உரிமையாளர் மாற்றம் ஆர்சிபி அணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா? காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், யோமஹேஷ்
- பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17 சீசன்களாக கோப்பை வெல்லவேண்டும் என்ற கனவில் இருந்தவர்களுக்கு 2025 ஒரு பெரிய பதில் கொடுத்திருக்கிறது. 18-வது சீசனில் தங்கள் முதல் கோப்பையை வென்றுவிட்டது ஆர்சிபி. அந்த ரசிகர்களின் நீண்ட கால ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், இந்த சீசன் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு வேறானது. அவர்களுக்கு முன் இருக்கும் கேள்விகள் வேறானது.
கோப்பைகள் வெல்வது ஒரு விஷயம். அதைத் தக்கவைப்பது என்பது முற்றிலும் வேறானது. இத்தனை ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அது இரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. அப்படியொரு கடினமான விஷயத்தை ராயல் சேலஞ்சர்ஸ் செய்யுமா என்பது அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்தே அமையும்.
இம்முறை ஒரு அணியாகவும் சரி, தனிப்பட்ட வீரர்களின் பார்வையில் இருந்தும் சரி அவர்களின் அணுகுமுறை வேறு மாதிரியானதாக இருக்கவேண்டும். கோப்பை வென்றபோது எப்படி இருந்ததோ, அதுபோலவே இம்முறையும் இருக்க முடியாது. முன்பே சொன்னதுபோல், கோப்பையை தக்கவைப்பது இன்னும் கடினமானது.
இந்த சவாலை ஏற்று அதற்கேற்ப சோபிக்கக் கூடிய அணியாக ஆர்சிபி இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்.
புதிய அணி கொடுக்கும் நம்பிக்கை
2024 வரையிலான ஆர்சிபி பெரும்பாலும் நட்சத்திர வீரர்களை நம்பியே இயங்கியது. ஆனால், கடந்த ஆண்டு கட்டமைக்கப்பட்ட அணி முற்றிலும் வேறானதாக இருந்து. அதுவொரு அணியாக செயல்பட்டது. பல முன்னணி வீரர்களை உள்ளடக்கிய மையம் (core) ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த வீரர்கள் அவர்களின் நாளில் தாங்களாகவே போட்டியை மாற்றி வெற்றியைத் தேடித் தரக்கூடியவர்களாக இருந்தனர். அதுதான் அவர்கள் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தது.
விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார், குருணால் பாண்டியா, ஜாஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் என்று அப்படி தங்களின் நல்ல நாளில் போட்டியை மாற்றிவிடக்கூடிய வீரர்கள் தற்போது ஆர்சிபி அணியில் நிறைந்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் இது விராட், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஓரிரு வீரர்களின் தோள்களில் விழுந்துவிடும். அது அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும். ஆனால், அது போன சீசன் நடக்கவில்லை.
விராட் வழக்கம்போல் போன சீசனும் சிறப்பாக விளையாடினார். இன்னொரு முறை 600+ ரன்கள் அடித்தார். ஆனால், அவருக்குப் பிறகும் பல வீரர்கள் ஆர்சிபிக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தனர். சால்ட் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். நிதானமான தன்மை கொண்ட கேப்டன் பட்டிதார் நிலைத்தன்மை தந்தார். கடைசி கட்டத்தில் எதிரணி பௌலர்களை அச்சுறுத்தும் அதிரடி வீரர்கள் டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், ஜித்தேஷ் ஷர்மா ஆகியோரும் போட்டிகளை மாற்றிக்கொடுத்தார். இதில் குருணால் பாண்டியாவையும் மறந்துவிட முடியாது.

பட மூலாதாரம், Getty Images
இப்போது கோலியின் மீதான நெருக்கடி குறைந்துவிட்டது. அந்த அணியின் மீதான பார்வையும் மாறிவிட்டது. அவர்கள் கண்டுவந்த ஏமாற்றமும் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் அந்த அணிக்கு இருக்கிறது என்று நான் நம்புவதற்கான ஒரு முக்கியக் காரணம் இது. இன்னொரு முக்கியக் காரணம் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்.
கடந்த சீசன் பட்டிதார் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவரைச் சுற்றி எந்த ஆரவாரமும் இல்லை. எந்த விமர்சனங்களும் இல்லை. அதுவே ஒருவகையில் நெருக்கடிகளைக் குறைத்துவிட்டது. கோலி, புவனேஷ்குமார், குருணால் என சீனியர் வீரர்கள் அவரைச் சுற்றி இருந்தது அவருக்கும் ஒரு வகையில் உதவியது. கடந்த சீசனில் பல நல்ல முடிவுகளை அவர் எடுத்தார்.
சொல்லப்போனால் சீசன் தொடக்கத்தில் ஒருசில முடிவுகள் தவறானதைப் பார்க்க முடிந்தது. ஆனால், சீசன் போகப் போக அதை சரிசெய்துகொண்டார். அந்த பண்பு அவர் இம்முறை இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு டி20 லீகில் கேப்டனின் பங்களிப்பு என்பது மிகமிக முக்கியம். பட்டிதார் அதை சிறப்பாக செய்கிறார்.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images
பலமான பேட்டிங் யூனிட்
ஆர்சிபி அணியின் மிகப் பெரிய பலம் அவர்களின் பேட்டிங். முன்பே சொன்னதுபோல் பல வீரர்கள் அவர்களின் வெற்றிக்குப் பங்களிக்கிறார்கள். அதனால், ஓரிரு வீரர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு இப்போது இல்லை.
விராட் கோலி, ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெபர்ட், குருணால் பாண்டியா என நீண்ட, பலமான, சீரான பேட்டிங் யூனிட் வைத்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ். முன்பெல்லாம் ஒற்றை ஃபினிஷரை நம்பியிருந்த அந்த அணி இப்போது அந்த இடத்தில் 4 வீரர்களைக் கொண்டிருக்கிறது.
இந்த பேட்டிங் யூனிட் பலம் என்றால், இந்த வீரர்களுக்கு மாற்றாகவும் நல்ல பலமான வீரர்களை வைத்திருக்கிறார்கள். வெங்கடேஷ் ஐயர் இந்த சீசனுக்கான ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். கடந்த முறை படிக்கலுக்கு காயம் ஏற்பட்டது போன்ற ஒரு சூழ்நிலை வந்தால், அது இம்முறை அவர்களை பாதிக்காது. அதேபோல், வெளிநாட்டு பேட்டர்களுக்கு பெத்தெல் நல்ல மாற்றாக இருப்பார். டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடியதை யாரால் மறந்துவிட முடியும்! ஒருவேளை அந்த உலகக் கோப்பை போலவே சால்ட் தடுமாறினால், பெத்தெல் அவருக்கு சரியான மாற்றாக இருப்பார்.
இப்படியொரு முழுமையான பலமான பேட்டிங் யூனிட்டை அந்த அணி நிர்வாகம் கட்டமைத்திருக்கிறது. அது இந்த ஆண்டும் அவர்களுக்குக் கைகொடுக்கப் போகிறது.
பந்துவீச்சில் இருக்கும் சிறு பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டில் ஒரு சொல்லாடல் இருக்கிறது: 'பேட்டிங் போட்டிகளை வென்று கொடுக்கும். பௌலிங் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுக்கும்'.
ஆர்சிபி கோப்பை வென்றதற்கும் கூட அந்த பலமான பேட்டிங் யூனிட்டை விட அவர்களின் பந்துவீச்சு தான் முக்கியக் காரணம். பவர்பிளேவில் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் இருவரும் தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அங்கேயே எதிரணிகளைத் திணறடித்தார்கள். டெத் ஓவர்களிலும் நல்ல தாக்கம் ஏற்படுத்தினார்கள். புவி, தன்னுடைய யார்க்கர்களால் மிரட்டினார். ஹேசில்வுட் தன் பௌன்சர்களால் பயமுறுத்தினார். இவர்கள் போக, குருணால், சுயாஷ் ஆகியோரும் சீரான பங்களிப்பைக் கொடுத்து அசத்தினர்.
கடந்த சீசன் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக இருந்த ஹேசில்வுட்டின் ஃபிட்னஸ் மீது இம்முறை கேள்விகள் இருக்கிறது. அவர் அணியோடு இணைந்துவிட்டாலும் ஆரம்ப கட்டப் போட்டிகளில் ஆடுவாரா என்ற கேள்விக்குறி இருக்கிறது. இது அவர்களுக்குப் பாதகமாக இருக்கலாம்.
அதேசமயம் அவரைப் போன்ற நல்ல உயரமான ஜேக்கப் டஃபியை 'பேக் அப்' வீரராக வைத்திருக்கிறார்கள். அவரும் ஹேசில்வுட் போல் நன்கு உயரமான ரிலீஸ் கொண்டவர். நன்கு பௌன்ஸ் வீசக்கூடியவர். அதே அனுபவமும், துல்லியமும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
இன்னொருபக்கம் யஷ் தயால் இந்த சீசனில் ஆடப்போவதில்லை. இதை முன்பே கணித்து அதற்கு ஏற்ப இடது கை வேகப்பந்துவீச்சாளர் மங்கேஷ் யாதவை ஏலத்தில் வாங்கியிருக்கிறார்கள். அவருக்கு முதல் ஐபிஎல் தொடர். அதனால், அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இப்படி அந்த அணியின் பந்துவீச்சின் மீது ஒருசில கேள்விகள் இருக்கின்றன. அவை அவர்களின் கோப்பை வாய்ப்பில் பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.
இந்த பந்துவீச்சு பிரச்னைகள் சீசன் தொடக்கத்தில் ஆர்சிபிக்கு சிக்கலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை ஹேசில்வுட் சீக்கிரம் முழு ஃபிட்னஸுக்குத் திரும்பிவிட்டால், மங்கேஷ் யாதவ் நன்கு செயல்படத் தொடங்கிவிட்டால் அவர்கள் மீண்டும் சிறப்பாக செயல்படத் தொடங்கலாம்.
அந்த முழு பலம் கொண்ட பந்துவீச்சும், நீண்ட பலம் வாய்ந்த பேட்டிங்கும் இன்னொரு கோப்பையை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லலாம்.

உரிமையாளர் மாற்றம் தாக்கம் ஏற்படுத்துமா?
நடப்பு சாம்பியன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்னொரு வகையிலும் ஒரு புதிய பயணத்தை எதிர்நோக்கியுள்ளது. புதிய உரிமையாளர்களின் கீழ் அந்த அணி பங்கெடுக்கப்போகிறது.
இது அணியின் செயல்பாட்டை பாதிக்குமா, கிரிக்கெட் சார்ந்த அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்த சீசன் அது எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே நம்புகிறேன்.
ஏனெனில், வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் பயிற்சியாளர் குழுவுக்குக் கீழ் தான் இருக்கப்போகிறார்கள். அந்தக் குழுவில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே ஆட்கள் தான் இந்த புதிய சீசனுக்கும் தொடர்கிறார்கள்.
ஆர்சிபி அணியின் புதிய உரிமையாளர்களில் ஒரு தரப்பு தான் இங்கிலாந்தின் தி 100 தொடரில் இருக்கும் லண்டன் ஸ்பிரிட் அணியின் உரிமையாளர்கள். அந்த அணியின் பயிற்சியாளர் குழு ஆர்சிபி பயிற்சியாளர் குழுதான். ஆகவே, அதில் இப்போதைக்கு எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
அதனால், வீரர்களின் அணுகுமுறையில், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. கடந்த ஆண்டைப் போன்ற ஒரு செயல்பாட்டை இந்த ஆண்டும் ஆர்சிபி-யிடம் எதிர்பார்க்கலாம் என்றே நான் கருதுகிறேன்.
(கட்டுரையாளர் யோ மஹேஷ் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































