என்பதைக் கண்டறிய மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
இந்த முடிவுகளால் நாம் ஏமாற்றம் அடையக்கூடாது என்றும், மாறாக இதை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்றும் ஒடாய்கு கூறுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், மன அழுத்தத்தைக் குறைப்பது, நன்றாகத் தூங்குவது மற்றும் தூங்குவதற்கு முன் திகில் திரைப்படங்களைப் பார்க்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் உதவியாக இருக்கும்.
கடுமையான பாதிப்புகளுக்கு சில சிகிச்சைகள் உள்ளன. பிம்ப ஒத்திகை சிகிச்சை (Image rehearsal therapy) என்பது, நோயாளிகள் தங்களுக்குத் திரும்பத் திரும்ப வரும் கெட்ட கனவுகளின் முடிவை மாற்றிப் பயிற்சி செய்வதை உள்ளடக்கியது.
பிரசோசின் என்ற ரத்த அழுத்த மருந்து கெட்ட கனவுகளைத் தடுக்கக்கூடும், அதே நேரத்தில் இயல்பான கனவுகள் தொடரும்.
"கெட்ட கனவுகளுக்கு சிகிச்சை அளிப்பது நமது ஆரோக்கியத்தில் உடனடியான, மேலும் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்று ஒடாய்கு மேலும் கூறுகிறார்.
கனவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
கனவுகளில் உண்மையான அர்த்தத்தைத் தேடுவது தவறான வழிகாட்டுதலாக அமையக்கூடும், ஏனெனில் அது ஒருவரின் தனிப்பட்ட சூழலைப் புறக்கணிக்கிறது என்று செல்டர்மேன் எச்சரிக்கிறார்.
"ஒரு பல் மருத்துவருக்கு ஷார்க் (Shark) என்றால் என்ன அர்த்தமோ, அது ஒரு கடல்சார் உயிரியலாளருக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்" என்று அவர் நம்புகிறார்.
இருப்பினும், கனவுகளில் தோன்றும் கருப்பொருள்களுக்குக் கவனம் செலுத்துவது, நம்மை நாமே நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று அவர் கூறுகிறார்.
அவர் கூறுகையில், "இவ்வுலகில் இனி இல்லாத ஒரு சிறப்புமிக்க நபரைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தில் நீங்கள் அடைய விரும்பும் ஒரு வேலையைப் பற்றியோ நீங்கள் திரும்பத் திரும்பக் கனவு காணலாம்." என்றார்.
இந்த கருப்பொருள்களை ஆராய்வது, நம்மைப் பற்றியும் நமது உறவுகளைப் பற்றியும் ஒரு சிறந்த புரிதலை நமக்குத் தரும். ஏனென்றால், இவைதான் நாம் அதிகம் கனவு காணும் விஷயங்கள்.
"கனவுகளுக்கு ஏதேனும் முக்கியத்துவம் உண்டு என்றால், அது பெரும்பாலும் நமது சமூக வாழ்வில்தான் பிரதிபலிக்கிறது," என்கிறார் செல்டர்மேன்.
தான் இப்போது தன் கனவுகளுக்கு அதிக கவனம் செலுத்துவதாகவும், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகளாக அவற்றைப் பயன்படுத்துவதாகவும் அடெலின் கூறுகிறார்.
அவர் கூறுகையில், "நம் கனவுகள் என்ன செய்தியை உணர்த்துகின்றன என்பதைக் கண்டறிய, நாம் நமது உள்ளுணர்வை நம்ப வேண்டும். உங்களுக்குள்ளேயே பாருங்கள், விடையைக் காண்பீர்கள்," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை